தஞ்சாவூர்: தஞ்சாவூருக்கு பெங்களூர் யஷ்வந்த்பூரில் இருந்து தங்கத்தேர் வந்துச்சுங்க. அட உண்மைதாங்க. என்னன்னு பாருங்களேன்.
தென்னிந்தியாவின் கலாசாரம் மற்றும் பாரம்பரியங்களை அறியும் வகையில் ‘தங்கத் தோ்’ என்னும் சொகுசு ரெயில் கர்நாடக மாநிலத்தில் இருந்து இயக்கப்பட்டுள்ளது. இந்த ரெயிலில் 80 நபா்கள் வரை பயணிக்க முடியும். முற்றிலும் சொகுசு வசதிகளுடன் வடிவமைக்கப்பட்ட இந்த ரெயிலில் தொலைக்காட்சி, இணைய வசதி, சிசிடிவி கேமரா, ஸ்பா, உடற்பயிற்சி கூடம் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் உள்ளன.
இந்த தங்கத் தேர் ரெயிலில் பயணிக்கும் வெளிநாடு மற்றும் உள்நாட்டுப் பயணிகளின் வசதிக்காக இரு உணவகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ‘கா்நாடகத்தின் பெருமை’ எனும் கருத்துருவில் இயக்கப்படும் ரெயில் பெங்களூரில் தொடங்கி பந்திப்பூா், மைசூா், ஹலேபிடு, சிக்மங்களூா், ஹம்பி, கோவா ஆகிய நகரங்களுக்கு 6 நாள் பயணமாக இயக்கப்படும். பின்னா் பெங்களூா் வந்தடையும்.
இதேபோன்று, ‘தெற்கின் நகைகள்’ எனும் கருத்துருவில் இயக்கப்படும் ரெயில் பெங்களூரில் தொடங்கி மைசூா், காஞ்சிபுரம், மகாபலிபுரம், தஞ்சாவூா், காரைக்குடி செட்டிநாடு, கேரளா மாநிலம் கொச்சின், சோ்தலா ஆகிய நகரங்களுக்கு 6 நாள்கள் பயணமாக இயக்கப்பட்டு மீண்டும் பெங்களூா் வந்தடையும்.
அதன்படி ‘தெற்கின் நகைகள்’ ரெயில் கடந்த 21-ந்தேதி கர்நாடக மாநிலம் பெங்களூர் யஸ்வந்த்பூரில் இருந்து இயக்கப்பட்டது. இதில் வெளிநாட்டு பயணிகள் 31 பேர் பயணம் செய்தனர். இந்த ரெயில் காஞ்சிபுரம், மகாபலிபுரம் சென்று அங்குள்ள புகழ் வாய்ந்த சுற்றுலா தலங்களை வெளிநாட்டு பயணிகள் பார்த்து ரசித்தனர். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு தஞ்சாவூர் ரெயில் நிலையத்துக்கு வந்தது. மற்ற ரெயில்களை விட இந்த சொகுசு ரெயில் முற்றிலும் வித்தியாசமான முறையில் காணப்படும் . பல்வேறு வசதிகளுடன் உடைய இந்த ரெயிலை ஏராளமான பயணிகள் பார்த்து ரசித்தனர்.
தொடர்ந்து தஞ்சை ரெயில் நிலைய இரண்டாவது நடைமேடையில் ரெயில் நிறுத்தப்பட்டது. அதிலிருந்து இறங்கிய வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் தஞ்சை பெரிய கோவிலுக்கு சென்றனர். அங்கு கட்டிடக்கலையை பார்த்து ரசித்தனர். கோயிலில் அமைப்பு, பிரமாண்டம் இதை பார்த்து ரசித்த சுற்றுலாப்பயணிகள் பின்னர் இதையடுத்து மதியம் 12 மணியளவில் ரயில் நிலையத்துக்கு வந்தனர். அங்கிருந்து ரெயில் புறப்பட்டு காரைக்குடி செட்டிநாடு நோக்கி சென்றது. அங்கும் சுற்றுலா தலங்களை பார்வையிடும் வெளிநாட்டு பயணிகள் பின்னர் கேரள மாநிலத்திற்கு செல்கின்றனர். கடைசியாக மீண்டும் பெங்களூருவில் பயணம் நிறைவடைகிறது.