தஞ்சாவூர்: உதகையில் மலைவாழ் மக்களுக்காக டைடல் பூங்கா தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும். இது இந்தியாவிலேயே வேறு எங்கும் இல்லை என்று தஞ்சாவூர் டைடல் பூங்காவில் கட்டுமானப்பணிகள் நிறைவடைந்துள்ளதை பார்வையிட வந்த தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்தார். 


தஞ்சை டைடல் பூங்கா கட்டுமானப்பணி நிறைவு
 
தஞ்சாவூர் மேலவஸ்தா சாவடியில் டைடல் பூங்கா கட்டுமானப் பணி நிறைவடைந்துள்ளது. இதை ஆய்வு செய்ய அமைச்சர்கள் டி.ஆர்.பி.ராஜா, அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் வருகை புரிந்தனர். பின்னர் நிருபர்களிடம் அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா நிருபர்களிடம் கூறியதாவது: 


தொழில் நுட்ப புரட்சியை உருவாக்க வேண்டும்


தஞ்சாவூரில் விவசாயிகளின் படித்த பிள்ளைகளுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தி தர வேண்டும். தொழில்நுட்பப் புரட்சியை உருவாக்க வேண்டும் என்பதற்காக இந்த டைடல் பூங்காவைத் முதல்வர் ஸ்டாலின் அமைத்துள்ளார். இதன் கட்டுமானப் பணி முழுமையாக முடிவடைந்துள்ளது. இதனால் இப்பூங்காவை சில வாரங்களில் தமிழக முதல்வர் திறந்து வைக்கவுள்ளார்.


2 நிறுவனங்கள் தொடங்குவது உறுதி


இந்தப் பூங்காவில் இதுவரை இரண்டு நிறுவனங்கள் தொடங்குவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்னும் 7 நிறுவனங்கள் தொடங்குவதற்கு காத்திருக்கின்றனர். எனவே திறப்பு விழாவுக்கு முன்பே நிறுவனங்கள் முழுமையாக வந்துவிடும். மேலும் நிறுவனங்கள் தொடங்க முன்வந்தால் அருகிலுள்ள இடத்தில் கட்டடம் கட்டப்படும். இதன் மூலம் ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்க வாய்ப்புள்ளது.


உதகையில் மலைவாழ் மக்களுக்காக டைட் பூங்கா


இதேபோல, விழுப்புரத்தில் டைடல் பூங்கா திறக்கப்பட்டுள்ளது. திருப்பூரில் பணிகள் நடந்து வருகிறது. உதகையில் மலைவாழ் மக்களுக்காக டைடல் பூங்கா தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் ‌.இது இந்தியாவிலேயே வேறு எங்கும் இல்லை. பல லட்சம் கோடி அளவுக்கு தமிழ்நாட்டில் முதலீட்டை கொண்டு வந்துள்ளோம். இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் தொழில் தொடங்க அதிக அளவில் நிறுவனங்கள் முன் வருகின்றன.


காசநோய் மருத்துவமனை குறித்து வதந்தியை பரப்புகின்றனர்
 
தஞ்சாவூரில் சிப்காட் தொழிற்பேட்டை அமைப்பது தொடர்பாக கடந்த சட்டமன்ற  தொடரில் அறிவிக்கப்பட்டது. இதில், பல புதிய நிறுவனங்கள் தொடங்கப்பட்டு, பல ஆயிரக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதற்காக செங்கிப்பட்டியிலுள்ள காசநோய் மருத்துவமனையை அகற்றப் போவதாக சிலர் வதந்தியை உருவாக்கி பரப்பி வருகின்றனர். அது முற்றிலும் உண்மைக்கு புறம்பான தகவல். உள்நோக்கத்துடன் இதை பரப்புகின்றனர். அதை அகற்றும் எண்ணம் இல்லை. காசநோய் மருத்துவமனை உள்ள இடத்துக்கும், சிப்காட் தொழிற்பேட்டைக்கும் தொடர்பில்லை. மேலும், காசநோய் மருத்துவமனையைத் தரம் உயர்த்தி, சிப்காட்டுக்கு பயனுள்ளதாக செய்யப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார். 


3.57 லட்சம் மாணவர்கள் புதிதாக சேர்ந்துள்ளனர்


அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கூறுகையில், டெல்டா பகுதி விவசாயம் நிறைந்ததாகும். ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஐ.டி.பார்க் கொண்டுவரப்பட்டு வருகிறது. டெல்டாவில் விவசாயம் சார்ந்த தொழிற்சாலை அமைக்க முயற்சி மேற்கொள்ளப்படும் . அரசு பள்ளிகளில் நடப்பாண்டு இதுவரை 3.57 லட்சம் மாணவர்கள் புதிதாக சேர்ந்துள்ளனர். கடந்த ஆண்டை விட இது 5 சதவீதம் அதிகம். இதற்காக தேவையான வகுப்பறைக் கட்டடங்கள் உட்பட மேம்பாட்டு பணிகள் செய்யப்படுகின்றன என்றார்.


ஆய்வின்போது மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப், சிப்காட் செயல் இயக்குனர் ஆகாஸ், எம்.பி., முரசொலி, தஞ்சை எம்எல்ஏ டி.கே.ஜி. நீலமேகம், மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன், துணை மேயர் அஞ்சுகம் பூபதி, மாவட்ட ஊராட்சித் தலைவர் உஷா புண்ணிய மூர்த்தி மற்றும் பலர் உடனிருந்தனர்.