மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி மற்றும் தரங்கம்பாடி தாலுகாக்களில் கடந்த 11ஆம் தேதி இரவு பெய்த அதீத கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் குடியிருப்புகளை தண்ணீர் சூழ்ந்ததுடன், பல ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த சம்பா, தாளடி நெற்பயிர்கள் தண்ணீரில் முழுமையாக மூழ்கி சேதமடைந்தது. இந்நிலையில் மழை பாதித்த பகுதிகளை கடந்த நவம்பர் 14 -ஆம் தேதி தமிழக முதல்வர் ஸ்டாலின் பார்வையிட்டார். தொடர்ந்து குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ஆயிரம் ரூபாய் நிவாரணம் அறிவிக்கப்பட்டு தற்போது வழங்கப்படுகிறது. ஆனால், இப்பகுதி குடியிருப்புகள் மற்றும் விவசாய விளைநிலங்களுக்கு நிவாரணம் அறிவிக்கப்படவில்லை. 





இந்நிலையில் இன்று காலை சீர்காழி புதிய பேருந்து நிலையத்தில் திரண்ட விவசாயிகள் அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு பொதுச் செயலாளர் பி.ஆர்.பாண்டியன் தலைமையில் சீர்காழி மற்றும் தரங்கம்பாடி தாலுகாவை பேரிடர் பாதித்த  பகுதியாக அறிவிக்க வேண்டும். குடும்ப அட்டைதாரர்களுக்கு  5,000 ரூபாய் வழங்க வேண்டும், வேலை இழந்த கூலி தொழிலாளர்களுக்கு 10,000 ரூபாய், அனைத்து விவசாயிகளுக்கும் ஏக்கருக்கு ரூபாய் 30,000 இழப்பீடு வழங்க வேண்டும். பயிர் காப்பீட்டுத் தொகையை 100 சதவீதம் வழங்க வேண்டும், என்பது போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி பேரணியாக வந்து சீர்காழி கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு சாலையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். 




இதனால் மயிலாடுதுறை - சிதம்பரம் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து சீர்காழி காவல் துணை கண்காணிப்பாளர் லாமேக் தலைமையில் காவல்துறையினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாமல் தோல்வி அடைந்தது. அதனை அடுத்து விவசாயிகள் தொடர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.  இரண்டரை மணி நேரம் போராட்டம் நீடித்த நிலையில், சீர்காழி வருவாய் கோட்டாட்சியர் அர்ச்சனா விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி கோரிக்கைகள் குறித்து அரசுக்கு தெரியப்படுத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். அதனை அடுத்து தர்ணாவில் ஈடுபட்ட விவசாயிகள் போராட்டத்தை விலகிக் கொண்டனர்.




முன்னதாக போராட்டத்தின் போது அவர்களுடைய உரையாற்றிய தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு பொதுச்செயலாளர் பி.ஆர். பாண்டியன், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை கடுமையாக சாடினார். கடந்த ஆட்சி காலத்தில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட நிவாரணங்களை முன்னுதாரணம் படுத்தி பேசியவர், சீர்காழி, தரங்கம்பாடி தாலுக்காக்களை பேரிடர் பாதித்த தாலுக்காவாக அறிவிக்காவிட்டால் விவசாயிகளை பெரும் அளவில் ஒன்றுதிரட்டி மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபடுவோம் என தெரிவித்தார். விவசாயிகளின் இந்த போராட்டத்தால் சீர்காழி நகர் பகுதிக்குள் சுமார் இரண்டரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டு, போக்குவரத்து வேறு வழியில் மாற்றிவிடபட்டது. 




மயிலாடுதுறை மாவட்டத்தில் 60 பயனாளிகளுக்கு பல்வேறு வங்கிகளின் சார்பில் 6.50  கோடி ரூபாய் கடனுதவிகளை மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா வழங்கினார்.


மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற கடனுதவி வழங்கும் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் பல்வேறு பயனாளிகளுக்கு கடனுதவிகளை வழங்கினார். அதனை தொடர்ந்து, நபார்டு வங்கியின் சார்பில் நபார்டு வங்கியின் 2023 - 2024 -ஆம் ஆண்டுக்கான கடன் திட்ட அறிக்கையை ஆட்சியர் வெளியிட அதனை மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் முத்துசாமி பெற்றுக்கொண்டார். 




அதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் கூறுகையில்,  "மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு வங்கியின் சார்பில் 60 பயனாளிகளுக்கு 6.50 கோடி ரூபாய் கடனுதவி வழங்கப்படுகிறது. கடந்த ஆண்டு மகளிர் திட்டம் சார்பில் 300 கோடி ரூபாய் கடனுதவி வழங்கப்பட்டுள்ளது. நிகழாண்டு 500 கோடி ரூபாய் கடன் வழங்க இலக்கு நிர்ணயக்கப்பட்டுள்ளது. மேலும், நபார்டு வங்கியின் மூலம் நமது மாவட்டத்திற்கு 2023 -2024 -ஆம் ஆண்டிற்கு 3,442 கோடி ரூபாய் கடன் வழங்க இலக்கு நிர்ணயக்கப்பட்டுள்ளது" என்றார்.