தஞ்சாவூர்: பதவி என்பது தானாக ஒருவருக்கு தேடி வர வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதியரசர் சு. ராஜேஸ்வரன் தெரிவித்தார்.


தஞ்சாவூர் அருகே காசவள நாடு கோவிலூரில் நேற்று மாலை காசவளநாடு கல்வி மேலாண்மை குழு சார்பில் பள்ளி மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது. விழாவுக்கு குழுவின் ஒருங்கிணைப்பாளர் ரா . அப்பர் தலைமை வகித்தார். அனைவரையும் வி. த. அ. ரங்கராஜன் வரவேற்றார். விழாவில் கடந்தாண்டு 10 மற்றும் 12 ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு கல்வி ஊக்கத் தொகையும், அதிக தேர்ச்சி சதவிகிதம் பெற்ற அரசு பள்ளிகளுக்கு விருதுகளும் வழங்கி சென்னை உயர்நீதிமன்றத்தின் முன்னாள் நீதியரசர் சு.ராஜேஷ்வரன் பேசியதாவது:  


இந்தியா முழுவதும் 150 கோடி மக்கள் தொகை உள்ளனர். ஆனால், இந்தியாவில் 780 நீதிபதிகள் தான் உள்ளனர். எனவே மாணவர்கள் அதிக அளவில் உயர் கல்வி பெற்று நீதிபதிகளாகவும், ஐஏஎஸ், ஐபிஎஸ் பணிகளை தேர்வு செய்ய வேண்டும். மாணவர்கள் தன்னம்பிக்கையுடனும், விடாமுயற்சியுடன் படிக்க வேண்டும் அதன் மூலம் அவர்கள் உயர் பதவியை அடைய முடியும், உயர் பதவியை நாம் தேடி செல்லக்கூடாது அந்தப் பதவி நம்மை தேடி வர வேண்டும் அந்த அளவுக்கு நம்மளுடைய இலக்குகளும், நோக்கங்களும் இருக்க வேண்டும். 




இன்றைய தலைமுறைக்கு படிப்பதற்கு பல்வேறு வசதிகள் உள்ளது அதை பயன்படுத்திக் கொண்டு மாணவர்கள் படித்து சாதிக்க வேண்டும். ள்ளைகளை மருத்துவராக, பொறியாளராக வரவேண்டும் என பெற்றோர்கள் நிர்பந்தம் செய்யக்கூடாது. தங்களுடைய ஆசைகளை குழந்தைகள் மீது திணிக்காமல் அவர்களுக்கு எந்த துறை மீது நாட்டம் அதிகமோ அதன் மீது அவர்களை படிப்பதற்கு உதவி செய்ய வேண்டும் . மேலும் பெற்றோர்கள் பள்ளிக்குச் சென்று ஆசிரியர்களிடம் தங்களுடைய  குழந்தை எந்த துறையின் மீது ஆர்வமாக உள்ளார் என்பதை ஆசிரியர் மூலமாக தெரிந்து கொண்டு அதன்படி அவர்களுக்கு உயர் கல்வி பெற வழிவகை செய்ய வேண்டும் அதை விட்டுவிட்டு தங்களுடைய ஆசைகளை குழந்தைகள் மீது திணிக்க கூடாது.


கிராமப்புற மாணவர்களுக்கு ஆங்கிலம் தான் தடையாக உள்ளது அப்படி தடையாக இருக்கும் போது அதிக கவனம் செலுத்தி செய்தித்தாள்களை படித்தால் ஆங்கிலத்தில் உள்ள தடைகளை உடைக்க முடியும். ஆங்கிலம் கடினமாக இருந்தால் தமிழ் துறையை தேர்வு செய்து படிக்கலாம். ஒவ்வொருவரும் படித்துக் கொண்டே இருக்க வேண்டும் படிப்புக்கு ஓய்வு என்பதே கிடையாது. மாணவர்கள் தன்னம்பிக்கையை விடாமல் முயற்சியோடு படிக்க வேண்டும். அதேபோல் பெற்றோர்களை மதித்தும்  அவர்களுக்கு நன்றி கடன் செலுத்தும் வகையிலும் படித்து சாதனை  படைக்க வேண்டும் என்றார்.


விழாவில் காச வளநாட்டுக்கு உட்பட்ட  பத்துக்கு மேற்பட்ட அரசு பள்ளிகளுக்கு அதிக தேர்ச்சி சதவீதம் பெற்றமைக்காக விருதுகளும், பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்றமைக்காக 50க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு கல்வி ஊக்க தொகையும் வழங்கப்பட்டது. 


முன்னாள் முதன்மை கல்வி அலுவலர் கி. சுவாமிநாதன், திண்டுக்கல் காந்திகிராம பல்கலைக்கழக பொருளியல் துறை தலைவர் ச. ராஜேந்திரன், பூண்டி புஷ்பம் கல்லூரி முன்னாள் முதல்வர் சி. சின்னையன், திண்டிவனம் அரசு கல்லூரி முன்னாள் முதல்வர் தி. அறிவுடை நம்பி, பூண்டி புஷ்பம் கல்லூரியின் முன்னாள் தமிழ் துறை தலைவர் வீ. சிவபாதம், குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கல்லூரி தமிழ் துறை தலைவர் ராசு தமிழடியான், ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர்கள் ந. சின்னையன், மு. நாகராஜன், தஞ்சாவூர் மாவட்ட சுகாதாரத்துறை கண்காணிப்பாளர் த. சியாமளா தேவி, சமூக ஆர்வலர் த.தமிழ் தென்றல், ஒருங்கிணைப்பாளர் வே. கேதீஸ்வரன் ஆகியோர் கலந்துகொண்டு பேசினர்.


நிகழ்ச்சியை ஆசிரியை அ.கனிமொழி தொகுத்து வழங்கினார். இறுதியாக தலைமை ஆசிரியர் சி. ராஜேந்திரன் நன்றி தெரிவித்தார். விழாவில் காசவள நாட்டைச் சேர்ந்த பொதுமக்கள், பள்ளி மாணவ, மாணவிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.