தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் தாலுகா, மேலையூர்-II நெல் கொள்முதல் நிலையத்தை கூத்தக்குடி கிராமத்திற்கு மாற்ற தடை கோரிய வழக்கை முடித்து வைத்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு...*

 

*தமிழ்நாடு குடிமை பொருள் விநியோக தரப்பில், மேலையூர்-II நெல் கொள்முதல் நிலையத்தை மாற்றி அமைக்கவில்லை என தெரிவிக்கப் பட்டதையடுத்து வழக்கை முடித்து வைத்தது மதுரைக்கிளை.*

 

தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் தாலுகா, மேலையூர் கிராமத்தைச் சேர்ந்த செல்வகுருநாதன், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனுவினை  தாக்கல் செய்திருந்தார். அதில், "தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் தாலுகா, மேலையூர் கிராமத்தில் 850 விவசாய குடும்பங்கள் வசித்து வருகின்றனர். மேலையூர் வட்டத்தில் 5 கிராமங்களில் நெல் விவசாயம் செய்யப்படுகிறது. ஆண்டிற்கு 2 போகம் நெல் விவசாயம் நடைபெறும். ஒவ்வொரு போகத்திற்கும் 30,000 மூட்டைகள் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. மேலையூர் கிராமத்தில் செயல்பட்டு வந்த நெல் கொள்முதல் நிலையம் 8 வருடங்களுக்கு முன்பு ஆற்றுபாலம் சரியில்லாத காரணத்தினால் தற்காலிகமாக 2 கி.மீ தூரத்தில் உள்ள பனங்கட்டாங்குடி என்ற ஊரில் மேலையூர்-I என்ற பெயரில் தற்கலிகமாக செயல்பட்டு வருகிறது.

 

ஆற்று பாலம் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட பின்பு உயர்நீதிமன்றம் மதுரைக் கிளையில் தீர்ப்பின் படி தற்பொழுது மேலையூர்-II என்ற பெயரில் பழைய மேலையூர் நெல் கொள்முதல் நிலையத்தில் செயல்பட தொடங்கியது. அதன்அருகில் தானிய சேமிப்பு கிடங்கும் உள்ளது. விவசாயிகள் தங்களுடைய நெல் மூட்டைகளை எடுத்து செல்வதற்கும் ஏற்ற இடமாக உள்ளது. ஆனால், தற்பொழுது மேலையூர்-II நெல் கொள்முதல் நிலையத்தை கூத்தக்குடி கிராமத்திற்கு மாற்ற ஏற்பாடு செய்யப்படுகிறது.

 

மேலையூர் கிராமத்தில் சுமார் 540 ஏக்கரிலும், கூத்தக்குடியில் சுமார் 140 ஏக்கரிலும், பனக்கட்டாங்குடியில் சுமார் 40 ஏக்கரிலும், பழியஞ்ச்சியநல்லூரில் சுமார் 280 ஏக்கரிலும், நெல் சாகுபடி செய்யப்படுகிறது.கூத்தக்குடி கிராமத்திலிருந்து 1.5 கி.மீ தொலைவில் திருமலைராஜபுரம் கிராமத்தில் நெல் கொள்முதல் நிலையமும், கூத்தக்குடிக்கு 0.5 கி.மீ தொலைவில் திருநீலக்குடி கிராமத்தில் நெல் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது. எனவே, மேலையூர்-II நெல் கொள்முதல் நிலையத்தை கூத்தக்குடி கிராமத்திற்கு மாற்ற தடை விதிக்க வேண்டும்." என கூறியிருந்தனர்.இந்த மனு நீதிபதிகள் புஷ்பா சத்தியநாராயணா, வேல்முருகன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. தமிழ்நாடு குடிமை பொருள் விநியோக தரப்பில், மேலையூர்-II நெல் கொள்முதல் நிலையத்தை மாற்றி அமைக்கவில்லை என தெரிவிக்கப்பட்டது இதனை பதிவு செய்துகொண்ட நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.