வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி இருப்பதால் டெல்டா மாவட்டங்கள் புதுக்கோட்டை, ராமநாதபுரம் மற்றும் காரைக்கால் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. தென்கிழக்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள அடர்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 36 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து நவம்பர் 11ஆம் தேதி காலை தமிழக கரையை நெருங்க கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக டெல்டா மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை முதல் அதீத கனமழை பெய்யக்கூடும் எனவும் தென்காசி, நெல்லை, தூத்துக்குடி, கடலூர், மதுரை, சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிக கனமழை பெய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, திருச்சி, திருவள்ளூர், அரியலூர், பெரம்பலூர், விழுப்புரம், விருதுநகர், புதுச்சேரி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நாளை டெல்டா மாவட்டங்கள் மற்றும் கடலூர் விழுப்புரம் புதுக்கோட்டையில் அதீத கன மழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இந்த நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் தொடர்ந்து 15 மணி நேரத்திற்கு மேலாக பெய்து வரும் கனமழையின் காரணமாக நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார். தொடர்ந்து பெய்யும் கனமழையின் காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் சுமார் 70 ஆயிரம் ஏக்கர் சம்பா மற்றும் தாளடி நெற்பயிர் சாகுபடி மழை நீரில் மூழ்கியுள்ளன. மேலும் கனமழையின் காரணமாக மழை நீரில் மூழ்கி உள்ள சம்பா நெல் பயிரை பாதுகாக்க பொதுப்பணித்துறை அதிகாரிகள் மழை நீரை வடிய வைக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். அது மட்டுமின்றி உடனடியாக தமிழக அரசு மழை நீரை வடிய வைத்து ஆய்வு செய்து நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் தொடர்ந்து 5வது நாளாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி, முத்துப்பேட்டை, நீடாமங்கலம் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இடைவிடாமல் மழை பெய்து வருகிறது. இன்று மாலை 4 மணி நிலவரப்படி திருவாரூர் மாவட்டத்தில் திருவாரூர் 36.0 மில்லி மீட்டரும், முத்துப்பேட்டையில் 94.4 மில்லி மீட்டரும், திருத்துறைப்பூண்டியில் 84.8 மில்லி மீட்டரும், மன்னார்குடியில் 55.0 மில்லி மீட்டரும் நீடாமங்கலத்தில் 37.8 மில்லி மீட்டரும், குடவாசலில் 29.0 மில்லி மீட்டரும், நன்னிலத்தில் 26.4 மில்லி மீட்டரும் பாண்டவயாரு பகுதியில் 30.6 மில்லி மீட்டர் மழையளவு பதிவாகியுள்ளது. இதனால் தெற்கு வீதி பகுதியில் சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடுகிறது.
சாலைகள் முழுவதுமாக மழை நீர் தேங்கி இருப்பதால் இரு சக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனத்தில் செல்பவர்கள் மிகுந்த சிரமப்பட்டு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக போக்குவரத்து வாசிகள் தெரிவிக்கின்றனர். உடனடியாக நகராட்சி நிர்வாகம் மழை நீரை அகற்றி சாலையை சீர் செய்து தர வேண்டும் எனவும் பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். மேலும் திருவாரூர் நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலையில் பழைய மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பேருந்து நிறுத்தும் இடத்திற்கு எதிரே உள்ள பெரிய மரம் கன மழை காரணமாக அடியோடு சாய்ந்தது உடனடியாக போக்குவரத்துக்கு காவல்துறையினர் நகராட்சி ஊழியர்களுடன் இணைந்து சாலையில் விழுந்த மரத்தை உடனடியாக அகற்றினர்.