தஞ்சாவூர்: பெயர் சொன்னால் போதும் பெருமையை உலகமே கூறும் என்பதை நிரூபிக்கும் வகையில் செயல்பட்டவர் மாமன்னன் ராஜராஜ சோழன். இவர் கட்டிய பெரிய கோயில் இன்றும் கட்டிடக் கலையின் பெருமையை பறை சாற்றிக் கொண்டு உள்ளது. இந்நிலையில் தஞ்சாவூரில் சோழர் கால அரண்மனை எங்கே இருந்தது என்ற கேள்வி ஆய்வாளர்கள் மத்தியில் இன்றும் தொடர்கிறது.
வரலாற்று சிறப்புகளை பெற்ற தஞ்சாவூர்
பிற்காலச் சோழர்களின் தலைநகராக விளங்கிய தஞ்சாவூர் பல வரலாற்றுச் சிறப்புகளைப் பெற்றது. சோழ மன்னன் விஜயாலயன் காலத்தில் தொடங்கி மாமன்னன் ராஜராஜ சோழன் காலத்தில் வளர்ச்சி பெற்று உயர்ந்த நிலையை எட்டியது என்றால் மிகையில்லை. மூன்றாம் குலோத்துங்கச் சோழன் இறப்புக்குப் பிறகு கி.பி. 1218ம் ஆண்டில் மாறவர்மன் சுந்தரபாண்டியன் சோழ நாட்டின் மீது படையெடுத்து தஞ்சாவூரைத் தீயிட்டு அழித்தான். இதில், அரண்மனை, மாளிகைகள், மண்டபங்கள் என அனைத்து கட்டடங்களும் இடித்து தரைமட்டமாக்கப்பட்டு, தீயிட்டு அழிக்கப்பட்டன. மீண்டும் மாலிக்காபூரின் படையெடுப்பின்போது இந்நகரம் மேலும் அழிவுக்கு உள்ளானது.
தற்போதுள்ள அரண்மனையை கட்டிய நாயக்கர்கள்
தற்போதுள்ள அரண்மனை நாயக்கர் காலத்தில் கட்டப்பட்டது. அதன் பிறகு வந்த மராட்டிய மன்னர்களும் இந்த அரண்மனையை விரிவுபடுத்தினர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனால், தஞ்சாவூரில் சோழர் கால அரண்மனை எங்கே இருந்தது என்ற கேள்வி ஆய்வாளர்கள் மத்தியில் தொடர்கிறது. இந்நிலையில் தஞ்சாவூரில் 1995ம் ஆண்டில் நடந்த 8வது உலகத் தமிழ் மாநாட்டின்போது அரண்மனை வளாகத்திலுள்ள மணிகோபுரத்தின் முன் உள்ள சிறிய நீர் நிறையும் பள்ளம் சுத்தம் செய்யப்பட்டது. அப்போது, சீன நாட்டு களிமண்ணால் செய்யப்பட்ட யாழி, கோழி, ஒட்டகம் ஆகிய பொம்மைகள், பீங்கான் பானை ஓடுகள், இரும்பு ஆணிகள், முக்கோண வடிவ செங்கல், இரும்பு ஆணிகள், முக்கோண வடிவச் செங்கல், இரும்புப் பூட்டு என 150க்கும் அதிகமான தொல்பொருட்கள் கிடைத்தன. இவை அனைத்தும் சுத்தம் செய்யப்பட்டு, சர்ஜா மாடியில் உள்ள மராட்டா அகழ்வைப்பகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
தவெக முதல் மாநாடு... போலீஸ் கேட்ட 21 கேள்விகள்... பதிலை தயார் செய்த தலைவர் விஜய்?
தூண்களின் எச்சம், கூரை ஓடுகள்
அரண்மனை வளாக மைதானத்தில் ஆண்டுதோறும் புத்தகத் திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. இத்திருவிழாவுக்கு அமைக்கப்படும் அரங்கத்துக்குள் மழை நீர் செல்வதைத் தடுப்பதற்காக ஏறத்தாழ ஒரு மீட்டர் ஆழத்துக்கு பள்ளம் தோண்டப்படுவது வழக்கம். அப்போது சுமார் 2 மீட்டர் ஆழத்தில் தூண்களின் எச்சம், கூரை ஓடுகள், செங்கற்களால் கட்டப்பட்ட சுவர் போன்றவை காணப்படுகின்றன.
நேர் வரிசையில் தொடரும் தூண்கள்
இதேபோல் கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற புத்தகத் திருவிழாவின்போதும் தோண்டப்பட்ட பள்ளத்தில் நாயக்கர், மராட்டியர் கால பானை ஓடுகள், கூரை ஓடுகள், சீன நாட்டு பானை ஓடுகள், செங்கற் கட்டடம், சுண்ணாம்பு பூச்சுடன் கூடிய கருங்கல் தூண்கள் காணப்பட்டன. கல் தூண்கள் சங்கீத மகால் பகுதியில் தொடங்கி மைதானத்தில் நேர் வரிசையில் தொடர்கிறது. இத்தூண்களுக்கு கீழே கட்டடங்களும் இருப்பதாகத் தெரிகிறது.
மராட்டியர் காலத்தில் செம்புறாங்கற்கள், செங்கல், சுண்ணாம்பு பூச்சு போன்றவற்றைப் பயன்படுத்தி கட்டப்பட்டது. கீழே உள்ள கட்டுமானத்தில் கருங்கல் தூண்கள் காணப்படுவதால், அவை சோழர் காலத்தைச் சார்ந்ததாக இருக்கும் என்று கருதுகின்றனர் வரலாற்று ஆய்வாளர்கள். இதை முழுமையாக ஆய்வு செய்தால் சோழர் காலம் பற்றிய தகவல்கள் கிடைக்கும் என ஆய்வாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
அரண்மனை, கோட்டையை அழித்த சுந்தர பாண்டியன்
சோழர்கள் இருந்த அரண்மனை, கோட்டை எல்லாமே இப்போது உள்ள இடத்தில்தான் இருந்திருக்க வேண்டும். இவற்றை மதுரை சுந்தரபாண்டியன் அழித்த பிறகு, பிற்காலத்தில் வந்த நாயக்கர்கள் தஞ்சாவூர் அருகேயுள்ள அய்யம்பேட்டையில் சிறிது காலம் தங்கி இந்த அரண்மனையைக் கட்டியுள்ளனர்.
பூமிக்கு மேல இப்போதுள்ள கட்டடங்கள் அனைத்தும் நாயக்கர்களும், மராட்டியர்களும் கட்டியவை. அதை யாரும் அழிக்கவில்லை. பூமிக்கு கீழே இருப்பது அதற்கு முன்பு ஆட்சி செய்தவர்களுடையதாகத்தான் இருக்க வேண்டும். அதனுடைய தொடர்ச்சிதான் சங்கீத மகால். அதனால்தான் இந்த மகால் பள்ளத்தில் உள்ளது. இதிலேயே சோழர் கால எச்சங்கள் உள்ளன. எனவே, அரண்மனை மைதானத்தில் அகழாய்வு செய்தால் சோழர் கால அரண்மனைக்கான சான்றுகள் நிறைய கிடைக்கும் என்கின்றனர் வரலாற்று ஆய்வாளர்கள்.