தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் புதிய கட்டடங்கள், மருத்துவ உபகரணங்களை தொடங்கி வைத்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, 


"தமிழகத்தில் பன்றிக் காய்ச்சலால் (எச்1என்1) பாதிக்கப்பட்டவர்களுக்கும், பருவநிலை மாற்றங்களால் ஏற்படுகிற காய்ச்சலுக்கும் தீவிர சிகிச்சை என்கிற வகையில் 11 நாட்களுக்கு முன்பு ஒரே நாளில் ஆயிரம் இடங்களில் காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டன.


தஞ்சாசூரில் பாதிப்பு:


இதேபோல் தஞ்சாவூர் மாவட்டத்தில் 11 நாள்களில் 1,488 காய்ச்சல் கண்டறியும் முகாம்கள் நடத்தப்பட்டன என்பதும் குறிப்பிடத்தக்கது. இதேபோல் 915 பள்ளிகளில் காய்ச்சல் கண்டறியும் முகாம்கள் நடத்தப்பட்டு மாணவர்களுக்கு காய்ச்சல் உள்ளதா என்று கண்டறியப்பட்டது.


இதன்படி இதுவரை 68,848 பேருக்கு காய்ச்சல் கண்டறியும் பணி நடைபெற்றது. மாவட்டத்தில் பன்றிக் காய்ச்சலுக்கு 17 பேர் பாதிக்கப்பட்டனர். இவர்களில் ஒருவர் மட்டுமே மருத்துவமனையில் உள்ளார். மற்றவர்கள் குணமடைந்து நலமுடன் இருக்கின்றனர். மாவட்டத்தில் உயிரிழப்பு பூஜ்ஜிய நிலையில் உள்ளது.


தமிழ்நாட்டில் பாதிப்பு


தமிழ்நாட்டில் 380 பேர் பன்றிக் காய்ச்சால் பாதிக்கப்பட்டுள்ளனர். மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றவர்கள் 17 பேர். மீதமுள்ளவர்கள் வீடுகளிலும், தனியார் மருத்துவமனைகளிலும் தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் 3 - 4 நாள்கள் தனிமைப்படுத்திக் கொண்டாலே போதுமானது. ஒரு குடும்பத்தில் யாருக்காவது காய்ச்சல் வந்தாலும், அவர்கள் முகக்கவசம் அணிவது மிகவும் அவசியம்.


பருவநிலை மாற்றங்களால் ஏற்படும் காய்ச்சல் இருப்பதால், தமிழ்நாடு முழுவதும் இம்முகாம்களை நடத்துமாறு முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார். இதன்படி, நாள்தோறும் ஆயிரம் முதல் ஆயிரத்து 500 முகாம்கள் கடந்த 11 நாள்களாக நடந்தது.


90 சதவீதம் பேருக்கு எதிர்ப்பு சக்தி:


பள்ளிகளில் 12 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போட வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியதன் படி அப்பணிகளும் நடந்து வருகிறது. இதன் விளைவாக தமிழகத்தில் 90 சதவீதம் பேருக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்துள்ளது." இவ்வாறு அமைச்சர் கூறினார்.


பன்றிக்காய்ச்சலின் அறிகுறிகள்:




யாருக்கேனும் சளி, இருமல், காய்ச்சல் இருந்தால், அது சாதாரண காய்ச்சலாக இருக்கலாம் அல்லது வைரஸ் காய்ச்சலாகவும் இருக்கலாம். மக்களால் அதை கண்டறிய முடியாது. ஆரம்ப நிலையில் மருத்துவர்கள் கண்டறிய உதவும் வகையில், பன்றிக்காய்ச்சல் அறிகுறிகளை ஏ,பி,சி என மூன்று வகையாக பிரித்துள்ளோம்.


லேசானகாய்ச்சல், சளி, இருமல், தொண்டைவலி இருந்தால் அதை எனவும், தொடர்ந்து அதிக காய்ச்சல், தொண்டை வலி இருந்தால் அதை பி எனவும், காலையில் லேசான காய்ச்சல் இருந்து, மாலையில் திடீரென காய்ச்சல் அதிகமாவது, மூச்சுத் திணறுவது, கடுமையான சோர்வு ஆகிய அறிகுறிகள் இருந்தால் அதை சி எனவும் பிரித்துள்ளோம்.


அறுவுறுத்தல்:


இதில், ஏ,பி வகை பாதிப்புஉள்ளவர்கள் பரிசோதனை மேற்கொள்ளத் தேவையில்லை. பன்றிக்காய்ச்சல் பாதிப்புக்குள்ளானவர்களுக்கு ‘டாமி ஃபுளூ’ மாத்திரைகளை முன்கூட்டியே அளித்தால்தான் பலனளிக்கும். எனவே, பாதிப்பு இருக்கிறது என சந்தேகப்படும் நபர்கள் பி பிரிவில் உள்ளபோதே, அவர்களுக்கு ‘டாமி ஃபுளூ’ மாத்திரைகளை அளிக்குமாறு மருத்துவர்களுக்கு அறிவுறுத்தி உள்ளோம் என்று தெரிவித்தனர்.