திருத்துறைப்பூண்டி அருகே மேலமருதூரில் இயற்கை விவசாயி பொன்முடி கடந்த ஆண்டு  இரண்டு மா விவசாய நிலத்தில் மாப்பிள்ளை சம்பா வகை நெல்லை இயற்கை முறையில் நேரடி விதைப்பு செய்தார். 160 நாட்களில் 6 அடி உயரம் வளர்ந்து கடந்த பிப்ரவரி மாதம் மாப்பிள்ளை சம்பா அறுவடைக்கு தயாரான போது 8 மூட்டை விளைச்சல் கிடைத்தது. இந்த நிலையில் விவசாயி பொன்முடி தனது நிலத்தில் எந்த விதைப்பையும் மேற்கொள்ளாமல் இருந்த நிலையில் டெல்டா மாவட்டங்களில் பெய்த தொடர் மழை காரணமாக மாப்பிள்ளை சம்பா மீண்டும் முளைக்கத் தொடங்கி அறுவடைக்கு தயாராகி வருகிறது. 



 

இதுகுறித்து இயற்கை விவசாயி பொன்முடி கூறுகையில், கடந்த ஆண்டு  இதே இடத்தில் இரண்டு மா நிலத்தில்  மாப்பிள்ளை சம்பா நேரடி விதைப்பு சாகுபடி செய்து கடந்த பிப்ரவரி மாதம் அறுவடை செய்தேன். இந்த ஆண்டு சாகுபடி செய்வதற்காக சென்று பார்த்தபோது மழையினால்  மீண்டும் பயிர்கள் முளைத்து செழித்து வளர்ந்துள்ளது அதனால் அந்த பயிருக்கு இயற்கை உரமிட்டு  இரண்டாவது போகமாக இன்னும் ஐந்து மாதங்களில் அறுவடை செய்வதற்கான பணிகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தார்.

 

மாப்பிள்ளை சம்பா சிறப்புகள்: சிவப்பு நிறத்தில் இருக்கும் மாப்பிள்ளை சம்பா ரக அரிசியில் புரதம், நார்ச்சத்து, உப்புச்சத்து, இரும்புச்சத்து நிறைந்து இருக்கிறது.  இந்தவகை நெல்லில் இருந்து கிடைக்கும் அரிசி நீரிழிவு நோயாளிகளுக்கு உகந்தது என மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படுகிறது. ஆண்களுக்கு வீரியம் அதிகரிக்கவும், உடல் பலம் கொடுக்கவும் வேண்டிய சத்துகள் மாப்பிள்ளை சம்பா அரிசியில் உண்டு. 



 

தமிழகம் முழுவதும் இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில் தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மறைந்த வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் மறைந்த இயற்கை நெல் மீட்ப்பாளர் ஜெயராமன் ஆகியோர் தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தனர். குறிப்பாக இயற்கை விவசாயத்தில் உற்பத்தி ஆகும் நெல்களை தமிழ்நாடு அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் மூலமாக கொள்முதல் செய்ய வேண்டும் என தொடர்ந்து விவசாயிகள் கோரிக்கை விடுத்த நிலையில், தமிழ்நாடு அரசு கண்டிப்பாக விவசாயிகளின் கோரிக்கை நிறைவேற்றப்படும் என தெரிவித்திருந்தது. ஆனால் இதுவரை நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலமாக கொள்முதல் பணியை தொடங்க வில்லை உடனடியாக அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலமாக இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில் நெல்மணிகளை கொள்முதல் செய்யவேண்டும் என அரசுக்கு விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.