மாறாத மண்ணின் பெருமையை மீட்டெடுக்கும் முயற்சியாக அளிக்கப்பட்ட பயிற்சி: என்ன தெரியுங்களா?
பாரம்பரியமாகப் பயன்படுத்தப்பட்டு வந்த மரப்பாச்சி பொம்மைகளின் இன்றைய நிலை... காணாமல் போய்விட்டது என்பதுதான்.

தஞ்சாவூர்: மாறாத மண்ணின் பெருமையை மீட்டெடுக்கும் முயற்சியாக மரப்பாச்சி பொம்மையை எப்படி செய்யலாம் என்று தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் பயிற்சி அளிக்கப்பட்டது. இது இளம் தலைமுறையினர் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.
நவீன உலகில் குழந்தைகள் விளையாடுவதற்கு நெகிழிப் பொம்மைகள், ரப்பர் பொம்மைகளின் பயன்பாடு பரவலாகிவிட்டதால், பாரம்பரியமாகப் பயன்படுத்தப்பட்டு வந்த மரப்பாச்சி பொம்மைகளின் இன்றைய நிலை... காணாமல் போய்விட்டது என்பதுதான். இந்த மரப்பாச்சி பொம்மை எப்படி செய்வது என்பதை தெரிந்து கொள்ளவும், நலிவடைந்த நிலையில் உள்ள இந்த மரப்பாச்சி பொம்மைக் கலையை மீட்டெடுக்கும் முயற்சியில் தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் பயிற்சி அளிக்கப்பட்டது.
தமிழ்நாடு அரசுத் திட்டமான தமிழ் மண்ணின் பாரம்பரிய கைவினைக் கலைகளை மீட்டெடுத்தல் பயிற்சி திட்டத்தின் கீழ் ஜனவரி 31 ஆம் தேதி தொடங்கி, மார்ச் 1 ஆம் தேதி வரை நடைபெறும் இப்பயிற்சியில் ஏறத்தாழ 25 பேர் இணைந்துள்ளனர். இவர்களில் 2 ஆண்களைத் தவிர மற்ற அனைவரும் பெண்களே.
இதுகுறித்து திட்ட ஒருங்கிணைப்பாளரும், தமிழ்ப் பல்கலைக்கழகச் சிற்பத் துறைத் தலைவருமான முனைவர் வே. லதா கூறியதாவது:

மரப்பாச்சி பொம்மைகள் ஆண், பெண் வடிவில் ஜோடியாக செய்யப்படும். திருமணத்தின்போது பெண் வீட்டார் தனது மகளுக்கு சீதனமாக வழங்குவர். தம்பதியினர் இணைப் பிரியாமல் வாழ வேண்டும் என்பதை அறிவுறுத்தும் விதமாக இப்பொம்மைகள் வழங்கும் வழக்கம் அக்காலத்தில் இருந்தது. நவராத்திரி பண்டிகையின்போது இந்த மரப்பாச்சி பொம்மைகளையும் வைத்து வழிபட்டு வந்தனர்.
இந்த மரப்பாச்சி பொம்மைகள் தமிழ்நாட்டிலும், ஆந்திர மாநிலத்திலும் பிரபலமாக இருந்தது. ஆந்திர மாநிலத்தில் ஏழுமலையானும், அலர்மேல் மங்கை வடிவிலும் வடிவமைக்கப்படும். இப்பொம்மைகள் கருங்காலி, செஞ்சந்தனம், முள்ளிலவு, ஊசியிலை மரங்களிலிருந்து செய்யப்படும். இங்கிருந்து கர்நாடகம், குஜராத், ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது.
மேலும், திருமணமான தம்பதியின் குழந்தைகள் விளையாடுவதற்கும் இந்த மரப்பாச்சி பொம்மைகள் பரிசாக வழங்கப்பட்டுள்ளது. தற்போது நெகிழியிலும், ரப்பரிலும் செய்யப்படும் பொம்மைகளைக் குழந்தைகள் வாயில் வைக்கும்போது, அதன் மூலமாக பாதிப்புகள் ஏற்படுகின்றன. ஆனால், செஞ்சந்தன மரத்தால் செய்யப்படும் மரப்பாச்சி பொம்மைகள் மருத்துவக் குணமுடையது. இதனால், இதை குழந்தைகள் வாயில் வைத்து விளையாடும்போது, அவர்களுக்கு ஆரோக்கியமும் கிடைத்தது. மேலும், குழந்தைகளுக்கு உடல் சூட்டைக் குறைக்க இந்த மரப்பாச்சி பொம்மையை அரைத்து, சாறை சங்கு மூலம் புகட்டப்படும்.
நவீனமயமாக்கலில் இந்த மரப்பாச்சி பொம்மைகள் தயாரிப்பு நலிவடைந்துவிட்டதால், தற்போது பார்ப்பது அரிதாக உள்ளது. இக்கலையை மீட்டெடுப்பதற்காக, தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் தமிழ்நாடு அரசுத் திட்டமான தமிழ் மண்ணின் பாரம்பரிய கைவினைக் கலைகளை மீட்டெடுத்தல் பயிற்சி திட்டத்தின் கீழ் ஒரு மாத கால பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இந்த பயிற்சியில் இல்லத்தரசிகள், வருவாயில் பின்தங்கிய பெண்கள் உள்ளிட்டோர் தொழில்முனைவோர்களாக மாறுவதற்காக இருந்தாலும், இக்கலையை வளர்த்தெடுக்க ஆர்வமுடன் முன் வந்துள்ளனர். தற்போது இப்பயிற்சியில் மரப்பாச்சி பொம்மைகளைத் தன்னிச்சையாகவே செதுக்கி வடிவமைக்கும் அளவுக்கு முன்னேறியுள்ளனர்.
இவர்களுக்கு திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியைச் சேர்ந்த மரச்சிற்ப நுண்கலை பட்டதாரியான ப. சிவானந்தம் பயிற்சி அளித்தார். இது குறித்து அவர் கூறுகையில், கருங்காலி மரம், செஞ்சந்தன மரம், ஊசியிலை மரம் போன்ற பால் வரக்கூடிய மரங்களிலிருந்து இந்த மரப்பாச்சி பொம்மைகளைச் செய்ய முடியும்.
மரப்பாச்சி பொம்மை வடிவில் பேப்பரில் வரைந்து, அதே வடிவத்துக்குக் கத்திரிக்கப்படும். பின்னர் ஒரு அடி (12 அங்குலம்) உயரம், 5 அங்குலம் நீளம், 2 அங்குலம் அகலம் கொண்ட மரக்கட்டையில் காகித வடிவத்தை வைத்து செதுக்கப்படும். மரக்கட்டையில் பட்டை உளியைக் கொண்டு தேவையில்லாத பகுதியை அகற்றுவோம். குழவு உளி மூலம் கை, கால், உடல் பாகங்களைச் செதுக்கிவிட்டு, முகத்தைக் கீற்று உளியில் செதுக்குவோம்.
ஆண், பெண் பொம்மைகள் பார்ப்பதற்குக் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாக இருந்தாலும், தலையில் கிரீடம், கொண்டை என வேறுபட்டிருக்கும். பெண் பொம்மையில் மார்பகம், இடைக்கட்டு, கழுத்தில் ஆபரணங்களும் செதுக்கப்படும். ஆண் பொம்மையில் தோள்பட்டையில் வேலைப்பாடு இருக்கும். இரு பொம்மைகளும் பத்ம பீடத்துடன் செதுக்கப்படும். முழுமையாகச் செதுக்கப்பட்ட பின்னர், வார்னிஷில் வண்ணம் பூசப்படும்.
இக்கலையைக் கற்றுக் கொள்பவர்கள் தொடக்கத்தில் ஒரு பொம்மையைச் செய்வதற்கு 2 அல்லது 3 நாட்களாகும். தேர்ச்சி பெற்ற பிறகு 2 மணிநேரத்தில் ஒரு பொம்மையைச் செய்துவிடலாம். ஒரு ஜோடி பொம்மைகள் ரூ. 3 ஆயிரம் முதல் ரூ. 3 ஆயிரத்து 500 வரை விலை போகும். இதன் மூலம் இரு மடங்கு லாபம் கிடைக்கும். வீட்டுக்கு வீடு இருந்த இப்பொம்மைகள் இப்போது பார்ப்பதே அரிதாகிவிட்டது. இப்பயிற்சி அளிக்கப்படுவதன் மூலம் இக்கலையை மீட்டெடுக்க வாய்ப்பாக உள்ளது. இப்பயிற்சி தொடர்ந்து நடத்தப்பட்டால், இக்கலையை முழுமையாக மீட்டெடுத்துவிடலாம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.