தஞ்சாவூர்: மும்முனை மின்சாரம் சரிவர கிடைக்காத காரணத்தால் தண்ணீர் பாய்ச்ச முடியாத நிலை மற்றும் கடும் வெப்ப அலையால் தஞ்சை மாவட்டத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள வாழைகள் கருகி வருகின்றன. இதனால் இலைகள் மற்றும் வாழைத்தாரும் பாதிக்கப்பட்டுள்ளதால் காவிரி கரையோர விவசாயிகள் கடும் வேதனையில் உள்ளனர்.


10 ஆயிரம் ஏக்கருக்கு மேல் வாழை சாகுபடி


தமிழகத்தில் வாழை அதிகம் பயிரிடப்படும் மாவட்டங்களுள் தஞ்சையும் ஒன்று. அதிலும் குறிப்பாக தஞ்சை மாவட்டத்தில் காவிரி கரையோர பகுதியான திருவையாறு, திருக்காட்டுப்பள்ளி, பூதலூர், வடுகக்குடி, திருப்பூந்துருத்தி மேலஉத்தமநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் மட்டும் 10 ஆயிரம் ஏக்கருக்கு மேல் வாழை சாகுபடி செய்யப்பட்டுள்ளன. இங்கு விளைவிக்கப்படும் வாழைத்தார்கள் தஞ்சை மாவட்டம் மட்டும் அல்லாது திருச்சி, தேனி உள்ளிட்ட பகுதிகளுக்கும் அனுப்பி வைக்கப்படுகின்றன.




சென்னைக்கு செல்லும் வாழை இலைகள்


இதே போன்று வாழை இலைகள் சென்னைக்கு அனுப்பப்படுகின்றன. தினமும் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட வாழை இலைகள் பஸ்கள் மற்றும் வாகனங்கள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன. இதே போன்று வாழை மட்டைகள் காய வைக்கப்பட்டு பூ மாலைகள் கட்டுவதற்காக தமிழகம் முழுவதும் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன.


கோடை வெப்ப அலையால் பாதிப்பு


தற்போது கோடை வெயில் உக்கிரமாக உள்ளது. அதுவும் அக்னி நட்சத்திரம் தொடக்கத்தில் இருந்து 104 டிகிரிக்கும் குறையாமல் வெயில் கொளுத்தி வருகிறது. இந்த வெப்ப அலை காரணமாக வாழை சாகுபடியும் பாதிக்கப்பட்டுள்ளது. தஞ்சை மாவட்டத்தில் மேட்டூர் அணையில் போதிய தண்ணீர் இல்லாததால் ஜனவரி மாதம் மூடப்பட வேண்டிய மேட்டூர் அணை முன்னதாகவே மூடப்பட்டு விட்டது.மேலும் பருவமழையும் போதிய அளவு பெய்யாததால் வறட்சி நிலவி வருகிறது. இதனால் நிலத்தடி நீர் மட்டும் குறைந்து கொண்டே வருகிறது. மேலும் ஏரி, குளம் உள்ளிட்ட நீர் நிலைகளும் வறண்டு காணப்படுகின்றன.


3 நாட்களுக்கு ஒருமுறை நீர் பாய்ச்சும் நிலை


இதனால் ஆழ்துளை கிணறு மூலம் விவசாயத்துக்கு தண்ணீர் முறையாக கிடைப்பது இல்லை. மேலும் வழக்கமாக வாழை சாகுபடிக்கு வாரத்திற்கு ஒருமுறை தண்ணீர் பாய்ச்சப்படும். ஆனால் தற்போது அடிக்கும் வெயில் காரணமாக 3 நாட்களுக்கு ஒருமுறை தண்ணீர் பாய்ச்ச வேண்டி உள்ளது. ஆனால் மும்முனை மின்சாரம் 12 மணி நேரம் மட்டுமே விவசாயத்துக்கு வழங்கப்படுவதால் தண்ணீர் பாய்ச்சுவதும் சிரமமாக உள்ளது. நிலத்தடி நீர்மட்டமும் கீழே சென்று விட்டதால் ஆழ்துளை கிணறுகளில் தண்ணீம் குறைந்த அளவே வருகின்றன.


கருகி சருகாகும் வாழை இலைகள்


தற்போது ஏற்பட்டுள்ள வெப்ப அலை காரணமாக இலைகள் கருகி வருகின்றன. மேலும் வாழை இலை சுருட்டலும் காணப்படுகின்றன. வாழை இலைகள் வெப்பம் தாங்காமல் பழுப்பு ஏற்பட்டு காய்ந்து சுருங்குவதால் வாழைத்தண்டுகளும் பாதிக்கப்பட்டு வாழைத்தார் இடையில் முறிந்து விழுந்த வண்ணம் உள்ளன. அவ்வாறு முறிந்து விழும் வாழைத்தார்கள் வெம்பி எந்த பிரயோஜனத்துக்கும் உதவாமல் போய் விடுகிறது. மேலும் வாழை இலைகள் கருகிவருவதால் இலைகளும் பாதிக்கப்படுகின்றன. 


20 லட்சம் இலைகள் வெட்டப்படும்


வழக்கமாக காவிரி கரையோர பகுதிகளில் மட்டும் தினமும் 20 லட்சம் வாழை இலைகள் வெட்டப்பட்டு வந்த நிலையில் தற்போது 10 லட்சம் இலைகள் கூட கிடைப்பது அரிதாக உள்ளது. இது குறித்து தஞ்சை மாவட்ட வாழை விவசாயிகள் சங்க தலைவர் மதியழகன் கூறியதாவது: தமிழகத்தில் 1 லட்சம் எக்டேர் வாழை பயிரிடப்படுகிறது. 45 மில்லியன் டன் வாழைப்பழம் விளை விக்கப்படுகிறது. தஞ்சை மாவட்டத்தில் மும்முனை மின்சாரம் பற்றாக்குறை மற்றும் வெப்ப அலை காரணமாக வாழை சாகுபடி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.


விவசாயிகளுக்கு கடும் இழப்பு 


கடந்த சில வாரங்களுக்கு முன்பு 1 கிலோ வாழைப்பழம் ரூ.30-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் நேற்று ரூ.13க்கு விற்பனை செய்யப்பட்டது. ஏற்கனவே வெப்பத் தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு இது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. வாழைமரம் குலைதள்ளி வெட்டுவதற்கு 10 மாதங்கள் ஆகும். ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் விவசாயிகளுக்கு அதிக லாபம் கிடைக்கும். இந்த முறை கடும் இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கினாலும், வெயிலின் காரணமாக ஏற்படும் இழப்பை எதிர்கொள்ள விவசாயிகளுக்கு எந்தநுட்பமும் இல்லாததால், அதற்கான தீர்வுகளை முன்வைக்கும் திட்டத்தை அரசு செயல்படுத்த வேண்டும். 15 ஆண்டுகளுக்கு முன்பு ஒருமுறை இது போன்ற நிலை ஏற்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.