மத்திய பா.ஜ.க. அரசின் மூன்று புதிய விவசாய சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி டெல்லியில் போராடும் விவசாய சங்கங்கள் இணைந்து அழைப்பு விடுத்த பாரத் பந்த் முழு அடைப்புப் போராட்டம் இன்று காலை 6 மணிக்கு நாடு முழுவதும் தொடங்கியது. இன்றைய போராட்டங்களின் போது அசம்பாவிதங்களைத் தடுக்க அனைத்து மாநிலங்களிலும் பலத்த காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.



விவசாய துறையில் சீர்திருத்தம் செய்வதற்காக மூன்று விவசாய சட்டங்களை மத்திய அரசு கடந்த ஆண்டு கொண்டு வந்தது. இந்த மூன்று விவசாய சட்டங்களும் விவசாயிகளின் நலன்களுக்கு எதிரானது. இந்த சட்டங்கள் கார்ப்பரேட்டுகளுக்கு விவசாய விளைநிலங்களை தாரைவார்த்துவிடும் என கூறி விவசாயிகள் நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் பஞ்சாப், ஹரியானா, உ.பி, ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் டெல்லி எல்லைகளில் அமர்ந்து தொடர் முற்றுகைப் போராட்டம் நடத்தி வருகின்றனர். கடந்த 10 மாதங்களாக டெல்லி எல்லைகளில் கடும் குளிர், வெயில், மழைக்கு இடையே இப்போராட்டம் இடைவிடாமல் நடைபெற்று வருகிறது. 



மத்திய அரசு போராடும் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால் இந்த பேச்சுவார்த்தைகள் அனைத்தும் தோல்வியை தழுவின. மத்திய அரசானது, விவசாய சட்டங்களில் திருத்தம் கொண்டுவர தயார் என்கிறது. போராடும் விவசாயிகளோ சட்டங்களை முழுமையாகத் திரும்பப் பெற வேண்டும் என்கின்றனர். இதனால் உச்சநீதிமன்றம் தலையிட்டு விவசாய சட்டங்களை நிறுத்தி வைக்க உத்தரவிட்டது. இதுவரை நடந்த விவசாயிகள் போராட்டத்தில் பல்வேறு காரணங்களால் 600 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். டெல்லியில் குடியரசு தினத்தன்று விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணியில் மிகப் பெரிய வன்முறை வெடித்தது. அப்போது போலீசாருக்கும் விவசாயிகளுக்கும் இடையே கடும் மோதல் வெடித்தது. இதேபோல் ஹரியானாவிலும் விவசாயிகள் நடத்திய போராட்டங்களை போலீசார் மிக கடுமையாக ஒடுக்கியது சர்ச்சையானது.




இந்நிலையில் விவசாயிகளின் பாரத் பந்த் இப்போராட்டத்துக்கு பெரும்பாலான எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்து வருகின்றன. போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக நாடாளுமன்றத்தையும் எதிர்க்கட்சிகள் முடக்கின. மேலும் விவசாயிகளுக்கு ஆதரவாக பல்வேறு கட்டப் போராட்டங்களும் இதுவரை நடத்தப்பட்டன. கடந்த மார்ச் 26 ஆம் தேதி நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது. அதன் அடுத்த கட்டமாக இன்று 2 ஆவது முறையாக மீண்டும் பாரத் பந்த் போராட்டம் அறிவிக்கப்பட்டது. இந்த போராட்டத்துக்கும் அனைத்து எதிர்க்கட்சிகளும் முழு ஆதரவு தெரிவித்துள்ளன. இன்று காலை 6 மணிக்கு பாரத் பந்த் முழு அடைப்புப் போராட்டம் தொடங்கியது. 




தமிழகத்திலும் காலை 6 மணிக்கு பாரத் பந்த் போராட்டம் தொடங்கியது. இப்போராட்டத்துக்கு ஆளும் திமுக, காங்கிரஸ் கூட்டணியில் இடம்பெற்றுள்ள அனைத்து கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளன. தமிழகத்தில் பல இடங்களில் சாலை மற்றும் ரயில் மறியல் போராட்டங்களை நடத்த ஆளும் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள இடதுசாரி கட்சிகள் அழைப்பு விடுத்துள்ளன. இன்று போராட்டம் நடத்தும் விவசாயிகளுடன் திமுக இணைந்து நிற்கிறது என அக்கட்சியின் மாநில விவசாய பிரிவு செயலாளர் என்.கே.கே.பெரியசாமி தெரிவித்துள்ளார்.




இந்த சூழலில் மயிலாடுதுறை மாவட்டத்தில் மத்திய அரசை கண்டித்து விவசாயிகள், திமுக, விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்டோர் ரயில் தண்டவாளத்தில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். மயிலாடுதுறை அருகே மாப்படுகை ரயில்வே கேட் ரயில் தண்டவாளத்தில் அமர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், கட்சி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி,திமுக விடுதலை சிறுத்தைகள் தொமுச,சிஜடியு தொழிற்சங்கங்கள் சேர்ந்தவர்களும் விவசாய சங்க பிரதிநிதிகளும் திருநங்கைகள் உள்ளிட்டோர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அனைத்து விவசாய போராட்ட ஒருங்கிணைப்புக் குழு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் துரைராஜ் தலைமையில் நடைபெறும் சாலை மறியல் போராட்டத்தில் 200க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த மறியல் போராட்டத்தால் மயிலாடுதுறை கல்லணை சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் மாப்படுகை ரயில் தண்டவாளத்தில் அமர்ந்து இந்த மறியல் போராட்டம் நடைபெற்றதால் மயிலாடுதுறை இருந்து விழுப்புரம் வழியாக சென்னை செல்லும் ரயில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. இதேபோன்று சீர்காழி புதிய பேருந்து நிலையம் எதிரே விவசாயிகளுக்கு ஆதரவாக அனைத்து கட்சியினர் சிதம்பரம் - மயிலாடுதுறை தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து  சாலைமறியல் ஈடுப்பட்டனர். அதனைத் தொடர்ந்து சாலைமறியல் ஈடுபட்டவர்களை கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர்.