தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் தாலுக்கா, அய்யம்பேட்-டை அருகில் பட்டிதோப்பு உள்ளது. இப்பகுதியில் நரிக்குறவர் மக்கள் மட்டும் வசித்து வருகின்றனர். இங்கு கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக 30 நரிக்குறவர் மக்கள் தங்களது குடும்பத்துடன், நுாற்றுக்கும் மேற்பட்டோருடன் குடியிருந்து வருகின்றனர், இவர்கள், அனைவரும் ஊசி பாசிகள், மாலை உள்ளிட்ட பொருட்களை அன்றாடம் விற்பனை செய்து அதில் வரும் வருமானத்தை வைத்து, குடும்பத்தை நடத்தி வருகின்றனர். இங்குள்ள நரிக்குறவர் மக்கள், தாங்கள் வசிக்கும் இடத்திற்கு பட்டா வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்த நிலையில், கடந்த 2009 ஆம் ஆண்டு 16 நரிக்குறவ மக்களுக்கு பட்டா வழங்கப்பட்டது.



இந்நிலையில், தமிழக அரசு கொடுத்த பட்டா இடத்தில், அப்பகுதியை சேர்ந்த சிலர் ஆக்கிரமித்து தடுப்பு சுவர் அமைத்து வைத்துள்ளனர். அவர்களிடம் சென்று நரிக்குறவ மக்கள் கேட்டால், விரட்டியடிப்பதால், பட்டா இருந்தும், மிகவும் அவல நிலையில் வாழ்ந்து வருகின்றனர். தற்போது வட கிழக்கு பருவ மழை தொடங்கியுள்ளதால், கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து கொண்டிருக்கின்றது. ஆனால் அங்கு வசிக்கும் நரிக்குறவ மக்களுக்கு உரிய தங்கும் இடமில்லாமலும், மேற்கூரை இல்லாமல் பிளாஸ்டிக் ஷீட் அமைத்துள்ள வீடுகளில் வசித்து வருகின்றனர். அங்குள்ள சாலைகளில் மழை நீர் கடந்த சில நாட்களாக தேங்கியிருப்பதால், அதில், அப்பகுதி மக்கள் நடந்து சென்று வருவதால், கால்களில் அரிப்பு போன்ற சரும நோயினால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.  கடந்த சில நாட்களுக்கு முன்பு இரவு நேரத்தில் பலத்த மழை பெய்த போது, வீடுகளில், மழை நீர் புகுந்ததால்,க கர்ப்பிணிதாய்மார்கள், முதியவர்கள், குழந்தைகள் என அனைவரும் இரவு முழுவதும் ஒதுங்குவதற்கு இடமில்லாமல் தவித்தனர். 




குடிநீர், சுகாதார வளாகம் உள்ளிட்ட எந்த விதமான அடிப்படை வசதிகளும் இல்லாமல், இது போன்ற அவல நிலை வருடந்தோறும் இருப்பதால், ஒவ்வொரு முறையும், மாவட்ட கலெக்டர், வட்டாட்சியர், வட்டார வளர்ச்சி அலுவலர் என அனைவரிடமும், பட்டா கொடுத்த இடத்தை மீட்டு தர வேண்டும், தொகுப்பு வீடு கட்டித்தரவேண்டும் என கோரிக்கை விடுத்தும், நரிக்குறவ மக்களாக இருப்பதால், எங்களை அலட்சியப்படுத்துகின்றனர். எங்கள் இன மக்களுடன் அமைச்சர் உணவருந்துகின்றார். முதல்வர் வீட்டிற்கு செல்கின்றார். ஆனால் இங்குள்ள அதிகாரிகள் மட்டும் ஏன் எங்களை இப்படி நடத்துகின்றார்கள் என்று புரியாத புதிராக இருக்கின்றது. எனவே, தற்போது பலத்த பெய்து வரும் நிலையில், எங்களது வாழ்வாதாரத்தை காப்பாற்ற வேண்டும். தமிழக அரசு கொடுத்த பட்டா இடத்தை ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்டு தர வேண்டும், தொகுப்பு வீடுகள் கட்டித்தர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை அடங்கிய மனுவை தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், பட்டித்தொட்டி பகுதியில் வசிக்கும் நரிக்குறவ மக்கள், தொடர்ந்து பெய்த வரும் மழையை பொருட்ப்படுத்தாமல் வந்து மனுவை வழங்கியுள்ளனர்.