தஞ்சாவூர்: தஞ்சாவூர் அன்னை சத்யா விளையாட்டு அரங்கத்தில் உள்ள பகுதிகளில் ஆயிரம் மரக்கன்றுகளை நடுவது என்று நடை பயிற்சி சங்க கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.


மரங்கள் ஆக்ஸிஜனை உற்பத்தி செய்யும் மையங்கள்


மரங்கள் மனித சமுதாயத்துக்கு பல்வேறு பலன்களை அளிக்கின்றன. மரங்கள் மற்றும் மரங்கள் அடர்ந்த காடுகள் மனிதன் சுவாசிக்க உதவும் ஆக்ஸிஜனை உற்பத்தி செய்யும் மையமாகத் திகழ்கின்றன. தூசி, புகை, காற்றில் கலந்திருக்கும் பல்வேறு நச்சுப்பொருள்களை மரத்தின் இலைகள் வடிகட்டி விடுகின்றன.


மழை நீரினாலும், காற்றினாலும் மண்ணரிப்பு ஏற்படுகிறது. இதனால் நம் நாட்டில் ஆண்டுதோறும் பல மில்லியன் டன் அளவுக்கு வளமான மண் அடித்துச் செல்லப்படுகிறது. அவை மேடாக குவியவும், ஆற்று நீரோடு அடித்துச் சென்று கடலில் கலக்கவும் நேரிடுகிறது. இதனால் மண்வளம் பாதிக்கப்படுகிறது. மண்வளம் பாதுகாக்க அடர்ந்த மரங்கள் உதவுகின்றன. ஒவ்வொரு மரத்தின் வேரும் மண்ணை இறுகப்பற்றிக் கொள்கிறது.




பூமியை மிதமான வெப்பநிலையில் வைத்திருக்க செய்கிறது


புவி வெப்பமயமாவதற்கு காரணமான முதலிடத்தில் இருக்கும் கரியமில வாயுவை உள்கிரகித்து பூமியை மிதமான வெப்பநிலையில் வைத்திருப்பதில் மரங்களின் பங்கு முதன்மையானது. மரங்கள் பறவைகளின் வாழ்விடங்களாக உள்ளன. பறவைகள் பூச்சிகளை உணவாக உண்பதால் பூச்சி இனங்கள் பெருகாமல் கட்டுக்குள் வைத்திருக்க உதவுகின்றன. இவ்வாறு மரங்களால் பல்வேறு நன்மைகள் உள்ள நிலையில் மனிதன் சுய நலனுக்காக அவை பெருமளவு அழிக்கப்பட்டு விட்டன. தொடர்ந்து அழிக்கப்பட்டும் வருகின்றன.


இயற்கை பேரழிவுக்கு காரணம்


சாலைகள் அமைத்தல், சாலை விரிவாக்கம், தொழிற்சாலைகள், கட்டடங்கள், நீர் மின் உற்பத்தி நிலையங்கள் அமைப்பது, விமான நிலையங்கள், சுரங்கப்பணிகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக ஏராளமான மரங்கள் வெட்டப்பட்டும், காடுகள் அழிக்கப்பட்டும் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. மரங்கள் மற்றும் காடுகளை அழிப்பதால் அவற்றால் கிடைத்து வந்த பயன்கள் மறைந்து எதிர்மாறான விளைவு ஏற்படும். பருவநிலை மாற்றம், இயற்கைப் பேரழிவு போன்றவை அதிகரித்துள்ளதை இதற்கு உதாரணமாகக் கூறலாம்.


காடுகளில் அடர்த்தியான மரங்கள் இருப்பதால் மண்வளம் அதிக அளவு பாதுகாக்கப்படுகிறது. பூமியின் மேல் விழும் மழையின் வேகத்தை, காட்டிலுள்ள தாவரங்கள் தங்கள் மீது தாங்கிக் கொள்கின்றன. மழை நேரடியாக பூமியின் மீது விழுந்தால் நிலப்பரப்பின் மேல் மண் தண்ணீரோடு அரித்துச் செல்லப்பட்டு நிலம் பலவீனம் அடையும். அப்படித் தொடர்ந்து பலவீனம் அடைந்தால் நிலச்சரிவு ஏற்படும். அவை நிகழாமல் காடுகளில் உள்ள தாவரங்கள் காப்பாற்றுகின்றன.


1000 மரக்கன்றுகள் நட முடிவு


இப்படி முக்கியத்துவம் உள்ள மரங்களை வளர்ப்பது இக்காலக்கட்டத்தில் மிக தேவையான ஒன்றாகும். அப்படிப்பட்ட மரக்கன்றுகள் 1000 நட சத்யா நடை பயிற்சி சங்க கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. தஞ்சாவூர் சத்யா நடை பயிற்சி சங்க கூட்டம் ராஜப்பா நகர் முதல் தெருவில் உள்ள சங்க அலுவலகத்தில் நடைபெற்றது.


சங்கத்தின் தலைவர் சீனிவாசன் முன்னிலை வகித்தார். கௌரவ தலைவர் செல்வம் தலைமை வகித்தார். செயலாளர் ஜெயக்குமார் வரவேற்றார்.  கூட்டத்தில் சத்யா அரங்கத்திற்கு வருபவர்கள் இரண்டு சக்கர, நான்கு சக்கர வாகனங்களை அதற்குரிய இடத்தில் நிறுத்த வேண்டும்.


சத்யா அரங்கத்தில் உள்ள இடத்தில் ஆயிரம் மரக்கன்றுகளை இந்த மாதத்தில் நடுவது, அது சம்பந்தமாக மாவட்ட ஆட்சியர், விளையாட்டு அலுவலரை சந்திப்பது, முன் நுழைவாயில் பகுதியில் முதலுதவி பெட்டி வைப்பது, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்குவது, தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டுள்ள 8 கிலோமீட்டர் நடைபயணத்தில் அனைத்து நடைபயிற்சியாளரும் மாதம் ஒருமுறை கலந்து கொண்டு சிறப்பிப்பது, சிசிடிவி கேமரா வைப்பது, நடை பயிற்சி சங்க பெயர் பலகையில் தினம் தினம் திருக்குறள் எழுதி வைப்பது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 


கூட்டத்தில் துணைத் தலைவர் ஜெயக்குமார், ஜெயபாலன், ராஜன், செயற்குழு உறுப்பினர்கள் ரவிச்சந்திரன், ராஜசேகரன், முரளி, சுப்பிரமணியன், சுகுமார், நாகராஜன் உள்ளிட்ட பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். முடிவில் பொருளாளர் பார்த்தசாரதி நன்றி கூறினார்.