தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன் (26), டிரைவர். இவர் அதே பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமியை காதலித்து வந்துள்ளார். மணிகண்டன் அந்த 15 வயது சிறுமிக்கு அடிக்கடி பாலியல் தொல்லை அளித்து வந்துள்ளார்.
இந்நிலையில் சிறுமியுடன் மணிகண்டன் நெருக்கமாக இருப்பதை, சிறுமியின் உறவினரான நாடிமுத்து (42) என்பவர் பார்த்துள்ளார். இதையடுத்து நாடிமுத்து சிறுமி மிரட்டி, பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் சிறுமி கர்ப்பமடைந்தார். தொடர்ந்து அந்த சிறுமிக்கு குழந்தையும் பிறந்துள்ளது.
பின்னர் சிறுமி சார்பில் பட்டுக்கோட்டை அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில், சிறுமிக்கு பிறந்த குழந்தையின் டி.என்.ஏ., சோதனை செய்ததில், நாடிமுத்து சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தது உறுதியானது. மேலும் சிறுமியை காதலித்த மணிகண்டன் அடிக்கடி பாலியல் தொல்லை அளித்ததும் தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
இது தொடர்பாக தஞ்சாவூர் போக்சோ சட்டச் சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வந்தது. இந்த வழக்கை நீதிபதி ஜி. சுந்தரராஜன் விசாரித்து, சிறுமியின் உறவினர் நாடிமுத்துக்கு 25 ஆண்டு சிறையும், 2 லட்சம் ரூபாய் அபாரதமும் விதித்தார். அதேபோல் காதலன் மணிகண்டனுக்கு 20 ஆண்டு சிறையும், ஒரு லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு தரப்பில் ரூ. 5 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என தீர்ப்பளித்தார். 15 வயது சிறுமியை உறவினர் பாலியல் பலாத்காரம் செய்த காரணத்தால் அவர் தாயாகியதும், அந்த சிறுமிக்கு இளைஞர் பாலியல் தொல்லை அளித்து வந்ததும் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் ஆய்வு
தஞ்சாவூர் பெரியகோவிலில் இந்திரன் கற்சிலை மாயமானதாக கிடைத்த புகாரின் அடிப்படையில், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் ஆய்வு செய்தனர். தஞ்சாவூர் பெரியகோவிலில் ராஜராஜன் நுழைவு வாயிலில் இந்திரன் சன்னதியில் உள்ள சிலை மாயமாகி உள்ளதாகவும், அது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு புகார் கிடைத்துள்ளது. இந்த புகாரின் அடிப்படையில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் இந்திரா தலைமையிலான குழுவினர் கோவிலில் ஆய்வு மேற்கொண்டனர்.
இது தொடர்பாக அரண்மனை தேவஸ்தானம், அறநிலையத்துறை, இந்திய தொல்லியல் துறை அதிகாரிகளும் உள்ள ஆவணங்களை ஆய்வு செய்தனர். மேலும், கோவில் பணியாளர்கள்,சிவச்சாரியார்கள் உள்ளிட்டவர்களிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்திரன் சிலை தொடர்பாக இன்னும் இரண்டு நாட்களுக்கு ஆய்வு மேற்கொள்ளப்படும் எனவும், அதன் பிறகே சிலை குறித்த தகவல்கள் முழுமையாக தெரியவரும் என சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தெரிவித்தனர்.