தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் தாய் இறந்த அதிர்ச்சியில் மகனும் மாரடைப்பால் இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை நாடிமுத்து நகர், வெங்கடராம அய்யர் நகரை சேர்ந்தவர் டாக்டர் சாம்பமூர்த்தி. இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இவரது மனைவி மீனாட்சியம்மாள் (98). இவர்களுக்கு ஐந்து மகன்கள். இதில் நான்கு மகன்களுக்கும் திருமணமாகி வெளியூர்களில் வசித்து வருகின்றனர்.
கடைசி மகன் ஜெயசந்திரன் (68) மட்டும் திருமணம் செய்து கொள்ளவில்லை. இவர் அஞ்சல் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இதனால் மீனாட்சியம்மாளும், ஜெயச்சந்திரனும் மட்டுமே தனியாக வசித்து வந்துள்ளனர்.
இந்நிலையில் மீனாட்சியம்மாள் வயது முதிர்வு காரணமாக கடந்த 30ஆம் தேதி இறந்தார். தாய் இறந்த சோகத்தில் ஜெயச்சந்திரன் வெகு நேரம் அழுதுக் கொண்டே இருந்துள்ளார். அவருக்கு உறவினர்கள் ஆறுதல் தெரிவித்து வந்தனர். இந்நிலையில் நாற்காலியில் அமர்ந்திருந்த ஜெயச்சந்திரனும் மாரடைப்பு (சடர்ன் அட்டாக்) ஏற்பட்டு இறந்து விட்டார். இது தெரியாத அவரது உறவினர்கள் வந்து எழுப்பியுள்ளனர். அப்போதுதான் ஜெயச்சந்திரனும் இறந்தது தெரியவந்தது.
இதையடுத்து தாய், மகன் இருவரையும் உறவினர்கள் ஒன்றாக கரிக்காடு மின் மயானத்தில் நேற்று மாலை தகனம் செய்தனர். தாய் இறந்த துக்கம் தாங்காமல், மகனும் சில மணிநேரத்தில் இறந்த சம்பவம் உறவினர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
சட்ட விரோதமாக மது விற்ற 5 பேர் கைது
தஞ்சை மதுவிலக்கு அமல் பிரிவு போலீசார் தஞ்சை அம்மன்பேட்டை, வரகூர், திருக்காட்டுப்பள்ளி தீயணைப்புநிலையம் அருகில், பொன்னாவாரி உள்ளிட்ட டாஸ்மாக் கடைகள் அமைந்துள்ள பகுதிகளில் தீவிர சோதனை நடத்தினர். அதில் 5 இடங்களில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்தது தெரியவந்தது. அதைதொடர்ந்து போலீசார் மது விற்ற 5 பேரை கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 34 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
மணல் கடத்தல்: தஞ்சை வடக்கு வாசல் கங்காநகர் பகுதியில் தஞ்சை மேற்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜ்கமல் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த சரக்குவேனை போலீசார் வழிமறித்தனர். போலீசார் நிற்பதை பார்த்ததும், சரக்கு வேனை ஓட்டிவந்தவர் அதனை அங்கேயே நிறுத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார்.
பின்னர் சரக்குவேனை சோதனை செய்ததில் அதில் மணல் இருந்தது. உடனே சரக்குவேனை பறிமுதல் செய்த போலீசார் தப்பி ஓடிய டிரைவரை தேடி வருகின்றனர்.
பைக் திருட்டு: தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் அருகே தியாகராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் சிவதாஸ் (30). சம்பவத்தன்று இவர் தஞ்சை புதிய பஸ் நிலையம் பகுதியில் தன்னுடைய பைக்கை நிறுத்திவிட்டு சென்றார். பின்னர் சிறிது நேரம் கழித்து வந்து பார்த்தபோது பைக்கை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் பல்வேறு இடங்களில் தேடிபார்த்தும் கிடைக்கவில்லை. இதுகுறித்து தஞ்சை மருத்துவக்கல்லூரி போலீஸ் நிலையத்தில் சிவதாஸ் புகார் செய்தார். இதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்தழகன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.