தஞ்சாவூர்: தடையை உடைத்து, நான்கு மணிநேரம் தர்ணா போராட்டம் நடத்தி அகில இந்திய அளவிலான தடகளப் போட்டியில் பங்கேற்க ஒடிசாவிற்கு தஞ்சாவூர் தமிழ்ப்பல்கலைக்கழக மாணவர்கள் புறப்பட்டு சென்றனர். இருப்பினும் அவர்களின் மன உளைச்சலுடன் தான் சென்றுள்ளனர்.


தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தை சேர்ந்த 15 மாணவர்கள், நாளை 26ம் தேதி முதல் 30ம் தேதி வரை ஒடிசாவில் பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான, அகில இந்திய அளவிலான தடகள போட்டியில் பங்கேற்க தேர்வு பெற்றனர். போட்டியில் கலந்து கொள்வதற்காக அரியலுாரில் இருந்து ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் ஒடிசா செல்வதற்கு மூன்று மாதத்திற்கு முன்பே பல்கலைக்கழக நிர்வாகத்திடம் இந்த மாணவர்கள் அனுமதி பெற்று டிக்கெட்டையும் முன்பதிவு செய்துள்ளனர். 


ஆனால், பல்கலைக்கழக துணைவேந்தர் பொறுப்பு வகிக்கும் சங்கர், விளையாட்டுப் போட்டியில் பங்கேற்க உள்ள 15 மாணவர்களும் ஒடிசா செல்லக்கூடாது என்று தெரிவித்ததாகவும், மீறி சென்றால் மோசடியாக சான்றிதழ் தயார் செய்துள்ளதாக போலீசாரிடம் புகார் அளிப்பேன் என மிரட்டியதாகவும் இந்த மாணவர்கள் தரப்பில் குற்றம்சாட்டி நேற்று காலை கலெக்டர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். பின்னர் சுமார் நான்கு மணி நேரம் அனுமதிக்காக காத்திருந்து தர்ணா போராட்டத்திலும் ஈடுபட்டனர். 


மாணவர்களின் போராட்டம் குறித்து தமிழ் வளர்ச்சி துறை அமைச்சரும், தமிழ்ப் பல்கலைக்கழக இணை வேந்தருமான சுவாமிநாதனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடன் அவர் சென்னையில் இருந்த பல்கலைக்கழக துணைவேந்தர் (பொ) சங்கரிடம் பேசி மாணவர்களை விளையாட்டு போட்டியில் பங்கேற்க அனுமதி அளிக்க கூறியதாக தகவல் வெளியானது. இதற்கிடையில் துணைவேந்தர் (பொ) சங்கர் பல்கலைக்கழகத்தின் விளையாட்டுதுறை பேராசிரியர் பிரபாகரிடம் செல்போனில் பேசி மாணவர்கள் செல்ல அனுமதி அளித்துள்ளார். 


இருப்பினும் ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு மாணவர்கள் செல்ல முடியாத சூழல் ஏற்பட்டது. இதையடுத்து திருச்சிக்கு புறப்பட்டு சென்று, அங்கிருந்து வேறு ரயிலில் ஒடிசாவிற்கு மாணவர்கள் புறப்பட்டு சென்றனர்.  


இதுகுறித்து மாணவர்கள் தரப்பில் கூறியதாவது: அகில இந்திய தடகள போட்டியில் பங்கேற்க, கடந்த மூன்று ஆண்டுகளாக பயிற்சி பெற்று தயாரானோம். பல்கலைக்கழக விடுதியில் வேறு மாணவர்கள் சிலரிடையே நடைபெற்ற பிரச்னையால் எங்களை ஒடிசா போட்டிக்கு செல்லக்கூடாது என மிரட்டி, அனுமதி மறுக்கப்பட்டது. ஏற்கனவே, ரயிலுக்காக கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு புக்கிங் செய்த பணமும் வீணாகி விட்டது. மனஉளைச்சலுக்கு பிறகு புறப்பட்டுளோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.