தஞ்சாவூர் நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனைப் பண்டகச்சாலை நிர்வாகக்குழு தலைவருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மான கூட்டத்துக்கு வராத கூட்டுறவுத்துறை அதிகாரிகளை கண்டித்து, சாலை மறியிலில் ஈடுபட்ட அதிமுகவைச் சேர்ந்த 50 பேரை போலீஸார் கைது செய்தனர்.அதிமுக முன்னாள் எம்பியும்,அதிமுக தஞ்சாவூர் தெற்கு மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளராக இருந்தவருமான கு.பரசுராமன் தனதுஆதரவாளர்களுடன் கடந்த 2020 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 29ஆம் தேதி தஞ்சாவூரில் உள்ள மாவட்ட திமுக அலுவலகமான கலைஞர் அறிவாலயத்துக்குச் சென்று திமுக நிர்வாகிகளை சந்தித்துப் பேசினார். இந்நிலையில், அவர்களை அதிமுக கட்சியில் இருந்து நீக்கி அதிமுக தலைமை ஆகஸ்ட் மாதம் 1ஆம் தேதி, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி ஆகியோர், தஞ்சாவூர் தெற்கு மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் கு.பரசுராமன், மன்றத்துணைத் தலைவர் கோ.ராஜமோகன், மன்றத்தின் தஞ்சாவூர் தெற்கு ஒன்றிய இணைச் செயலாளர் ஆர்.எம்.பாஸ்கர், நகர முன்னாள் செயலாளர் வி.பண்டரிநாதன் ஆகியோரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்படுகின்றனர் என்று தெரிவித்திருந்தனர்.
ஆனால் தொடர்ந்து, தஞ்சாவூர் கூட்டுறவு மொத்தம் விற்பனை பண்டகசாலையின் தலைவராக பண்டரிநாதன் உள்ளார். இவர் அ.தி.மு.க.,வில் இருந்து தி.மு.கவுக்கு தாவினார். தொடர்ந்து தலைவராக உள்ள பண்டரிநாதன் பல்வேறு முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாக, அ.தி.மு.க. முன்னாள் மாவட்ட செயலாளர் திருஞானம் தலைமையில் பகுதி செயலாளர்கள் அறிவுடைநம்பி, புண்ணியமூர்த்தி, சரவணன், ரமேஷ் என கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலையை சேர்ந்த இயக்குனர்கள் 16 பேர் கையழுத்திட்ட மனுவை, கடந்த அக்டோபர் மாதம் 25ஆம் தேதி கூட்டுறவு சூப்பிரண்டிடம் வழங்கினர். அதில், தலைவர் பண்டரிநாதன், சங்க விதியை மீறி , உறவினரான ரம்யா என்பவரை விற்பனையாளராக பணியில் அமர்த்தியுள்ளார். மறைந்த சங்க செயலாளர் செழியனுடன் இணைந்து, சங்கத்தின் நிதியில் ரூ. 5 லட்சத்திற்கும் குறைவாக இருந்த போது, ஆவணங்களை திருத்தி, பணத்தை கையாடல் செய்துள்ளார். இயக்குநர்கள் கூட்டத்தினை கூட்டாமல், தன்னிச்சையாக தீர்மானங்களை குறிப்பேட்டில் எழுதி, கையெழுத்து வாங்கி, தனக்கு வேண்டியதை போல திருத்தி கொள்ளுகிறார். தினக்கூலி வேலைக்கு ஆள் எடுக்காமல், உறவினர்கள் பெயரை தினக்கூலி பட்டியில் எழுதி, அந்த சம்பளத்தை அவரை எடுத்து கொள்கிறார். எனவே, பண்டரிநாதன் மீது நம்பிக்கையில்லாத தீர்மானம் கொண்டு வர வேண்டும் என மனு அளித்திருந்தனர்.
அது தொடர்பாக, தஞ்சாவூர் சரக கூட்டுறவு சார் பதிவாளர் சா.ஜெயசுதா முன்னிலையில் சிறப்பு கூட்டம் நடத்தி தலைவர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து நவம்பர் 22 ஆம் தேதி விவாதிக்க உள்ளதாகவும், கடந்த நவம்பர் 10 ஆம் தேதி கூட்டுறவு இயக்குநர்களுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். இதன்படி, நடைபெற்ற கூட்டத்துக்கு அதிமுகவை சேர்ந்த 16 இயக்குநர்கள் வந்தனர். ஆனால் கூட்டம் நடத்த கூட்டுறவுத்துறை அதிகாரிகள் யாரும் வரவில்லை. அதிகாரிகள் செல்போன்களும் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தாலும், ஆத்திரமடைந்த அதிமுக இயக்குநர்கள் 16 பேர் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டவர்கள் ராசாமிராசுதார் அரசு மருத்துவமனை சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த மேற்கு போலீஸார் மறியலில் ஈடுபட்ட 50 பேரை கைது செய்தனர். இந்த சம்பவத்தால் தஞ்சாவூரில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.