திருவாரூர் நகரத்திற்குட்பட்ட சன்னதி தெருவை சேர்ந்தவர் மதியழகன். இவர் திருவாரூர் புது நகரில் உள்ள எல்.ஐ.சி கிளையில் முகவராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்த நிலையில் அவரது சந்ததிகளின் எதிர்காலத்தினை கருத்தில் கொண்டு அவர் பணி காலத்தில் பல பாலிசிகளை எடுத்துள்ளார். அந்த வகையில் இறுதியாக இரண்டு பாலிசிகளுக்கு அலுவலகத்தில் இருந்து அவருக்கு வரும் கமிஷன் தொகையிலிருந்து பிரிமியம் தொகையினை பிடித்தம் செய்து கொள்ளுமாறு பாலிசி எடுத்துள்ளார்.

 

இந்த நிலையில் கடந்த 24.08.2017 அன்று மதியழகன் உயிரிழந்துள்ளார். இதனையடுத்து  நாமினியான மதியழகனின் மனைவி வனிதா பாலிசி முதிர்வு  தொகையை கோரி கடந்த 12.04.2018 ஆம் தேதி விண்ணப்ப மனுவினை எல்.ஐ.சி கிளையில் கொடுத்துள்ளார். அந்த மனு மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. பலமுறை வனிதா அலுவலகத்திற்கு சென்று வந்துள்ளார். இருப்பினும் எல்.ஐ.சி நிர்வாகம் காலம் தாழ்த்தி வந்ததாக கூறப்படுகிறது 

 

இந்த நிலையில் கடந்த 08.05.2018 ஆம் தேதி சம்பந்தப்பட்ட இரு பாலிசிக்குரிய  பிரிமியம் தொகை சரிவர செலுத்தவில்லை. எனவே இறப்பு உரிமம் தொகை வழங்கப்பட மாட்டாது என்று கூறி திருவாரூர் எல்ஐசி கிளையில் இருந்து வனிதாவிற்கு பதில் வந்துள்ளது.

 

அதனைத் தொடர்ந்து வழக்கறிஞர் மூலம் சம்பந்தப்பட்ட எல்.ஐ.சி கிளைக்கு இரண்டு முறை நோட்டீஸ் அனுப்பியும் அதன் மீது எவ்வித நடவடிக்கையோ பதில் கடிதமோ அனுப்பப்படவில்லை என்று கூறப்படுகிறது.

 

இதனையடுத்து வனிதா கடந்த 25.07.2022 ஆம் தேதி திருவாரூர் நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் இது குறித்து வழக்கு தொடர்ந்துள்ளார்.

 

இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய ஆணையத் தலைவர் சக்கரவர்த்தி உறுப்பினர்கள் லட்சுமணன் பாக்கியலட்சுமி அடங்கிய அமர்வு பாலிசி காலவாதியானது சம்பந்தமாக எந்தவிதமான நோட்டீஸோ அறிவிப்போ எல்.ஐ.சி நிர்வாகத்தில் இருந்து கொடுக்கப்படவில்லை என்றும் அது சம்பந்தமாக எந்த ஒரு ஆவணமும் இந்த ஆணையத்தில் தாக்கல் செய்யப்படவில்லை என்றும் இதிலிருந்து புகார்தாரரின் கணவர் எடுத்துள்ள மேற்படி இரு பாலிசிகளும் காலாவாதியாகவில்லை என இந்த ஆணையம் கருதுகிறது. 

 

மேலும் புகார்தாரர் கணவரின் இரு பாலிசிகள் காலாவதியாகிவிட்டதாக எல்.ஐ.சி கிளை கூறுவது குறித்து புகார்தாரரின் கணவருக்கு எந்தவித அறிவிப்பும் வழங்காமல் இருந்துவிட்டு தற்போது காலாவதியாகிவிட்டது என்று கூறி புகார்தாரருக்கு இரு பாலிசிக்கான உரிமைத் தொகையை வழங்காமல் இருந்துள்ளது சேவை குறைபாடு என இந்த ஆணையம் கருதுகிறது. எனவே மேற்படி இரு பாலிசியில் உள்ள உரிமை தொகையான மூன்று லட்சத்தை திருவாரூர் எல்ஐசி கிளை மேலாளர் தஞ்சாவூர் எல்.ஐ.சி மண்டல மேலாளர்  சேர்ந்தோ தனித்தோ புகார்தாரருக்கு வழங்க வேண்டும் என்றும் புகார்தாரருக்கு ஏற்பட்ட மன உளைச்சல் மற்றும் பொருள் நஷ்டத்திற்கு இழப்பீடாக 50,000 ரூபாயும் வழக்கு செலவுத் தொகையாக 5000 ரூபாயும் என மொத்தம் மூன்று லட்சத்து 55 ஆயிரம் ரூபாயை வழங்க வேண்டும் என அதிரடி தீர்ப்பளித்து உத்தரவிட்டுள்ளது.