தஞ்சாவூர் புன்னைநல்லுார் மாரியம்மன் கோயில், தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்திற்கு உட்பட்ட 88 கோயில்களில் இக்கோயிலும் ஒன்றாகும். இக்கோயிலில், முத்துமாரியம்மன் சன்னதி அருகில், துர்க்கை அம்மனுக்குத் தனி சன்னதி உள்ளது. இரு அம்மன்களும், அருகருகே எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலிப்பது, இக்கோவிலின் தனிச்சிறப்பு. அம்பாள் சன்னதியின் வலப்புறம் பேச்சியம்மன் சன்னதி உள்ளது. சிறு கோயிலுள் குடிகொண்டிருந்த முத்துமாரியம்மனுக்கு, சோழர் காலத்தில் சோழ மன்னர்களால் சிறிய கோவிலாக அமைக்கப்பட்டது. பின்னர் மராட்டிய மன்னர்களால் மூலஸ்தான கோபுரம் மற்றும் ராஜகோபுரத்துடன் பிரம்மாண்ட கோவில் எழுப்பப்பட்டது. தற்போது இக்கோயில், இந்து சமய அறநிலையத் துறையின் பராமரிப்பில் உள்ளது. ஜூலை 2014 ஆம் இந்தியக் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி இக்கோயிலுக்கு வருகை தந்து முத்துமாரியம்மனையும், துர்கையையும் வழிபட்டுச் சென்றுள்ளார்.
இது குறித்து அலுவலர் கூறுகையில், தஞ்சாவூர் புன்னைநல்லுாரி மாரியம்மன் கோயிலில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து தேங்காய் உடைத்து, தரிசனம் செய்கிறார்கள். இதனால் தினந்தோறும் சராசரியாக சுமார் 5 ஆயிரம் பேர் தேங்காய்களை வழிபாட்டிற்காக உடைக்கின்றார்கள். தேங்காய்களை உடைக்கும் போது, அதிலுள்ள தண்ணீர் கீழே விழுந்தும், சிதறியும் அப்பகுதி முழுவதும் வீணாகி விடுகிறது. சில நேரங்களில் வழுக்கி விழுவதற்கு வாய்ப்புள்ளது. மேலும் ஒரு விதமான அசுத்த நாற்றம் வருவதால், கோயிலுக்குள் வரும் பக்தர்கள் முகத்தை சுழித்த கொண்டு செல்வார்கள். இதனை கருத்தில் கொண்டு, நவீன முறையில், இயந்திரம் கண்டுபிடிக்கப்பட்டு, இந்தியாவிலேயே முதன் முறையாக, தஞ்சாவூர் புன்னைநல்லுார் மாரியம்மன் கோயிலில் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த இயந்திரத்தில் தேங்காய்களை உடைக்கும் போது, சரியான கோணத்தில் உடைப்பதால், தேங்காயில் உள்ள தண்ணீர் இயந்திரத்திற்குள் விழுந்து, பின்னர் குளிரூட்டப்பட்ட இயந்திரம் மூலம் வெளியிலுள்ள பைப்பில் வருகிறது. பக்தர்கள், பைப்பில் வரும் தண்ணீரை பிடித்து பருகலாம். தேங்காய்களை சரியான கோணத்தில் உடைப்பதால், அதனை ஏலம் விடலாம். இயந்திரத்தில் சேகரிக்கும் தேங்காய் தண்ணீர், சுமார் ஒரு வாரம் வரை கெட்டுப்போகாமல், தரமான வகையில் இருக்கும். ஆனால் தற்போது, 3 நாட்கள் மட்டுமே வைத்து பயன்படுத்த அறிவுறுத்தியுள்ளோம். இக்கோயிலில் வைக்கப்பட்டுள்ள இயந்திரத்தை, மேலும் பல மாற்றங்கள் செய்து, பக்தர்கள் தரிசனம் செய்து விட்டு வெளியில் வரும் போது, வழங்குவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார். இந்த நிகழ்ச்சியில் இந்திய உணவு பயிர் பதன கழக இயக்குனர் அனந்த ராமகிருஷ்ணன், கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர்,தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா போன்ஸ்லே மற்றும் இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையர் கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.