மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அரசு பெரியார் தலைமை மருத்துவமனையில் இன்று மாவட்ட கண்காணிப்பு அதிகாரி அமுதவல்லி ஐஏஎஸ் மற்றும் மாவட்ட ஆட்சியர் மகாபாரதி ஆகியோர் நேரில் ஆய்வு மேற்கொண்டனர். அவசர சிகிச்சை பிரிவு, பிரசவ வார்டு உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள் மற்றும் மருந்து இருப்புகள் குறித்து மருத்துவத்துறை அதிகாரிகளிடம் கேட்டறிந்தனர்.
அப்போது அங்கு வந்த பொதுமக்கள் மருத்துவமனையில் ஒவ்வொரு துறைகளும் காசு லஞ்சமாக கொடுக்க வேண்டி உள்ளதாகவும், பெயரை பதிவு செய்ய கூட சீட்டு கொடுக்கும் இடத்தில் ஒருவருக்கு இருபது ரூபாய் இருந்தால் மட்டுமே பெயரை பதிவு செய்வதாகவும், மருத்துவமனையின் தரம் நன்றாக இருந்து பலன் இல்லை, நுழைவுச்சீட்டு முதல் துப்புரவு பணியாளர்கள் வரை அனைவருக்கும் பணம் கொடுக்க வேண்டி உள்ளது என குற்றச்சாட்டை பதிவு செய்தனர்.
மேலும், அங்கிருந்த நபர் ஒருவர் என் பிள்ளையை மருத்துவருக்கு படிக்க வைத்துள்ளேன் எனவும், ஏன் மருத்துவருக்கு படிக்க வைத்தோம் என்று வெட்கப்படும் அளவிற்கு இந்த அரசு மருத்துவமனையின் செயல்பாடு அமைந்துள்ளது என்று குமுறலை வெளிப்படுத்தினார். ஆய்வுக்கு வந்த அதிகாரிகளிடம் பொதுவெளியில் பொதுமக்கள் இவ்வாறு புகார் தெரிவித்ததால் மருத்துவமனை வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து மயிலாடுதுறை கோட்டாட்சியர் யுரேகாவிடம் உரிய விசாரணை நடத்துமாறு சம்பவ இடத்தில் மாவட்ட ஆட்சியர் மகாபாரதி உத்தரவிட்டார். இதனால் மயிலாடுதுறை அரசு தலைமை மருத்துவமனையில் உள்ள பணியாளர்கள் மிகுந்த கலக்கத்திற்கு ஆளாகியுள்ளனர்.