தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டி அருகே திருச்சி - தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள புதிய கட்டளை மேட்டு கால்வாயில் தண்ணீர் வரும் வரை காத்திருக்கும் போராட்டத்தை விவசாயிகள் மேற்கொண்டனர். பின்னர் தஞ்சாவூர் எம்.பி. முரசொலி பேச்சுவார்த்தையையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.


ஏரிகளை நிரப்ப அரசு உத்தரவு


புதிய கட்டளை மேட்டு கால்வாய் மூலம் தஞ்சாவூர் மாவட்ட ஏரிகளை நிரப்ப கடந்த ஜூலை மாதம் இறுதியில் தமிழக அரசு உத்தரவிட்டது. இருப்பினும் அவ்வாறு செய்யப்படவில்லை. இதனால் கடந்த ஆகஸ்ட் 6-ம் தேதி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்பொழுது 15 நாட்களில் அனைத்து ஏரிகளையும் நிரப்பித் தருவதாக உறுதி அளிக்கப்பட்டது. ஆனால் இதுவரை தண்ணீர் தராததை கண்டித்து இன்று காலை முதல் விவசாயிகள் திருச்சி - தஞ்சை தேசிய நெடுஞ்சாலை செங்கிப்பட்டி கட்டளை மேட்டு கால்வாயில் தண்ணீர் வரும் வரை காத்திருக்கும் போராட்டத்தை நடத்தினர்.


விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்


போராட்டத்திற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் என்.வி.கண்ணன் தலைமை வகித்தார். இதில் மதிமுக நந்தகுமார், காங்கிரஸ் அறிவழகன், மாதர் சங்கம் தமிழ்ச்செல்வி, சிபிஎம் பாஸ்கர், அமமுக கிருபா, தமிழ்நாடு விவசாயிகள் சங்க ஒன்றிய செயலாளர் தமிழரசன், ஊராட்சி தலைவர் கருப்பையா, டிஒய்எப்ஐ தமிழ்செல்வன், ஒன்றிய துணை பெருந்தலைவர் கோ.வி.க. சுப்பு, விவசாய தொழிலாளர் சங்க காமராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


கோரிக்கைகளை விளக்கி கோஷங்கள் எழுப்பினர்


பின்னர் விவசாயிகள் அனைவரும் கால்வாயில் இறங்கி கோரிக்கைகளை விளக்கி கோஷங்கள் எழுப்பினர். பின்னர் அங்கேயே கஞ்சி சமைத்து சாப்பிட்டனர். தொடர்ந்து தகவல் அறிந்த தஞ்சாவூர் எம்.பி., ச.முரசொலி நேரடியாக வருகை தந்து விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். வரும் பத்து நாட்களுக்குள் அனைத்து ஏரிகளிலும் தண்ணீர் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும். இது குறித்து நாளை காலை தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டு இனி இவ்வாறு நடக்காமல் இருக்க தீர்வு காணப்படும். என்று உறுதியளித்தார். இதன் பேரில் விவசாயிகள் தங்களின் காத்திருப்பு போராட்டத்தை மாலை கைவிட்டனர்.


20 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது


குளித்தலை மகாதானபுரம் தலைப்பிலிருந்து துவாக்குடி பொய்கை குடியில் உள்ள ஏரிக்கு தண்ணீர் வரும். அங்கிருந்து புதியகட்டளை மேட்டு கால்வாய்க்கு தண்ணீர் வந்து அதன் வாயிலாக 80 ஏரிகள் பாசன வசதியை பெறுகின்றன. இதன் மூலம் இப்பகுதியில் உள்ள 20 ஆயிரம் ஏக்கர் நிலத்தில் விவசாயிகள் சாகுபடியை மேற்கொள்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டு ஒருமாதம் ஆன நிலையிலும் இங்கு தண்ணீர் வராததால் விவசாயிகள் சாகுபடி பணிகளை மேற்ொள்ள முடியாமல் தவித்து வருகின்றனர்.


இங்கு ஏரிகள் நிரம்பினால் நிலத்தடி நீர் மட்டமும் உயரும். இதை கருத்தில் ொண்டு அரசு உடன் நடவடிக்கை மேற்ொள்ள முடியும் என்று விவசாயிகள் தரப்பில் தெரிவித்துள்ளனர். நாளை காலை நடக்கும் ஆலோசனைக்கூட்டத்தில் இந்த கால்வாய்க்கு தண்ணீர் விடப்பட்டால் விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைவார்கள். பொருளாதாரத்தில் பின் தங்கியுள்ள விவசாயிகளின் இந்த கோரிக்கை உடனடியாக தீர்வு காணப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.