தமிழகத்தில் வரும் நவம்பர் ஒன்றாம் தேதி முதல் ஒன்றாம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உச்சநீதிமன்ற நெறி முறைகளை கடைபிடிக்கும் பொருட்டு பள்ளி நிறுவன வாகனங்களை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தஞ்சாவூர் மாவட்டம், ஆயுதப்படை மைதானத்தில் தஞ்சாவூர் வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் உச்சநீதிமன்ற நெறி முறைகளை கடைபிடிக்கும் பொருட்டு பள்ளி நிறுவன வாகனங்களை ஆய்வு செய்த மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
தமிழக முதல்வர், பள்ளி செல்லும் மாணவ மாணவிகளை ஏற்றிச் செல்லும் பள்ளி நிறுவன வாகனங்கள் உச்சநீதிமன்ற நெறி முறைகளை கடைபிடித்து செயல்படுகிறதா என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ள அறிவுறுத்தி உள்ளார். அதன் அடிப்படையில் நமது மாவட்டத்தில் தஞ்சாவூர் வட்டார அலுவலகத்திற்குட்பட்ட எல்லையில் உள்ள 57 பள்ளிகளில் 325 வாகனங்களும், மற்றும் பட்டுக்கோட்டை பகுதி அலுவலகக்க்குட்பட்ட எல்லையில் உள்ள 44 பள்ளிகளில் 238 வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டது. ஆய்வு செய்ப்பட்ட வாகனங்களில் வாகனத்திற்கு நடப்பிலுள்ள அனுமதி சீட்டு, நடப்பிலுள்ள தகுதிச்சான்று, நடப்பிலுள்ள காப்பு சான்று, நடப்பிலுள்ள புகை சான்று, நடப்பு வரி சான்று, வாகனத்தில் பொருத்தப்பட்டுள்ள வேக கட்டுப்பாட்டு கருவி பயன்பாடு நிலை, வாகனத்தில் பொருத்தப்பட்டுள்ள ஜிபிஎஸ் கருவி பயன்பாடு, வாகனத்தில் பொருத்தப்பட்டுள்ள அவசர வழி (வலதுபுற பின்பக்கம்), அவசர தீயணைப்பு கருவி, பள்ளி மாணவர்கள் ஏறி இறங்க தாழ்வு நிலையில் பொருத்தப்பட்ட படிக்கட்டு, வாகன ஜன்னல்களில் பாதுகாப்பு கருதி தடுப்பு கம்பிகள், வாகனத்தில் உட்புறம் மாணவர்களில் பைகள் வைப்பதற்கு அடுக்கு பலகை, வாகனத்தின் தரைதளத்தில் பாதுகாப்பு குறித்த நிலை, பள்ளி மாணவர்களின் பாதுகாப்பு குறித்து நடத்துநர் உரிமம் பெற்ற பணியாளர், வாகனத்தில் முதலுதவிப் பெட்டியில் மருந்துகள் இருப்பு நிலை உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு நெறி முறைகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. மேலும் பள்ளி செல்லும் மாணவ மாணவிகளை ஏற்றி செல்லும் பள்ளி வாகனங்கள் குறித்து தினந்தோறும் பாதுகாப்பு நெறி முறைகளின் பின்பற்றுவதை பள்ளி நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும் என்றார்.
இந்த ஆய்வின்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரவளி ப்ரியா கந்தபுணணி, தஞ்சாவூர் வட்டார போக்குவரத்து அலுவலர் அறிவழகன், மோட்டார் வாகன ஆய்வாளர் அனிதா, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சிவகுமார், மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர். இதே போல் கும்பகோணம் வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில், 41 பள்ளிகளிலிருந்து 141 பள்ளி வாகனங்கள் ஆய்வுக்கு வந்தன. இதனை வட்டார போக்குவரத்து அலுவலர் முக்கண்ணன், ஆய்வாளர் விஸ்வநாதன் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.