தஞ்சாவூர்: உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோவிலில் சித்திரை திருவிழாவை ஒட்டி நடந்த நிகழ்ச்சியில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் ஆடிய பரதம் பலரையும் ஈர்த்தது.
உலகப்புகழ் பெற்ற தஞ்சாவூர் பெரிய கோவில் தமிழர்களை மட்டுமின்றி வெளிநாட்டினரையும் தன்வசம் ஈர்த்துக் கொண்டிருக்கிறது. சிற்பக்கலை, கட்டிக்கலைக்கும் சான்றாக இருக்கும் இந்த கோவிலை பார்த்து வியக்காதவர்கள் இருக்கவே முடியாது.
தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள், சுற்றுலாப் பயணிகள் இக்கோவிலுக்கு வந்து செல்கின்றனர். இக்கோவிலில் நடக்கும் சதய விழாவும், சங்கீத நாட்டிய நிகழ்ச்சியும் மிகவும் பிரபலம். இந்த கோவிலில் ஆண்டுதோறும் சதய விழா, ஆஷாட நவராத்திரி விழா உள்ளிட்ட பல்வேறு புகழ்பெற்ற விழாக்கள் நடக்கும்.
இந்த விழாக்களில் ஒன்று சித்திரை பெருவிழா. சித்திரை தேரோட்ட விழாவிற்குக் கடந்த 17-தேதி பந்தக்கால் நடும் விழா நடைபெற்ற நிலையில் மே-1-ல் பெருந்திருவிழா எனப்படும் தேரோட்டம் தஞ்சை வீதிகளில் உலா வரவுள்ளது.
இறுதி நாளான மே-5-ல் தீர்த்தவாரி விழா நடைபெற உள்ளது. இந்நிலையில் அன்று வரை தினமும் இரவில் சாமி ஊர்வலமும், திருமுறை பண்ணிசை நிகழ்ச்சியும், பரதநாட்டிய நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. அதன் படி சந்திரசேகர விழாவில் பழமுதிர் சோலை இசைக் கலைமணி மகேஷ் ஓதுவாரின் பண்ணிசை நிகழ்ச்சி நடைபெற்றது. அதனை தொடர்ந்து பள்ளி, கல்லூரி மாணவர்கள் ஆடிய பரதம் பலரையும் ஈர்த்தது. பெரிய கோயிலுக்கு வரும் பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் மெய்மறந்து மாணவர்கள் ஆடிய பரதத்தை கண்டு ரசித்தனர்.
இன்று 29ம் தேதி காலை சந்திரசேகரர் வெண்ணெய்தாழி அலங்காரமும், மாலை வெள்ளி யானை வாகனத்தில் பஞ்சமூர்த்திகள் புறப்பாடும், ஓலைச்சப்பரத்தில் சந்திரசேகரர் சுவாமி, அம்பாள் வீதியுலா நடைபெறுகிறது. 30ம் தேதி மாலை சந்திரசேகரர் கைலாசபர்வத வாகனத்தில் புறப்பாடு நடைபெறுகிறது.
மே.1ம் தேதி விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நடைபெறுகிறது, அன்று காலை 5 மணிக்கு தியாகராஜர், கமலாம்பாள், சோமஸ்கந்தர், விநாயகர், நீலோத்பலாம்பாள், வள்ளி, தெய்வானை உடனுறை சுப்பிரமணியர் சுவாமிகள், சண்டிகேஸ்வரர், ஆகிய சுவாமிகள் முத்துமணி அலங்காரத்தில் தேருக்கு கோயிலில் இருந்து புறப்பட்டு, காலை 6 மணிக்கு மேல் தியாகராஜசுவாமி தேரில் எழுந்தருளிய நிலையில் திருதேரோட்டம் நடைபெறுகிறது.
2ம் தேதி மாலை குதிரை வாகனத்தில் சந்திரசேகரர் புறப்பாடு, 3ம் தேதி காலை தியாகராஜர் பந்தல் காட்சியுடன் யதாஸ்தான பிரவேசமும், மாலை நடராஜர் வெள்ளை சாத்தி புறப்பாடும் நடைபெறுகிறது.
4ம் தேதி சிவகங்கை குளத்தில் தீர்த்தவாரியுடன் கொடியிறக்கத்துடன் 18 நாள் விழா நிறைவு பெறுகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை அரண்மனை தேஸ்வதான பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா போன்ஸ்லே, உதவி ஆணையர் கவிதா, செயல் அலுவலர் மாதவன், கண்காணிப்பாளர் பாலசுப்பிரமணியன் மற்றும் கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்