தஞ்சாவூர்: நில ஒருங்கிணைப்பு சட்டத்தை தமிழக அரசு திரும்ப பெற வேண்டும் என தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர் விவசாயிகள் வலியுறுத்தினர். தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம் நடைபெற்றது. கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை வகித்தார். கூடுதல் கலெக்டர் சுகபுத்ரா, வேளாண்மை இணை இயக்குநர் நல்லமுத்து ராஜா மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் விவசாயிகள் பேசியதாவது: ஜீவக்குமார்: கோடை சாகுபடியை விவசாயிகள் தொடங்கியுள்ளதால் தடையில்லாமல் மின்சாரம் வழங்க வேண்டும். காவிரி ஆற்றின் நடுவே பல இடங்களில் உருவாகியுள்ள குறுங்காடுகளால் நீரோட்டம் தடைபடுகிறது. குறுங்காடுகளை அகற்ற வேண்டும். செங்கிப்பட்டி பகுதிகளில் நடக்கும் கிராவல் மண் கொள்ளையை தடுத்து நிறுத்த வேண்டும். சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நில ஒருங்கிணைப்பு சட்டத்தால், நீர் நிலைகள் தனியாருக்கு தாரை வார்க்கப்படலாம். இதனால் நீர் நிலைகள் பொய்த்து, விவசாயம் பாதிக்கப்படும். எனவே இந்த சட்டத்தை தமிழக அரசு திரும்ப பெற வேண்டும். ஏ.கே.ஆர். ரவிச்சந்தர்: தனியார் உரக்கடைகளில் உரங்களை வாங்கும்போது எந்த சாதி என கேட்டு பட்டியல் தயாரிக்கப்படுகிறது. இதனால் சாதி மோதல்கள் உருவாக வாய்ப்புள்ளதால், அதனை தவிர்க்க மாவட்ட நிர்வாகம் பரிந்துரை செய்ய வேண்டும். கடந்தாண்டு பயிர் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு, இழப்பீடு தொடர்பான அறிக்கைகளை இன்சூரன்ஸ் நிறுவனம் வெளிப்படையாக இணையதளத்தில் வெளியிட வேண்டும்.100 நாள் வேலைத் திட்டத்தால், விவசாயப் பணிகளுக்கு தொழிலாளர்கள் பற்றாக்குறை ஏற்படுகிறது. எனவே விவசாயப் பணிகளுக்கு அவர்களை பயன்படுத்தும் வகையில் உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும். கோவிந்தராஜ்: கரும்பு சாகுபடி குறைந்து வருவதால், கரும்பு விலையை உயர்த்த வேண்டும். அதே போல் வெட்டுகூலி மானியம் வழங்க வேண்டும். மதுக்கூர் சந்திரன்: மதுக்கூர் கல்யாண ஓடை வாய்க்கால்களில் ரெகுலேட்டர்கள் இல்லாமல் ஆங்காங்கே காணப்படுகிறது. எனவே ரெகுலேட்டர்களை உடன் பொருத்த வேண்டும். இவ்வாறு விவசாயிகள் பேசினர்.
நில ஒருங்கிணைப்பு சட்டத்தை தமிழக அரசு திரும்ப பெற வேண்டும்: குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்
என்.நாகராஜன் | 29 Apr 2023 02:54 PM (IST)
சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நில ஒருங்கிணைப்பு சட்டத்தால், நீர் நிலைகள் தனியாருக்கு தாரை வார்க்கப்படலாம். இதனால் நீர் நிலைகள் பொய்த்து, விவசாயம் பாதிக்கப்படும்.
குறைதீர் கூட்டம்
Published at: 29 Apr 2023 02:54 PM (IST)