தஞ்சாவூர்: தஞ்சாவூர் – திருவையாறு பைபாஸ் சாலை மின்விளக்கு வசதி இன்றி இருளில் மூழ்கிக்கிடப்பதால் பணி முடிந்து இருசக்கர வாகனத்தில் செல்லும் பெண்கள் மிகுந்த அச்சத்துடனேயே பயணிக்கின்றனர். எனவே தேவையான இடத்தில் சோலார் விளக்குகளை அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர்.


இரண்டு கட்டமாக சுற்றுவட்ட சாலை அமைப்பு


தஞ்சையில் உலகத்தமிழ் மாநாடு நடைபெற்ற போது சுற்றுவட்ட சாலை அமைக்க முடிவு செய்யப்பட்டது. அன்படி 2 கட்டமாக சுற்றுவட்ட சாலை அமைக்கும் பணிகள் தொடங்கின. தஞ்சை  மேலவஸ்தாசாவடியில் இருந்து  தொடங்கி  மாதாக்கோட்டை, விளார், வழியாக புதுப்பட்டினம், பட்டுக்கோட்டை பிரிவு சாலை, மாரியம்மன்கோவில் சாலையில் உள்ள ரவுண்டானா, வெண்ணாறு பாலம், பள்ளியக்ரஹாரம் ரவுண்டானா, திருவையாறு பிரிவு சாலை, 8-ம் நம்பர் கரம்பை, பிள்ளையார்பட்டி ரவுண்டானா வழியாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் அருகே உள்ள திருச்சி சாலையில் நிறவைடையும் வகையில் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.


சாலைப்பணிகள் முடிந்து பயன்பாட்டுக்கு வந்தது


முதல் கட்டமாக மேலவஸ்தாசாவடியில் இருந்து பள்ளியக்ரஹகாரம் ரவுண்டானா வரை ஒரு கட்டமாகவும், அங்கிருந்து தற்போது தஞ்சை கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள திருச்சி சாலையில் இணைக்கும் வகையில் 2-வது கட்டமாகவும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.  திருச்சியில் இருந்து தஞ்சையை கடந்த செல்பவர்கள் தஞ்சை மாநகருக்குள் வந்து போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்காமல் தஞ்சையை கடந்து செல்லும் வகையில் இந்த சாலை அமைக்கப்பட்டது.  இந்த சாலை பணிகளும் முடிந்து பொதுமக்கள் பயன்பாட்டில் இருந்து வருகிறது.


இந்த சாலை வழியாக அலுவலகத்துக்கு செல்வோர், விவசாய வேலைக்கு செல்பவர்கள், வட்டார போக்குவரத்து அலுவலகங்களுக்கு வருவோர், கலெக்டர் அலுவலகம் மற்றும் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு வருவோருக்கு மிகவும் வசதியாக உள்ளது. இந்த சாலையில் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் அருகே உள்ள பைபாஸ் சாலையில் இருந்து திருவையாறு வரையில் மின்விளக்கு வசதி இன்றி இருளில் மூழ்கிக்கிடக்கிறது. மற்ற பகுதியில் உள்ள சாலைகளில் மின் விளக்கு வசதி உள்ளது.


மைய தடுப்பு சுவரும் இல்லை


இந்த சாலையில் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் அருகே இருந்து பிள்ளையார்பட்டி ரவுண்டானா சாலை வரை மைய தடுப்புசுவரும் உள்ளது. பிள்ளையார்பட்டி ரவுண்டானாவில் இருந்து திருவையாறு பிரிவு சாலை வரை மைய தடுப்பு சுவரும் கிடையாது. இந்த பகுதிகளில் உள்ள சாலைகளில் எந்தவிளக்கு வசதியும் இல்லாததால் இரவு நேரங்களில் இருள் சூழ்ந்து கிடக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் அச்சத்துடனே சென்று வருகின்றனர். இரவு நேரங்களில் வேலை முடிந்து செல்பவர்கள், வெளியூர்களுக்கு சென்று திரும்புபவர்கள், விவசாயத்துக்கு தேவையான இடுபொருட்களை வாங்குவதற்காக தஞ்சை வந்து விட்டு திரும்ப செல்லும் விவசாயிகள் மிகுந்த அச்சத்துடனே சென்று வருகிறார்கள். கார், கனரக வாகனங்களில் செல்வோர்கள் எளிதில் இந்த சாலையை கடந்து செல்கிறார்கள்.


இருசக்கர வாகனத்தில் செல்வோர் அச்சம்


ஆனால் இருசக்கர வாகனங்களில் செல்வோர் இருள் சூழ்ந்து கிடப்பதால் மிகவும் அச்சத்துடனேயே சென்று வருகிறார்கள். இந்த சாலையில் ஆங்காங்கே மர்ம நபவர்கள், வாகனங்களில் செல்வோர் மற்றும் நடந்து செல்பவர்களை இரவு நேரங்களில் தாக்கி நகை, பணத்தை பறிப்பது போன்ற சம்பவங்களும் அரங்கேறி வருகிறது. பகல் நேரங்களிலேயே இந்த சாலையை கடந்த செல்வது அச்சமாக இருக்கும். அப்படிப்பட்ட சூழ்நிலையில் இரவு நேரங்கள் என்றால் சொல்ல வேண்டுமா?


இது குறித்து பொதுமகள் கூறுகையில், தஞ்சை சுற்றுவட்ட சாலையில் திருவையாறு பிரிவு சாலையில் இருந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் அருகே உள்ள சாலையில் சந்திக்கும் இடம் வரை சாலையில் மின்விளக்கு வசதி இல்லை. இதனால் இரவு நேரங்களில் இந்த சாலை இருள்சூழ்ந்து கிடக்கிறது. இந்த சாலையில் அலுவலகங்களுக்கு வேலைக்கு செல்வோர், வெளியூர் செல்பவர்கள் என ஏராளமானோர் கடந்து செல்கிறார்கள்.


ஆனால் மாலை 6 மணிக்குப்பிறகு இந்த சாலைகளில் ஆள் நடமாட்டம் குறைவாக இருப்பதால் இதனை கடந்து செல்வது மிகவும் அச்சமாக உள்ளது. மின்விளக்கு வசதி இல்லாவிட்டாலும், சோலார் விளக்கு வசதி அமைத்தால் கூட வாகன ஓட்டிகளுக்கு மிகவும் வசதியாக இருக்கும். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விளக்கு வசதி செய்துதர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.