தஞ்சாவூர் காந்திஜி சாலையில் உள்ள பூமாலை வணிக வளாகத்தில் காதி கிராப்டில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு மற்றும் தீபாவளியை ஒட்டி சிறப்பு விற்பனையை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தொடக்கி வைத்தார். ஆண்டுதோறும் காந்தி ஜெயந்தி மற்றும் தீபாவளியை ஒட்டி காதி கிராப்டில் சிறப்பு விற்பனை தொடங்கப்படும். அதேபோல் இந்தாண்டும் நேற்று காந்தி ஜெயந்தியை ஒட்டி சிறப்பு விற்பனையை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பேசுகையில், தஞ்சை மாவட்டத்திற்கு கதர் விற்பனை இலக்காக இந்த ஆண்டு ரூ.58 லட்சத்து 22 ஆயிரம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சிறப்பு விற்பனைக்கு கதர், பருத்தி, பட்டு, பாலியஸ்டர் ஆகியவற்றுக்கு 30 சதவீதம் தள்ளுபடி அளிக்கப்படுகிறது. இதேபோல் உல்லனுக்கு 20 சதவீதமும் சிறப்பு தள்ளுபடி வழங்கப்படுகிறது. பொதுமக்களும் கதர் ஆடைகளை வாங்கி தீபாவளி பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாட வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
கைத்தறித்துணி விற்பனையை அதிகரிக்கச் செய்வதன் மூலம் நெசவாளர்கள் வாழ்வில் ஒளியேற்ற முடியும். தமிழக நெசவாளர்கள் தரமான, அதேசமயம் விலை குறைந்த கதர் மற்றும் கைத்தறித் துணிகளை கண்கவரும் வடிவமைப்புடன் நெய்வதில் வல்லவர்கள். வர்த்தகப்போட்டி காரணமாக, பல கோடி மதிப்பிலான காதி மற்றும் கைத்தறி துணிகளை விற்பனை செய்வதில் சிரமம் உள்ளது.