தஞ்சாவூர்: தொண்டர்களை திசை திருப்பும் வேலையில் ஓ.பி.எஸ்., ஆதரவாளர் வைத்திலிங்கம் ஈடுபடுகிறார் என்று அ.தி.மு.க. செயலாளர்கள் சேகர்- சரவணன் ஆகியோர் குற்றம் சாட்டினர்.
தஞ்சை மத்திய மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் மா.சேகர், மாநகர செயலாளர் சரவணன் ஆகியோர் கூட்டாக நிருபர்களிடம் கூறியதாவது:-
அதிமுகவிற்கு துரோகம் செய்த வைத்திலிங்கம்
அ.தி.மு.க.விற்கு துரோகம் செய்த வைத்திலிங்கம், விரைவில் அ.தி.மு.க.வில் அனைவரும் ஒன்றிணைவார்கள் என்றார். இப்போது 2025 டிசம்பருக்குள் அனைவரும் ஒன்றிணைவார்கள் என்று கூறுகிறார். அவர் தொண்டர்களை திசை திருப்பும் வேலையை செய்து வருகிறார். அ.தி.மு.க.வில் பிளவு இருப்பதை போல தோற்றத்தை ஏற்படுத்துகிறார். அ.தி.மு.க.வினர் அனைவரும் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஓரணியில் தான் உள்ளனர்.
பொய்யான தகவலை பரப்புகிறார்கள்
எடப்பாடி பழனிசாமி பதவி ஏற்ற பின்னர் அ.தி.மு.க. அனைத்து தேர்தலிலும் தோல்வியை சந்தித்துள்ளது என்று பொய்யான தகவலை பரப்புகிறார்கள். 2021-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்ற பகுதிகளில் அ.தி.மு.க. அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளது என்பதை யாரும் மறுக்க முடியாது. ஓ.பன்னீர்செல்வம், வைத்திலிங்கம் பொறுப்பு ஏற்ற பகுதிகளில் தான் அ.தி.மு.க. தோல்வியை சந்தித்துள்ளது. தி.மு.க.- பா.ஜனதாவுடன் தொடர்பு வைத்துக்கொண்டு அ.தி.மு.க.வை வைத்திலிங்கம் அழிக்க பார்க்கிறார்.
அதிமுக ஆட்சியை பிடிக்கும் என்பது மட்டும் உண்மை
அதற்கு காலம் நிச்சயம் பதில் சொல்லும். வைத்திலிங்கம் கூறியதில் ஒரே ஒரு உண்மை என்னவென்னால் 2026 சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க ஆட்சியை பிடிக்கும் என்பது மட்டும் தான். அதுவும் எடப்பாடி பழனிசாமி தலைமை ஆட்சி அமையும். வைத்திலிங்கத்திடம் ஒரு சிலர் மட்டுமே உள்ளனர். அவர்களும் விரைவில் எங்களிடம் வந்து விடுவார்கள். அப்போது வைத்திலிங்கம், ஓ.பன்னீர்செல்வம் போன்ற ஒரு சிலர் மட்டுமே தனி மரமாக இருப்பார்கள். இவ்வாறு அவர்கள் கூறினார்.
பேட்டியின் போது அ.தி.மு.க. கொள்கை பரப்பு துணை செயலாளர் துரை.திருஞானம், முன்னாள் மேயர் சாவித்திரி கோபால், மாவட்ட அவைத்தலைவர் நாகராஜன், பகுதி செயலாளர்கள் புண்ணியமூர்த்தி, மனோகர், சதீஷ்குமார், ஒன்றிய செயலாளர் ஸ்டாலின் செல்வராஜ், முன்னாள் ஒன்றிய செயலாளர் துரை.வீரணன் ஆகியோர் உடன் இருந்தனர்.