தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டத்தில் லாரிகள் தட்டுப்பாடு காரணமாக கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் தேங்கி கிடக்கிறது. இவற்றை உடன் இயக்கம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



தஞ்சாவூர் மாவட்டத்தில் தற்போது சம்பா, தாளடி அறுவடை பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. விவசாயிகள் அறுவடை செய்யும் நெல்லை கொள்முதல் செய்ய அரசு நெல் கொள்முதல் நிலையங்களை திறந்துள்ளது. அந்த வகையில் 500க்கும் மேற்பட்ட இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.

தஞ்சை மாவட்டத்தில் வல்லம், ஆலக்குடி, சித்திரக்குடி, கல்விராயன்பேட்டை, பூதலூர் உட்பட பகுதிகளில் ஒரு சில இடங்களில் தற்போது அறுவடை நடந்து வருகிறது. இவற்றை தவிர்த்து உள்ள வயல்களில் அடுத்த வாரம் அறுவடை முடிந்து விடும் என்று விவசாயிகள் தெரிவிக்கின்றனர். ஒரு போக சம்பா சாகுபடி செய்திருந்த விவசாயிகள் தற்போது அறுவடைப்பணிகளை முடித்து உள்ளனர். மேலும் சற்று தாமதமாக நாற்று நட்டு பணிகள் மேற்கொண்ட விவசாயிகளின் வயல்களில் இன்னும் அறுவடை பணிகள் முழுமையடையாத நிலையில் இன்னும் அதிகளவில் நெல் கொள்முதல் நிலையங்களுக்கு வரவில்லை. அடுத்தடுத்த வாரங்களில் அதிகளவு வர ஆரம்பித்து விடும்.

இந்நிலையில் விவசாயிகளிடம் இருந்து தற்போது வரை கொள்முதல் செய்யப்பட்ட நெல்லை கொண்டு செல்ல போதுமான அளவு லாரிகள் இயக்கப்படாமல் உள்ளது. இதன் காரணமாக ஒவ்வொரு நெல் கொள்முதல் நிலையத்திலும் நூற்றுக்கணக்கில் நெல்மூட்டைகள் தேங்கியுள்ளன.





மேலும் தேக்கம் காரணமாக விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்யும் பணியும் பாதிக்கப்படுகிறது. தினசரி சுமார் 800 முதல் 1000 முட்டைகள் கொள்முதல் செய்யப்படுகிறது. தினமும் இரண்டு அல்லது மூன்று லாரிகள் வந்தால் மட்டுமே இந்த நெல் மூட்டைகளை எடுத்துச் செல்ல முடியும். ஆனால் போதுமான லாரிகள் இயக்கப்படாததால், நெல் மூட்டைகள் தேங்கி நிற்கின்றன. இதனால் விவசாயிகள் கொண்டு வரும் நெல்லை காயவைத்து கொள்முதல் செய்ய முடியாத நிலை உள்ளது.

பல பகுதிகளில் தற்போதுதான் அறுவடைப்பணிகள் மும்முரம் அடைந்து வருகிறது. ஆரம்ப நிலையிலேயே இப்படி நெல் மூட்டைகள் தேங்கி கிடக்கிறது. வரும் நாட்களில் இன்னும் கொள்முதல் அதிகரிக்கும் நிலையில் ஆயிரக்கணக்கில் மூட்டைகள் தேங்கினால் விவசாயிகளிடம் கொள்முதல் செய்யும் பணிகள் பாதிக்கப்படும் நிலை உள்ளது.

இதன் காரணமாக விவசாயிகளிடம் நெல் கொள்முதல் செய்ய முடியாத நிலையில், அதிகாரிகளுக்கும் விவசாயிகளுக்கும் தேவையற்ற பிரச்சினைகளும் ஏற்படுகிறது. உடனடியாக நுகர்பொருள் வாணிபக் கழக நிர்வாகம் நடவடிக்கை எடுத்து கூடுதல் லாரிகளை இயக்கி நெல் மூட்டைகளை கொண்டு செல்ல உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை எடுத்துள்ளனர்.