தஞ்சையில் காவி உடை அணிந்து வந்து பட்டப்பகலில் கோயில் வளாகத்தில் பெண்ணிடம் இருந்து 7 பவுன் சங்கிலியை பறித்தவரை வளைத்து பிடித்த பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.



தஞ்சை வெண்ணாற்றங்கரையில் நரசிம்ம பெருமாள் கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு தஞ்சையின் பல்வேறு இடங்களில் இருந்து தினமும் ஏராமானோர் வந்து சாமி தரிசனம் செய்து வழிபாடு நடத்துவது வழக்கம். நேற்று சனிக்கிழமை என்பதால் இக்கோயிலில் பக்தர் கூட்டம் அதிகளவில் இருந்தது.

இந்த கோயிலுக்கு தஞ்சை ரெட்டிபாளையம் சாலையை சேர்ந்த உமா (50) என்பவர் தனது உறவினர்களுடன் வந்தார். கோயிலில் வழிபாடு செய்த பின்னர் வெளியில் வந்து காரில் ஏற முயன்றார். அப்போது பின்தொடர்ந்து வந்த காவி உடை அணிந்த மர்மநபர் ஒருவர் உமாவின் கழுத்தில் இருந்த 7 பவுன் சங்கிலியை பறித்துக் கொண்டு பைக்கில் தப்பி செல்ல முயன்றார்.

இதனால் அசிர்ச்சி அடைந்த உமா, செயினை பறித்துக் கொண்டு ஓடுகிறான்... திருடன், திருடன் என்று கூச்சலிட்டார். உமாவின் அலறல் சத்தம் கேட்டு கோயிலுக்கு வந்த பக்தர்கள் மற்றும் அக்கம் பக்கத்தில் இருந்த பொதுமக்கள் திரண்டு வந்தனர். அந்த மர்ம நபர் சுதாரித்து தப்பி செல்வதற்குள் வேகமாக விரட்டி சென்று வளைத்து பிடித்தனர். பின்னர் அந்த நபரை கோயிலில் கட்டி வைத்து பொதுமக்கள் தர்ம அடி கொடுத்தனர். இதற்கிடையில் தஞ்சை மேற்கு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரா மற்றும் போலீசார் அங்கு விரைந்து அந்த நபரை மீட்டு போலீஸ் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்து சென்றனர். இதுகுறித்து உமா கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து சங்கிலியை பறித்த நபர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பஸ்சில் பெண்ணிடம் நகை பறிப்பு

திருவாரூர் மாவட்டம் அரித்துவார மங்கலத்தைச் சேர்ந்தவர் வேதவள்ளி, இவர் தஞ்சை நோக்கி அரசு பேருந்தில் வந்து கொண்டிருந்தார். தஞ்சை அருகே மாரியம்மன் கோவில் பகுதியில் பேருந்து வந்தபோது வேதவள்ளியின் கழுத்தில் கிடந்த இரண்டரை பவுன் சங்கிலியை இரண்டு பெண்கள் பறித்துள்ளனர். இதனால் வேதவள்ளி கத்தி கூச்சலிட்டார். உடனே சுதாரித்துக் கொண்ட மற்ற பயணிகள் இரண்டு பெண்களையும் பிடித்து தஞ்சை தாலுகா காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். பிடிபட்ட பெண்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள் கோவை மாவட்டம் சிங்காநல்லூர் பகுதியைச் சேர்ந்த மாரிமுத்து மனைவி முத்து (32) அதே பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் மனைவி தேவயானி (25) என்பது தெரியவந்தது.

இது குறித்து தஞ்சை தாலுகா போலீஸ் நிலையத்தில் வேதவள்ளி புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தேவயானி, முத்து இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.