காரைக்கால் மாவட்டம் காசகுடிமேடு மீனவ கிராமத்தைச் சேர்ந்த அஞ்சப்பன் என்பவருக்கு சொந்தமான மீன்பிடிப்படகில் காரைக்கால் மீன்பிடி துறைமுகத்திலிருந்து கடந்த 24 ஆம் தேதி காலை காரைக்கால், மயிலாடுதுறை மாவட்டங்களைச் சேர்ந்த வீரக்குமார், அர்ஜுனன், விஜேந்திரன், கவி உள்ளிட்ட 11 மீனவர்கள் மீன் பிடிக்கச் சென்றுள்ளனர். நேற்று முன்தினம் இரவு கோடியகரைக்கு தென்கிழக்கே மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு திடீரென வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களின் படகில் ஏறி மீனவர்களை கண்மூடித்தனமாக தாக்கியதோடு அவர்களிடமிருந்த வாக்கி டாக்கி, வெள்ளி இடுப்பு செயின், திசை காட்டும் கருவி, செல்போன்கள் மற்றும் 5 லட்சம் மதிப்பிளான பிடித்த மீன்களையும் எடுத்துச் சென்றதோடு, இடுப்பில் கட்டி இருந்த வெள்ளி செயினை கழட்டி கொடுக்கும்படி ஐந்து மீனவர்களை கடுமையாக தாக்கியும், மீனவர்கள் 5 பேரை கடலில் தள்ளி விட்டுள்ளனர்.
கடலில் தள்ளி விடப்பட்ட மீனவர்கள் இரண்டு மணி நேரம் தத்தளித்து மீண்டும் படகில் எறியதாக வேதனையுடன் தெரிவித்தனர். படகிலிருந்த மீனவர்களின் மீன்பிடி வலைகளை கடலில் தூக்கி போட்டு சென்றுள்ளனர். நேற்று கரை திரும்பிய மீனவர்கள் காரைக்கால் அரசு பொது மருத்துவமனையில் முதலுதவி பெற்று சொந்த ஊரான மயிலாடுதுறைக்கு சென்றுள்ளனர். இலங்கை கடற்படை மீனவர்களை தாக்கிய சம்பவம் காரைக்கால் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மீனவர்களை தாக்கிய இலங்கை கடற்படைக்கு காரைக்கால் மீனவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளதோடு, மத்திய அரசு இந்த பிரச்சனையில் தலையிட்டு புதுச்சேரி மற்றும் தமிழக மீனவர்கள் கடலில் அச்சமின்றி மீன் தூய தொழில் செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்