தஞ்சாவூரை சேர்ந்தவர் காமராஜ். தமிழக மக்கள் முன்னேற்றக் கழக மாவட்டச் செயலராக பதவி வகித்து வருகின்றார். காமராஜ், பழைய கோர்ட் சாலையிலுள்ள காம்பளக்ஸில், தனது அலுவலகத்தை வைத்து நடத்தி வருகின்றார். இவருக்கு கோபு (எ) கலியமூர்த்தி என்பவர் உதவி வழக்கறிஞராக இருந்து வருகிறார். கடந்த செப்டம்பர் மாதம் 16 ஆம் தேதி அதிகாலை, காவல் துறை ஐஜியின் தனிப்படை எஸ்ஐ முத்துகுமார் மற்றும் போலீசார், அதிரடியாக, வழக்கறிஞர் காமராஜ் அலுவலக கதவினை உடைத்து கொண்டு உள்ளே நுழைந்து, அங்குள்ள கண்ணாடி பொருட்கள், மேஜை நாற்காலி உடைத்துள்ளனர். மேலும் கம்ப்யூட்டரிலுள்ள ஹார்டுடிஸ்க், வழக்கிற்குரிய ஆவணங்கள் உள்ளிட்டவைகளை எடுத்து கொண்டு சென்று விட்டனர்.  இது குறித்து தகவலறிந்து வந்த வழக்கறிஞர்கள் காமராஜ் மற்றும் உதவியாளர் கோபு, அலுவலகத்தில் உள்ள பொருட்கள் உடைந்திருப்பது முக்கிய ஆவணங்கள் மற்றும் ஹார்டு டிஸ்குகள் காணாமல் போனது தெரிந்து அதிர்ச்சியடைந்தனர். பின்னர் அப்பகுதியில் விசாரித்த போது, சாதாராண உடையில் வந்த ஐஜி தனிப்படை போலீசார், இந்த சம்பவங்களை செய்துள்ளனர் என்று தெரிய வந்துள்ளது.




பின்னர் வழக்கறிஞர் காமராஜ், தஞ்சாவூர் தெற்கு காவல் நிலையம், மாவட்ட காவல் துறை எஸ்பி ரவளிப்பிரியா காந்தபுனேனி, மாவட்ட கலெக்டர் உள்ளிட்ட அனைத்து உயரதிகாரிகளுக்கு புகார் அளித்தார்.  ஆனால் புகார் தொடர்பாக, போலீசார் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்காமல் விட்டு விட்டனர்.  இதனால் ஆத்திரமடைந்த வழக்கறிஞர்கள், கடந்த 23 மற்றும் 24 ஆம் தேதி அன்று நீதிமன்ற அலுவலகம் முன்பு, போலீசாரை கண்டித்தும், நீதிமன்றம் புறக்கணித்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், புகாரின் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில், காமராஜின் உதவியாளரான வழக்குரைஞர் கோபு திருவையாறு காவல் நிலையத்தில் ஆஜராக வேண்டும் என அழைப்பானை வழங்கப்பட்டது. இதனால், அதிருப்தியடைந்த வழக்குரைஞர்கள் கடந்த செப்டம்பர் 29 ஆம் தேதி முதல் மூன்று நாள்களுக்கு நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.  இதன் பிறகும் நடவடிக்கை எடுக்கப்படாததால், தஞ்சாவூர் ஒருங்கிணைந்த நீதிமன்றம் அருகேயுள்ள ரவுண்டானா பகுதியில் வழக்குரைஞர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால்,  அப்பகுதியில் சில மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சாலை மறியலில் ஈடுபட்ட 35 வழக்கறிஞர்களை  தெற்கு காவல் நிலைய போலீசார் கைது செய்தனர்.




இது குறித்து வழக்கறிஞர் காமராஜ் கூறுகையில், தஞ்சாவூர் மாவட்டம், நடுக்காவேரி காவல் நிலையத்திற்குட்பட்ட வழக்கு தொடர்பாக, நான் ஆஜராகி வருகின்றேன். எனது அலுவலகத்தில் அந்த வழக்குரிய குற்றம்சாட்டப்பட்டவர்கள், எனது அலுவலகத்திற்கு இருப்பதாக, தவறாக நினைத்து கொண்டு, ஐஜி தனிப்படை எஸ்ஐ முத்துகுமார் மற்றும் போலீசார், எனது அலுவலக கதவினை உடைத்து கொண்டு உள்ளே நுழைந்து, அங்கிருந்த கண்ணாடிகள், ஹார்டுடிஸ்க் மற்றும் முக்கியமான ஆவணங்கள், அலுவலகத்திற்குள் இருந்த 1.50 லட்சம் ரொக்க பணத்தை எடுத்து சென்று விட்டனர். இது குறித்த அனைத்து அதிகாரிகளிடம் புகாரளித்தும், நடவடிக்கை எடுக்காமல் இருந்து வருகின்றனர். போலீசார் மீது நடவடிக்கை எடுக்க கோரி, தஞ்சாவூர் நீதிமன்ற வாயிலில் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில், போலீசாரை கண்டித்து மூன்று முறை ஆர்ப்பாட்டமும், நீதிமன்றம் புறக்கணிப்பும் நடத்தப்பட்டது. ஆனால் இதுநாள் வரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியம் காட்டி வருகின்றனர். வழக்கறிஞரை தாக்கி, பணம் மற்றும் எனது அலுவலகத்திலிருந்து முக்கிய ஆவணங்களையும் எடுத்து சென்றது மட்டுமில்லாமல், பல்வேறு போராட்டங்கள் செய்தும், நடவடிக்கை எடுக்காமல் இருப்பது, வழக்கறிஞர்களை அவமதிப்பதாகும். எனவே, எஸ்ஐ முத்துக்குமார் மற்றும் போலீசார் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கும் வரை, கண்டன காலவரையற்ற நீதிமன்றத்தை புறக்கணித்து, அடுத்த கட்ட போராட்டம் அறிவிக்கப்படும். போலீசாரின் இந்த செயலுக்கு உரிய நடவடிக்கை எடுக்கும் வரை போராட்டங்கள் தொடரும் என்றார்.