தஞ்சாவூர்: கமகமக்கும் வாசனைப்பா... அடடா... மாலைப்பா.. சந்தன மாலைப்பா.. மலைக்க வைக்கும் வாசனை ஆளையே தூக்கும் பார்த்துக்கோப்பா. இதுல ஸ்பெஷலு தஞ்சாவூருப்பா. அதனாலதானே இதுக்கு வந்துச்சு தஞ்சாவூரு சந்தனமாலைன்னு பேருப்பா என்று பாடலாம். அந்தளவிற்கு சந்தன மாலைக்கு பெயர் பெற்ற ஊர் நம்ம தஞ்சாவூருதான்.


எத்தனை வாசனை... மறக்கமுடியாத வாசனை


ரோஜாப்பூ, செவ்வந்திபூ, மல்லிகைப்பூ, சம்பங்கிப்பூ மாலைகளின் ஆயுள் சில மணிநேரங்கள், அதிகபட்சம் ஒரு நாள்தான். ஆனால் தஞ்சாவூர் சந்தன மாலைகளோ வாசனையோடு வெகு காலம் மறக்கமுடியாத சின்னமாக இருக்கும். அதனால்தாங்க சந்தன மாலைக்கு என்று தனி மவுசு. முக்கிய பிரமுகர்களை பார்க்கணுமா... கட்சித்தலைவர்களை சந்திக்கணுமா... அப்போ வாங்குப்பா தஞ்சாவூர் சந்தனமாலை என்று சட்டென்று ஆர்டர் பறக்கும்.




தண்டாங்கோரையில் தயாராகும் சந்தனமாலைகள்


இந்த சந்தனமாலைகளை தஞ்சாவூர் அருகே தண்டாங்கோரை கிராமத்தில் தயாரிக்கிறாங்க. தமிழகம் முழுவதும் உள்ள சர்வோதய சங்கம், காதிபவன், பூம்புகார் கைவினைப் பொருட்கள் விற்பனையகம் என பல விற்பனையகங்களில் விற்பனைக்கு இருக்கும் தஞ்சாவூர்  சந்தன மாலைகளை தயாரிப்பது தஞ்சாவூர் அருகே தண்டாங்கோரை கிராமத்தில் உள்ள கைவினைக் கலைஞர்கள்தான்.


மாமன்னன் ராஜராஜசோழன் காலத்தில் நெல் மணிகளைக் கொண்டு முதலில் மாலைகள் தயாரிக்கப்பட்டன. விருந்தினர்களுக்கு இந்த நெல்மணி மாலைகளை மன்னர் அணிவிப்பது வழக்கம். நெல்மணிகளைக் கொண்டு மாலைகளைத் தயாரித்த தஞ்சாவூர் கைவினைத் தொழிலாளர்கள், பிற்காலத்தில் மணக்கும் ஏலக்காய், சந்தனம் ஆகியவற்றைக் கொண்டு விதவிதமான மாலைகளைத் தொடுத்தனர்.


கூடியது மவுசு தஞ்சாவூர் சந்தன மாலைகளுக்கு


விலை குறைவும், மங்காத பளபளப்பு, நறுமணம் ஆகியவற்றால் மவுசு கூட ஆரம்பித்தது சந்தன மாலைகளுக்கு. இன்றைய நிலையில் தஞ்சாவூரைச் சுற்றி இத்தொழிலில் 10 ஆயிரம் பேர் பெண்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த மாலை தஞ்சாவூரில் மட்டுமே அதிகமாக உற்பத்தி செய்யப்படுவதால், இது ‘தஞ்சாவூர் சந்தன மாலை' என பெயர் பெற்றது. தஞ்சாவூருக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் சந்தன மாலைகளை விரும்பி வாங்கிச் செல்கின்றனர். மேலும், மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும் தஞ்சாவூர் மாலைகள் அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.


எப்படி தயாரிக்கிறாங்க சந்தன மாலையை?


சரிங்க இதை எப்படி தயாரிக்கிறாங்க என்று தெரியுங்களா. பொறுமையும், பக்குவமும் மிகவும் முக்கியம். சந்தன மாலை தயாரிக்க வம்பாரை என்ற ஒரு மரத்தின் துகள்தான் மூலப்பொருள். இந்த துகள்களை மாவாக்கியப் பிறகு, ஒரு பிசினையும் சேர்த்து பக்குவமாய் பிசைந்து சின்ன உருண்டைகளாக உருட்டி கொள்கின்றனர். பின்னர் ஒரு சிறிய துவாரமிட வேண்டும். துவாரமிட்ட உருண்டைகளைப் பதமாக காயவைக்கின்றனர். அதற்கு பிறகு தரமான சந்தன பவுடரில் நனைத்து மாலையாக தொடுக்கின்றனர்.


2 சரம் தொடங்கி 20 சரங்கள் வரை தொடுக்கப்படும்


கலை நயமிக்க வாசனை மிகுந்த இந்த சந்தன மாலைகள் 2 சரங்களில் தொடங்கி,  20 சரங்கள் வரை தொடுக்கப்படும். திருமணம், விழாக்கள், அரசியல் கட்சி தலைவர்கள் வருகை என்று பல விசேஷ காலங்களில் அதிகம் விற்பனையாகிறது. கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் போன்ற நாட்களில் தஞ்சாவூர் சந்தன மாலைகளுக்கு கிராக்கி அதிகம். தஞ்சாவூருக்கு வாங்க... சந்தனமாலையையும் வாங்கிக்கிட்டு போங்க.