தஞ்சாவூர்:  ஆகஸ்ட் 15ம் தேதி டெல்டா மாவட்ட பாசனத்துக்காக மேட்டூர் அணையை திறக்கலாம் என்று மூத்த வேளாண் வல்லுனர் குழு தமிழக அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. இதுகுறித்த கையேடுகளையும் குழுவினர் வெளியிட்டனர்.


மேட்டூர் அணை பாசன பகுதிக்கான பயிர் சாகுபடியும், நீர் வழங்கல் திட்டமும் குறித்து ஆண்டுதோறும் தமிழ்நாடு மூத்த வேளாண் வல்லுநர் பி.கலைவாணன் தலைமையிலான குழுவினர் தமிழக அரசுக்கு பரிந்துரை வழங்கி வருகின்றனர். அதன்படி 19-வது ஆண்டாக இந்தாண்டு தமிழக அரசுக்கு வழங்கிய பரிந்துரை குறித்து தஞ்சாவூரில் கையேடுகளை வெளியிட்டு இக்குழுவை சேர்ந்த ஓய்வு பெற்ற வேளாண் மூத்த வல்லுநர்கள் கலைவாணன், பழனியப்பன், கலியமூர்த்தி ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது:


மேட்டூரில் நீர் இருப்பு குறைவு


மேட்டூர் அணையில் தற்போது நீர் இருப்பு என்பது குறைவாகவே உள்ளது. இந்த தண்ணீரைக் கொண்டு குறுவை சாகுபடியை மேற்கொள்வது என்பது கடினம். உச்ச நீதிமன்றம் தீர்ப்பின்படி ஜூன் முதல் ஜனவரி வரை 167.25 டிஎம்சி தண்ணீர் மேட்டூர் அணைக்கு தண்ணீர் வந்து சேர வேண்டும். இத்துடன் ஆரம்ப இருப்பையும் சேர்த்தால் 182 டிஎம்சி தண்ணீர் கிடைக்கும்.




230 டிஎம்சி தண்ணீர் தேவை


தமிழ்நாட்டில் 12 மாவட்டங்களும், காரைக்கால் பகுதியும் பயனடைகின்றன. இதில் இயல்பாக 20 லட்சம் ஹெக்டர் குறுவையும், 3.75 லட்சம் ஹெக்டர் சம்பாவும், 1.65 லட்சம் ஹெக்டர் தாளடியும், 30000 ஹெக்டரில் வாழையும், கரும்பும் சாகுபடி செய்யப்படுகின்றன. ஆக 740 லட்சம் ஹெக்டர் நெல் சாகுபடியை, நாற்று விட்டு நடவு செய்தால் 300 டி.எம்.சி தேவைப்படுகிறது. இது இவ்வாண்டில் நடைமுறைப்படுத்த சாத்தியம் இல்லை. எனினும், குறுவை, சம்பா பருவங்களில் 50% பரப்பில் நேரடி நெல் விதைப்பு செய்து, மற்ற பகுதியில் ஆற்று நீர், மழை நீரை பயன்படுத்தினால் சுமார் 230 டி.எம்.சி நீர் தேவைப்படும். இதற்கு ஜூன் மாதம் ஆரம்ப இருப்பாக குறைந்தது 65 டி.எம்.சியாவது இருக்க வேண்டும். எனவே, இம்முறையை கையாள்வதும் சாத்தியமில்லை. எனவே, இருபோக சாகுபடிக்கு பதிலாக ஒருபோக சாகுபடியாக செயல்படுத்த வேண்டும். 


நெற்பயிர்கள் பூக்கும் தருணத்தில் பாதிப்பு ஏற்படும்


காவிரி டெல்டா மாவட்டங்களில் அக்டோபர் 15 முதல் டிசம்பர் 15 வரை வடகிழக்கு பருவ காலத்தில் தொடர் மழை இருக்கும் என்ற பட்சத்தில் சாகுபடி செய்தால், நெற்பயிர்கள் பூக்கும் தருணத்தில் பாதிப்பு ஏற்படும். இதில் நிலத்தடி நீர் வசதியுள்ள 75 ஆயிரம் ஹெக்டரில் மட்டும் குறுவை சாகுபடி செய்யப்படும் விடுபட்ட குறுவை சாகுபடி பரப்பும் சேர்த்து, 5 லட்சம் ஹெக்டரில் சம்பா சாகுபடி செய்யப்படும். இதில் 50 விழுக்காடு பரப்பில் நேரடி நெல் விதைப்பு முறையை மேற்கொண்டால், 185 டி.எம்.சி நீரை வைத்தே நடப்பு சாகுபடியை மேற்கொள்ள முடியும். இதற்காக எப்போது மேட்டூர் அணையை திறப்பது என்பது முக்கியம்.


காவிரி டெல்டா பகுதியில் அக்டோபர் 15 இல் இருந்து டிசம்பர் 15 வரை, வடகிழக்கு பருவ காலத்தில் தொடர் மழையாகவும், காற்றழுத்த தாழ்வு பகுதியாகவும், புயலாகவும் மாறி மழை பெய்கிறது. இந்த இரண்டு மாத காலங்களில் நாற்று விடும் பணி, நடவு பணி, அறுவடை பணி போன்றவற்றை செய்ய முடியாது மேலும் நெற்பயிர்கள் பூக்கும் தருணத்தில் இருந்தால், மகரந்தங்கள் கழுவப்பட்டு மகசூல் இழப்பு ஏற்படும்.


விதைப்பு காலத்தை தேர்வு செய்ய வேண்டும்


எனவே, இவற்றை தவிர்க்க, விதைப்பு காலத்தை தேர்வு செய்ய வேண்டும். மேலும் நீண்டகால நெல் ரகங்களை ஆகஸ்ட் 15 முதல் செப்டம்பர் முதல் வாரத்துக்குள் விதைக்கப்பட வேண்டும். மத்திய கால ரகங்களை செப்டம்பர் மாதம் முழுவதும் விதைக்கலாம். ஜூலை 1 முதல் ஆகஸ்ட் 15ஆம் தேதி வரை எவ்வித சாகுபடியும் செய்யக்கூடாது. இதனை கருத்தில் கொண்டு நடப்பாண்டில் ஒருபோக சாகுபடிக்காக மேட்டூர் அணையை ஆகஸ்ட் 15-ம் தேதி அரசு திறக்க வேண்டும்.


அதிக பரப்பளவில் நேரடி விதைப்பு


எனவே, அணைத் திறப்பதற்கு முன்பாக அனைத்து ஆறுகள், வாய்க்கால்கள், நீர்நிலைகளை தூர்வாரி தயார் நிலையில் அரசு வைக்க வேண்டும். சம்பா பருவத்தில் நீரின் தேவையை குறைத்திட அதிக பரப்பளவில் நேரடி விதைப்பு செய்திட விவசாயிகளுக்கு அரசு ஊக்கமளிக்க வேண்டும். மேட்டூர் அணை 90 ஆண்டுகளில் மணல், கற்களால் அதன் நீர் கொள்ளளவு மிகவும் குறைந்துவிட்டது. எனவே அணையில் தேங்கியிருக்கும் சகதிகளையும், மணல்களையும் அகற்ற அரசு ஏற்பாடு செய்ய வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.