’எனக்கு தடுப்பூசி போட்டாதான் நீங்க போக முடியும்’-செவிலியர்கள் முன் டான்ஸ் ஆடி வாக்குவாதம் செய்த குடிமகன்

’’எனக்கு ஊசி போடு, இல்லை இந்த இடத்தை விட்டு வேறு இடத்திற்கு சென்று முகாம் நடத்திக்கொள் என வற்புறுத்தி, நடனமாடியபடி வாக்குவாதம்’’

Continues below advertisement

தமிழகத்தை கொரோனா தொற்று இல்லாத மாநிலமாக்க வேண்டும் என  தமிழக அரசு சார்பில் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை தீவிரப்படுத்தி உள்ளது. அதன்படி வார இறுதி நாளில் மெகா தடுப்பூசி முகாம்களை அமைத்து லட்சக்கணக்கான மக்களுக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு வருகிறது. தஞ்சாவூர் மாவட்டத்தில் வாரந்தோறும் ஞாயிற்று கிழமைகளில் பொது மக்களுக்கு தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது. இந்த முகாமில் 1 லட்சம் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, வருவாய்த்துறையினர், சுகாதாரத்துறையினர் தீவிர தடுப்பூசி முகாம் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

Continues below advertisement

மேலும், சுகாதாரத்துறை செவிலியர்கள், பணியாளர்கள் உள்ளிட்ட அனைத்து ஊழியர்களும், தெருக்கள் தோறும் தற்காலிக முகாம் அமைத்து, வீடுகள் தோறும் சென்று தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள் என கெஞ்சாத குறையாக பேசி, கொரோனா தடுப்பூசியை செலுத்தி வருகின்றார்கள். தமிழகத்திலேயே கொரோனா தொற்று தடுப்பூசி போடப்பட்டது தஞ்சாவூர் மாவட்டம் முதலிடம் பெற வேண்டும் என்ற நோக்கத்தில், மாவட்ட நிர்வாகம் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இதன் ஒரு கட்டமாக, தற்போது வாக்காளர் பட்டியலை வைத்து, கொரோனா தடுப்பூசி போட்டுள்ளவர்களின் கணக்கு எடுக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இதனால், தஞ்சாவூர் மாவட்டத்தில் அனைவரும் தடுப்பூசி செலுத்துவதற்கான வழிவகுக்கப்படுகிறது.


தஞ்சாவூர் மாவட்டத்தில், மாவட்ட சுகாதாரத்துறை சார்பில் தடுப்பு ஊசி செலுத்தாதவர்களை வீடு வீடாக கண்டறிந்து தடுப்பு ஊசி, செலுத்தப்பட்டு வருகிறது. தஞ்சாவூர் மாவட்டத்தில் இதுநாள் வரை சுமார் 15 லட்சம் பேர் முதல் மற்றும் இரண்டாவது தவணை தடுப்பூசியை செலுத்தி கொண்டுள்ளனர். அனைவரும் கட்டாயம் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில், கும்பகோணத்தில் செவிலியர்கள் வீதி வீதியாக முகாமிட்டு  தடுப்பு ஊசி செலுத்தி வருகின்றனர்.  அதன்படி  கும்பகோணம் செக்கடி தெருவில் தடுப்பூசி செலுத்த வந்த செவிலியரிடம் அங்கு வந்த குடிமகன், எனக்கு தடுப்பூசி போடு, இல்லை என்றால் ததீத்தோம் என்று பாடு, எனக்கு ஊசி போடு, இல்லை இந்த இடத்தை விட்டு வேறு இடத்திற்கு சென்று முகாம் நடத்திக்கொள் என வற்புறுத்தி, நடனமாடியபடி வாக்கு வாதத்தில் ஈடுபட்டார். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்பட்டது. தற்போது அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.



இதனால் தடுப்பூசி செலுத்த வந்த செவிலியர்கள் அச்சம் அடைந்து, எதுவும் பேசாமல், குடித்திருக்கும் போது, கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளகூடாது என்று செவிலியர்கள் கூறியும், அந்த குடிமகன் கேட்காமல் பேசியதையே பேசிக்கொண்டிருந்தார். பின்னர், செவிலியர்கள், அந்த இடத்தை விட்டு நகர்ந்து சென்றனர்.  இது குறித்து தனது மேலதிகாரியிடம், பாதிக்கப்பட்ட செவிலியர்கள் புகார் கூறியுள்ளார். எனவே, மாவட்ட நிர்வாகம், உயிரையும், குடும்பத்தை பற்றி கவலைப்படாமல், காலை முதல் பொதுமக்களின் நலனிற்காக பாடுபடும், செவிலியர்களுக்கு, தடுப்பூசி முகாம்களில் இதுபோன்ற பிரச்சினை ஏற்படுத்தபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை  விடுத்துள்ளனர்.

Continues below advertisement