கும்பகோணம் நகரில் 45 வார்டுகளில் சுமார் 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இவர்களில் 200க்கும் மேற்பட்டோர் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட எருமை மற்றும் பசு மாடுகளை வளர்த்து வருகின்றனர். மாடு வளர்ப்போர் தங்களுடைய தொழுவத்தில் தண்ணீர் தேங்கி சுகாதார சீர்கேடு பரவும் என கருதி பால் கறந்ததும் மாடுகளை அவிழ்த்து விட்டுவிடுகின்றனர். இதனை தொடர்ந்து, கும்பகோணத்தில் சாலையில் சுற்றித்திரியும் மாடுகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது. குறிப்பாக நீதிமன்றம், வட்டாட்சியர் அலுவலகம் மற்றும் அரசு மருத்துவமனை ஒருங்கே அமைந்துள்ள மூர்த்தி சாலை உள்ளிட்ட மக்கள் கூடும் இடங்கள், குடியிருப்புகளில் மாடுகள் வரிசையாக படுத்துக்கிடப்பதால் நீதிமன்றம், வட்டாட்சியர் அலுவலகம் மற்றும் அரசு மருத்துவமனைக்கு வரும் பொது மக்கள், வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்கும் நிலை ஏற்பட்டது.
மேலும் நோயாளிகளை ஏற்றிவரும் ஆம்புலன்ஸ்கள் சாலையில் படுத்துக் கிடக்கும் மாடுகளால் குறிப்பிட்ட நேரத்திற்குள் மருத்துவமனைக்கு செல்ல முடியாததால் நோயாளிகளைக் காப்பாற்ற முடியாத சூழ்நிலை ஏற்பட்டு வந்தது. இது குறித்து நகராட்சி ஆணையரிடம் தொடர்ந்து புகார்கள் சென்றதையடுத்து சாலையில் சுற்றித்திரியும் மாட்டின் உரிமையாளர்களுக்கு கடந்த மாதம் முதற்கட்ட எச்சரிக்கை விடுப்பட்டது. ஆனாலும் மாடுகளை சாலையில் அவிழ்த்து விட்டிருந்தனர். இதையடுத்து கடந்த மாதம் இறுதியில், கும்பகோணம் டி.எஸ்.பி அசோகன் மேற்பார்வையில், போலீசார் பாதுகாப்புடன் நகராட்சி அதிகாரிகள் கும்பகோணத்தில் சாலையில் சுற்றித்திரிந்த 20 பசு மாடுகள் மற்றும் கன்று குட்டிகள், மாடு பிடிப்பவர்கள் மூலம் பிடித்து கும்பகோணம் பழைய நகராட்சி அலுவலகத்திற்கு கொண்டு வந்தனர்.
பின்னர் அங்கிருந்து மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள, வானாவதிராஜபுரத்தில் உள்ள மடத்திற்கு சொந்தமான கோசாலைக்கு அனைத்து மாடுகளும் வேனில் ஏற்றி கொண்டு செல்லப்பட்டன. ஆனால் பொது மக்கள், நிர்வாகத்தின் பேச்சை அலட்சியப்படுத்தும் விதமாக, மாடுகள், கன்றுகளை அவிழ்த்து விட்டதால் மீண்டும் கும்பகோணம் சாலைகளில் மாடுகளின் எண்ணிக்கை அதிகரித்தது. இதனால் கும்பகோணம், மாகமகுளக்கரை, ஆயிகுளம் சாலை, ஹாஜியார்தெரு, நாகேஸ்வரன் வடக்கு வீதி உள்ளிட்ட மக்கள் கூடும் இடங்களில் திரியத்தொடங்கின.
இது குறித்தும் மாவட்ட நிர்வாகத்திற்கு புகார் அளித்தனர். ஆனாலும் மாவ்ட நிர்வாகம் கண்டு கொள்ளாததால், கும்பகோணத்தில் சாலையின் நடுவில் படுத்திருந்த மாட்டின் மேல் மோதி துாக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே இறந்துள்ளார்.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் துக்காம்பாளை தெருவை சேர்ந்தவர் மணிகண்டன் (32). இவர் தனியார் இருசக்கர நிறுவனத்தில் மெக்கானிக்காக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் கும்பகோணம் செல்வம் தியேட்டர் வழியாக தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது, சாலையின் நடுவில், கருப்பு நிறத்தில், பசு மாடு படுத்திருப்பது தெரியாமல், மணிகண்டன், வேகமாக மாட்டின் மீது இருசக்கர வாகனத்தை மோதினார்.
இதில் நிலைத்தடுமாறி, துாக்கி வீசப்பட்டு கீழே விழுந்த மணிகண்டன் சம்பவ இடத்திலே உயிரிழந்தார். இது குறித்து கும்பகோணம் கிழக்கு காவல்நிலைய காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உயிரிழந்த மணிகண்டனுக்கு மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். இதே போல் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சாலையில் படுத்திருந்த மாடுகள் தெரியாமல், இருவர் இறந்தனர். மேலும் சாலையில் செல்பவர்களை விரட்டிய மாட்டை துரத்திய போலீசாரின் வயிற்றில் மாடு கொம்பால் குத்தியால் படுகாயம் அடைந்தார். எனவே, மாவட்ட நிர்வாகம், தஞ்சாவூர் மாவட்டத்தில் பொது மக்கள், வாகனத்திற்கு இடையூராக சாலையில் திரியும் மாடுகளை பிடித்து கோசாலையில் விட வேண்டும், மாட்டின் உரிமையாளர் மீது கிரிமினல் வழக்கு பதிந்து, இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.