தஞ்சாவூர்: திரும்பும் திசையெல்லாம் போஸ்டரு... தடை போட்டாலும் ஐ டோண்ட் கேரு என்று தஞ்சை பழைய பஸ் ஸ்டாண்ட் சுவர்களை போஸ்டர்களால் நிரப்பி அலங்கோலமாக்கி வருகின்றனர். சம்பந்தப்பட்டவர்கள் மீது உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
அப்போ அந்த போஸ்டரு... இப்போ எல்லாத்துக்கும் போஸ்டரு
ஆரம்பகாலங்களில் போஸ்டர் என்றால் அது சினிமா போஸ்டர் மற்றும் நினைவஞ்சலி, கண்ணீர் அஞ்சலி போஸ்டர்களாக மட்டுமே இருந்து வந்தது. ஆனால் தற்போதோ குழந்தைக்கு பெயர் சூட்டுவது, மூக்கு குத்துவது, காது குத்துவது, திருமணம், நிச்சயதார்த்தம் என அனைத்து விசேஷங்களுக்கும் போஸ்டர் அடித்தால்தான் கெத்து, விளம்பர பேனர்கள் வைப்பதுதான் நம்ம ஸ்டைலு என்று அதையும் ஒரு கலாசாரமாகவே மாற்றி விட்டனர்.
எல்லா சுவர்களையும் ஆக்கிரமிக்கும் போஸ்டர்கள்
பெரும்பாலான விளம்பர பேனர்களில் அரசியல் தலைவர்களின் படங்கள் பெரிய அளவில் மின்னுகின்றன. அதுவும் அரசு சுவர்கள், மேம்பாலங்களை இத்தகைய பிளக்ஸ் பேனர்களும், போஸ்டர்களும் ஆக்கிரமித்து வரிசைக்கட்டி நிற்கிறது. அரசை கண்டித்து எதிர்க்கட்சிகளும், அமைப்புகளும் சுவரொட்டி ஒட்டும் அதே நேரத்தில் ஆளுங்கட்சியினர் வாழ்த்து சொல்லி ஒட்டு சுவரை அலங்கோலம் ஆக்குகின்றனர். நாங்களும் வருவோம்ல என்று பிறந்தநாள் விழா போஸ்டர்களும் சுவர்களை ஆக்கிரமிக்கின்றன.
அரசு சுவர்கள், பாலங்களில் போஸ்டர்கள் ஒட்டக்கூடாது என்ற தடை உள்ளது. அக்கடான்னு நீங்க தடை போட்டா நாங்க அதை கடைப்பிடிக்கணுமா என்பது போல் யாரும் கண்டுகொள்வதாக தெரியவில்லை. போஸ்டர்களை ஒட்ட மைதா பசை பயன்படுத்துகின்றனர். மைதா பசையின் வாசனைக்கு வந்து போஸ்டரை கிழித்து உண்ணும் மாடுகளால் விபத்துக்களும் ஏற்படுகிறது.
எந்த பக்கம் பார்த்தாலும் போஸ்டர் மயம்தான்
அந்த வகையில் தஞ்சை பழைய பஸ்ஸ்டாண்ட்டில் இது சுவர்தானா? இல்லை போஸ்டர்களின் வரிசைகளா என்று கேட்க தோணுகிறது. அந்தளவிற்கு சுவர்கள் முழுக்க போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. இதனால் பார்க்கவே சுவர்கள் அனைத்தும் அலங்கோலமாக உள்ளது. இனி அந்த சுவருக்கு எப்போதுமே விடியல் என்பதே இருக்காது.
இதுகுறித்து பொதுமக்கள் தரப்பில் கூறுகையில், போஸ்டர்களை ஒட்டுபவர்களுக்கு மனசாட்சியே இருக்காது போலும். போஸ்டர்கள் ஒட்டி அசுத்தம் செய்பவர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும்.
அவர்களே வந்து அந்த சுவரொட்டிகளை கிழித்துவிட்டு வெள்ளை அடித்து தர வேண்டும். இப்படி செய்தாலொழிய நம் மக்கள் திருந்தமாட்டார்கள். முன்பெல்லாம் தேர்தல் வருவதற்கு முன்பே ஊரில் உள்ள சுவர்களை எல்லாம் பங்கு பிரித்து கொண்டு விடுவார்கள். இப்போது அதற்கு தடை கொண்டு வந்ததை போல பொதுச் சுவர்களில் விளம்பரம் செய்வதையும் தடுக்க வேண்டும். சுவரொட்டிகள் மூலம் இறப்பையோ, மணவிழாவையோ தெரிவிக்க வேண்டியது இல்லை. செல்போன் மூலம் உடனே எல்லோருக்கும் தகவலை தெரிவிக்க முடியும். அப்படி இருக்க இப்படி கண்ட இடங்களில் எல்லாம் சுவரொட்டிகள் எதற்கு.
விளம்பர போஸ்டர்கள் ஒட்டப்படுவதால் சுவர்கள் எல்லாம் பாழடைந்து வருகிறது. எனவே போஸ்டர்கள் ஒட்ட தடை விதித்து பாழடைந்து வரும் பழைய பஸ் ஸ்டாண்ட் சுவர்களை காக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.