தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல மேலாளர் பி. உமாமகேஸ்வரி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், இந்த ஆண்டுக்கான கொள்முதல் பருவம் அக்டோபர் ஒன்றாம் ஆம் தேதி தொடங்கிவிட்டது. அக்டோபர் 2 மற்றும் 3 ஆம் தேதிகளில் விடுமுறை நாள்களாக இருந்தாலும், விவசாயிகளின் நலன் கருதி கொள்முதல் செய்யப்பட்டது. இந்த மாதத்தில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளிலும் கொள்முதல் செய்யப்படும். தொடர்ச்சியாக கொள்முதல் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாவட்டத்தில் தற்போது 244 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. இவற்றில் திங்கள் கிழமை மட்டும் 4,000 டன்கள் நெல் கொள்முதல் செய்யப்பட்டது. அக்டோபர் 1ஆம் தேதி முதல் 4 ஆம் தேதி வரை 10,000 டன்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
மாலை நேரத்தில் மழை வருவதால், விவசாயிகளின் நலன் கருதி காலை 7 மணி முதல் நெல் கொள்முதல் செய்யப்படுகிறது. ஒவ்வொரு நிலையத்திலும் ஆயிரம் மூட்டைகள் கொள்முதல் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. 17 சதவீதம் ஈரமாக இருந்தாலும் கொள்முதல் செய்ய உள்ளோம். விவசாயிகள் பாதிக்கப்படாமல் இருப்பதற்காகத் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் முழுவீச்சில் நடவடிக்கை எடுத்து வருகிறது. இணையவழி முன் பதிவு முறை நடைமுறைக்கு வந்தாலும், விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்று பழைய நடைமுறையும் தொடர்கிறது. முதலில் கொண்டு விவசாயிகளின் நெல் கொள்முதல் செய்யப்படுகிறது.
லட்சக்கணக்கான ஏக்கரில் சாகுபடி நடந்துள்ளதால், சாலையில் கொட்டினாலும், ஈரம் உடனடியாக குறைந்துவிடும். கொள்முதல் நிலையங்களில் 40 ரூபாய் லஞ்சம் வாங்குவதாக தகவல் வருவதையடுத்து, வாரந்தோறும் அலுவலர்கள் கூட்டம் நடைபெற்று வருகின்றது. எங்களுக்கு இது போன்ற தகவல்கள் வந்தால், உடனடியாக, தொடர்புடைய கொள்முதல் நிலையத்திற்கு நேரிடையாக சென்று அங்குள்ள பணியாளரை பணியிடை நீக்கம் செய்ப்படுவார்கள். மேலும் இதில் தொடர்புடைய பட்டியல் எழுத்தர், உதவுபவர்கள் உடனடியாகப் பணியிலிருந்து விடுவிக்கப்படுவர். நெல் மூட்டைகள் 40 கிலோவிற்கு மேல் அதிகமாக பிடித்தம் செய்து இருந்தால், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
ஒரு நெல் உலர்த்தும் இயந்திரத்தை வேளாண் பொறியியல் துறை வழங்கியுள்ளது. இந்த இயந்திரம் ஒரத்தநாடு, புதூர் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் வைக்கப்படுகிறது. விவசாயிகள் கொண்டு வரும் நெல் காய வைத்து தரப்படும். இது, வெற்றிகரமாக அமைந்தால், பிற மாவட்டங்களிலிருந்து நெல் உலர்த்தும் இயந்திரங்கள் வரவழைக்கப்படும். குறுவை பருவத்தில் 3.60 லட்சம் டன்கள் கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில், இதுவரை 1.30 லட்சம் டன்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இன்னும் 2.30 லட்சம் டன்கள் கொள் முதலாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, அக்டோபர், நவம்பர் மாதங்களில் கொள்முதல் பணி உச்சக்கட்டத்தை எட்டும் என எதிர்பார்க்கிறோம். ஆன்லைன் மூலம் விவசாயிகள் கூடுதலாக நெல் மூட்டைகளை பதிவு செய்து, விற்பனை செய்து கொள்ளலாம். இந்தப் பருவத்துக்குத் தேவையான அளவுக்கு சாக்குகள் நிறைவாக இருப்பு உள்ளதால், தட்டுப்பாடு இல்லை. மாவட்டத்தில் 3 நடமாடும் கொள்முதல் குழுக்கள் 5ஆம் தேதி முதல் பணியை தொடங்கியுள்ளன. இக்குழுக்கள் கள ஆய்வு செய்து, கொள்முதல் செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளும் என்றார்.