தஞ்சாவூரில் தேசிய குறிஞ்சியர் சமூக நீதிப் பேரவை மற்றும் கருஞ்சிறுத்தை கட்சித் தலைவர் கேப்டன் துரை ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய அவர்கள், குறவர் இனத்தின் மீதான காவல் துறை சித்ரவதை குறித்த எஸ்.சி. தேசிய ஆணையப் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த வேண்டும். குறவர் சமூகத்தை குறி வைத்து காவல் துறை குற்றம் சுமத்துவதைக் கைவிட உள்துறையும், காவல்துறைத் தலைவரும் அனைத்து மாவட்ட காவல் துறை அலுவலர்களுக்கு நிர்வாக உத்தரவை அனுப்ப வேண்டும். குறவர் சமூகத்தினர் மீது குற்றம் சுமத்தும் போது சந்தேகம் அல்லது ஊகத்தின் அடிப்படையில் இருக்கக்கூடாது. காலங்காலமாக குறவர் சமூகத்தினர் திருடர்களாகவே இருக்கின்றனர் என்ற முடிவுடன் பார்க்கிற கருத்தை மாற்ற வேண்டும். குற்றப் பழங்குடியினர் என்ற பாரம்பரியமான கருத்தை அடிப்படையாகக் கொண்டு குறவர் சமூகத்தின் மீது குற்றப் பதிவுக் கோப்புகளை உருவாக்கக்கூடாது. திருட்டு நடந்தால், குறவர் இன மக்களை நினைக்கும் போலீசாரின் போக்கு மாற வேண்டும்.




மரணம் அடைந்தவர்களின் மனைவி அல்லது குடும்ப உறுப்பினர்களுக்கு விருப்பமான வேலை, போதுமான இழப்பீடு, குழந்தைகளுக்குக் கல்வி வழங்க வேண்டும். தற்போது குறவர் இன மக்கள் நல்ல முறையில் வாழ்ந்து பல்வேறு தொழில்களை செய்து வருகின்றனர். அவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்.குறவர் மக்கள் மீது குற்ற முத்திரை குத்தப்படாமல் இருப்பதற்காக rமற்றும் மாநில அளவிலான விழிப்புர்ணவுக் குழுக் கூட்டங்களில் குறவர் சமூகத்தினரைப் பற்றிக் குறிப்பிட்டு உரையாட வேண்டும்.  அப்போது குற்ற முத்திரை பெயர் வராமல் இருப்பதற்கான வழிமுறைகளையும் அறிவுறுத்த வேண்டும்.


அப்போது தான் வருங்கால சந்ததியின் இந்த அவப்பெயர்களிலிருந்து மாற முடியும். காவல் சித்ரவதையில் மரணமடைந்த குறவர் இனத்தவர் ஒவ்வொருவருக்கும் அரசு 20 லட்சம் வழங்க வேண்டும். அவர்களின் வாழும் பகுதிகள் மிகவும் மோசமாகவும், வாழ்வதற்கே வழியில்லாத நிலை உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன் பெய்த பலத்த மழையினால், அவர்கள் வசிக்கும் பகுதிகள் மிகவும் மோசமாக இருந்தது. ஆனால் எந்த விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வில்லை. இனி வருங்காலத்தில் குறவர் இன மக்கள் சுகாதாரத்துடன் வாழ்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.  என்றார். அப்போது, கருஞ்சிறுத்தை கட்சியின் பொதுச் செயலர் சி.க. ரெத்தினம், பொருளாளர் வீரா. முருகேசன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.