தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள அனைத்து துறை அலுவலர்களும் தயார் நிலையில் இருக்க வேண்டும்  மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலத்துறை இயக்குநர் ஆனந்த் அறிவுறுத்தி உள்ளார்.


தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் வளாகத்தில் மாவட்ட பேரிடர் மேலாண்மை சார்பில் வடகிழக்கு பருவமழை 2023 குறித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பான மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்பு குழு ஆய்வு கூட்டம் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் ஆதிதிராவிடர்,பழங்குடியினர் நலத்துறை இயக்குநர் ஆனந்த் தலைமை நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் தீபக் ஜேக்கப் முன்னிலை வகித்தார்.

இக்கூட்டத்தில் வடகிழக்கு பருவமழையினை முன்னிட்டு அனைத்து துறை அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இக்கூட்டத்தில் ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலத்துறை கண்காணிப்பு இயக்குநர் மற்றும் அலுவலர் பேசியதாவது:  


தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதை முன்னிட்டு முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் சார்பில் மேற்கொள்ள தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. அதனடிப்படையில் தஞ்சாவூர் மாவட்டத்தில் மாவட்ட பேரிடர் மேலாண்மை குழு கூட்டம் மற்றும் மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் நடத்தப்பட்டது.





இதில் அக்டோபர் மாதம் முதல் தேதியிலிருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம், சார் ஆட்சியர் மற்றும் வருவாய் கோட்ட அலுவலகங்கள், வட்டாட்சியர் அலுவலகங்கள் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு அனைத்து தகவல் தொடர்பு சாதனங்களுடன் சுழற்சி முறையில் பணியாளர்களை நியமித்து மீட்பு மற்றும் நிவாரண பணிகளை கண்காணிக்க வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கட்டணமில்லா தொலைபேசி அமைத்திடவேண்டும் என்றும் வருவாய்த்துறையினர் தலைமையில் மண்டல அளவிலான குழுக்கள் நியமித்து ஒவ்வொரு குழுவும் பாதிக்கப்பட்ட பகுதிகளை கண்காணிக்க வேண்டும் என்றும் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது;

மேலும் பொதுப்பணித் துறை, ஊரக வளர்ச்சி துறை, மாநகராட்சி, நகராட்சி நிரவாகம், பேரூராட்சிகள் மருத்துவத் துறை மற்றும் பொது சுகாதாரத் துறை. வருவாய் துறை, தீயணைப்பு துறை, நெடுஞ்சாலைத் துறை. தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் கால்நடை பராமரிப்பு துறை, மீன்வளத் துறை, தமிழ்நாடு மின்சார வாரியம் மற்றும் மோட்டார் வாகன பராமரிப்பு துறை ஆகிய அனைத்து துறை அலுவலர்களும் பேரிடர் காலங்களில் ஏற்படும் பாதிப்புகளை எல்லா வகையிலும் சமாளிப்பதற்கும் தயாராக இருக்க வேண்டும்.

அதேபோல் நிவாரணப் பணிகளில் எந்தவித தொய்வும் ஏற்படாத வகையிலும் உயிர்சேதம் கால்நடை சேதம் ஆகியவை ஏற்படாதவாறு தேவையான தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்றும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள அனைத்து துறை அலுவலர்களும் தயார் நிலையில் இருக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

இந்த கூட்டத்தில் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) ஸ்ரீகாந்த், மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன் மாநகராட்சி ஆணையாளர்கள் மகேஷ்வரி (தஞ்சாவூர்),லெட்சுமணன் (கும்பகோணம்) நீர்வளத்துறை அலுவலர்கள், அனைத்து வருவாய் கோட்டாட்சியர்கள், வட்டாட்சியர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.