தமிழ்நாட்டில் அடுத்த நான்கு நாட்களுக்கு மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தேனி, திண்டுக்கல், தென்காசி மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது மேலும் டெல்டா மாவட்டங்கள் சிவகங்கை, கன்னியாகுமரி, கோவை நீலகிரி, ஈரோடு, திருச்சி ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் சென்னையை பொருத்தவரை நகரின் சில பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவிக்கப்பட்டுள்ளது தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் சூறாவளி காற்று வீசக் கூடும் என்பதால் இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. 


 




 

இந்நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் நள்ளிரவு முதல் விடிய விடிய மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கன மழை கொட்டி தீர்த்தது. குறிப்பாக திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி, நீடாமங்கலம், திருவாரூர், குடவாசல் உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழை முதல் கனமழை வரை பல்வேறு பகுதிகளில் கொட்டி தீர்த்தது.  திருத்துறைப்பூண்டியில் 2.0 மில்லி மீட்டரும் மன்னார்குடியில் 8 மில்லி மீட்டரும் திருவாரூரில் 8.3 மில்லி மீட்டரும் நன்னிலத்தில் 7.6 மில்லி மீட்டரும் மழை அளவு பதிவாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தொடர்ந்து திருவாரூர் மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையின் காரணமாக குறுவை சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் மிகுந்த வேதனை அடைந்துள்ளனர்.



 

திருவாரூர் மாவட்டம் முழுவதும் ஒரு லட்சத்து 36 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் குறுவை சாகுபடி பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் 60 சதவீத விவசாயிகள் தாங்கள் பயிரிட்ட நெல் பயிர்களை அறுவடை செய்து விட்ட நிலையில், மீதமுள்ள 40 சதவீத விவசாயிகளின் நெல் பயிர்கள் கடந்த சில தினங்களாக பெய்து வரும் கனமழையின் காரணமாக மிகுந்த பாதிப்படைந்துள்ளது. அறுவடைக்கு தயாராக இருந்த நெல் பயிர்கள் அனைத்தும் மழை நீரில் மூழ்கி தற்பொழுது முளைக்க தொடங்கியுள்ளன. குறிப்பாக திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி பகுதிகளில் அறுவடைக்கு தயாராக இருந்த பயிர்கள் அனைத்தும் மழை நீரில் மூழ்கியுள்ளன. இதனால் விவசாயிகள் மிகுந்த வேதனை அடைந்துள்ளனர். தாங்கள் செய்த செலவு தொகையை கூட தற்பொழுது எடுக்கமுடியாத நிலை உருவாகியுள்ளதாகவும் ஏற்கனவே குறுவை நெல் பயிருக்கு காப்பீடு இல்லாத சூழலில் வேளாண்துறை அதிகாரிகள் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரடியாக சென்று ஆய்வு செய்து விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென விவசாயிகள் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.