தஞ்சாவூர்: தஞ்சாவூர் தென்னக பண்பாட்டு மையத்தில் வாராந்திர கலை நிகழ்ச்சிகளில் இந்த வாரம் பொம்மலாட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது. திரைப்படத்திற்கு முன்னோடியாக திகழ்வது பொம்மலாட்டம்தான். மயிலாடுதுறையை சேர்ந்த சோமசுந்தரம் ஸ்ரீ கணநாதர் குழுவினரின் பொம்மை மனிதர்களின் நடனமும் சிறப்பாக அமைந்திருந்தது.


தஞ்சாவூர் தென்னகப் பண்பாட்டு மையம் இந்திய அரசு, கலாச்சாரத்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் மையமாகும்.இந்த மையம் இந்தியாவின் கிராமப்புற பாரம்பரிய கலைகளையும் மற்றும் பாரம்பரிய பழங்குடி கலைகளையும் பாதுகாத்து வருகிறது.


மனித வாழ்வில் முன்னேற்றம் என்பது பழங்காலம் முதல் நவீன காலம் வரை பல்வேறு ஏற்ற, இறக்கத்தை சந்தித்தே நிகழ்ந்து வருகிறது. எனினும் பாரம்பரிய பழக்க, வழக்கங்களை முழுமையாக கைவிட்ட வரலாறு இல்லை. அத்தகைய பாரம்பரியத்துடன் ஒன்றிப்போனதுதான் பொம்மலாட்டம். 


தமிழ் பாரம்பரியத்துக்கும், கலாசாரத்துக்கும் என்றுமே தனித்தனி அடையாளங்கள் உண்டு. அந்த அடையாளங்களில் ஒன்றாக பொம்மலாட்டம் திகழ்கிறது. இது கூத்து வகையை சேர்ந்தது. மரத்தால் செய்யப்பட்ட பொம்மைகளில் நூலை கட்டி திரைக்கு பின்னால் இருந்து இயக்கியபடி கதை சொல்லும் கலைதான் பொம்மலாட்டம். இது பாவைக்கூத்து, மரப்பாவைக்கூத்து என்றும் அழைக்கப்படுகிறது.




மேலும் தோல் பொம்மலாட்டம், மர பொம்மலாட்டம் என்ற 2 வகைகளில் நிகழ்த்தப்படுகிறது. பெரும்பாலும் பொம்மலாட்டத்தில் இதிகாசமும், புராண கதைகளும், சரித்திர கதைகளுமே அதிகம் நிகழ்த்தப்படும். குறிப்பாக தமிழகத்தில் அருணகிரி நாதர் வரலாறு, சிறுத்தொண்ட நாயனார் கதை, சீதா கல்யாணம், பக்த பிரகலாதன், ஆண்டாள் கல்யாணம், அரிச்சந்திரன் கதை, வள்ளி திருமணம் ஆகியன நிகழ்த்தப்படுகிறது.


பொம்மலாட்டத்தில் மொத்தம் 9 கலைஞர்கள் பணிபுரிவார்கள். இவர்களில் 4 கலைஞர்கள் பொம்மைகளை இயக்கவும், 4 கலைஞர்கள் இசைக்கலைஞர்களாகவும் இருப்பார்கள். ஒருவர் உதவியாளராக இருப்பார். பெரும்பாலும் ஆர்மோனியம், தபேலா, மிருதங்கம், ஜால்ரா, முகவீணை ஆகிய இசைக்கருவிகள் பயன்படுத்தப்படும். தற்போது மின் இசைக்கருவிகளை பயன்படுத்துகிறார்கள். 4 மீட்டர் அகலம், 6 மீட்டர் நீளம், 3 மீட்டர் உயரம் கொண்ட மூன்று புறமும் அடைக்கப்பட்ட அரங்கில் மரபின் திரிபுகள் கெட்டுவிடாது இந்த கலை நிகழ்த்தப்படும்.


அரங்கின் வலதுபுறத்தில் இசைக்கலைஞர்கள் அமர்ந்திருப்பார்கள். முன்புறத்தில் 1 மீட்டர் அளவுக்கு இடைவெளி விட்டு கறுப்பு நிற திரைச்சீலை கட்டப்பட்டு இருக்கும். இந்த திரையானது பின்னால் நிற்கும் கலைஞர்களின் தலையை மறைக்கும் அளவுக்கு உயரமாக இருக்கும். பொம்மைகள் தொங்கும் கயிறுகள் திரையின் மேல் கட்டப்பட்டு இருக்கும்.


இதில் பயன்படுத்தப்படும் பொம்மைகளை கல்யாண முருங்கை மரத்தில் இருந்துதான் உருவாக்குகிறார்கள். அந்த மரத்தின் கட்டைகளை நீரில் ஊற வைத்து, அதன்பின் உலர வைத்து தலை, கால், கை என்று பாகங்களை தனித்தனியாக செதுக்குவார்கள். பின்னர் மீண்டும் நன்றாக உலர வைத்து பாகங்களை இணைப்பார்கள். எனினும் அவை தனித்தனியாக இயங்கும் வகையில் இருக்கும். பொம்மையின் பாகங்களுக்கு ஏற்பவும், கதாபாத்திரங்களின் தன்மைக்கு ஏற்பவும் வர்ணம் தீட்டுவார்கள். ஆரம்ப காலங்களில் அனைத்து பொம்மைகளுக்கும் மஞ்சள் வர்ணம் மட்டுமே தீட்டப்பட்டது. தற்போதய காலக்கட்டத்தில் கற்பனைக்கும், வசீகரத்துக்கும் ஏற்ப பல வர்ணங்கள் தீட்டப்படுகின்றன. மேலும் கதைகளுக்கு ஏற்ப பொம்மைகளுக்கு உடைகள் அணிவிக்கப் படுகிறது.


உள்ளூர் கலைஞர்களை ஊக்குவிக்கும் வகையிலும், கலைகளைப் பாதுகாக்கும் வகையிலும் ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை இரவு 7 மணி முதல் 8.30 மணிவரை வார நிகழ்ச்சி நடைபெறும் என கடந்த மே மாதம் தஞ்சாவூர் தென்னக பண்பாட்டு மையம் அறிவித்திருந்தது. அதன்படி வாரம் தோறும் நடைபெறும் கலை நிகழ்ச்சிகளை பொதுமக்கள் கண்டு களித்து வருகின்றனர்.


அந்த வகையில் இந்த வாரம் மயிலாடுதுறையை சேர்ந்த சோமசுந்தரம் ஸ்ரீ கணநாதர் குழுவினரின் பொம்மலாட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது. ஶ்ரீமன் நாராயணனின் அருள் பரிபூரணமாக திருமலையில் வியாபித்துக் இருப்பதால்தான் திருவரங்கத்துக்கு இணையாகப் ‘பூலோக வைகுண்டம்’ என பக்தர்கள் அழைக்கிறார்கள். பல சிறப்புகளை உடைய வெங்கடேச பெருமாள் கதையில் முக்கிய ஒன்றான சீனிவாச கல்யாணம் என்ற தலைப்பில்,அதாவது திருப்பதி வெங்கடேச பெருமாள் கோயில் கொண்ட கதையை இந்த பொம்மலாட்டம் நிகழ்ச்சியில் விளக்கி கூறப்பட்டது.