முப்பரிமாண சிலைகள் வடிவமைப்பு தொழில்நுட்பத்தில் அசத்தும் தஞ்சை இளம் பொறியாளர்
பழங்கால சிலைகள், பாரம்பரிய சின்னங்கள், மனித உருவங்கள் மற்றும் வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கேற்ப முப்பரிமாண படத்தின் மூலம் மிகவும் துல்லியமாக சிலையாக வடிவமைத்து தருகின்றனர்.

தஞ்சாவூர்: முப்பரிமாண சிலைகள் (3டி) வடிவமைப்பு தொழில்நுட்பத்தில் தஞ்சையில் ஐடி துறையின் ஸ்டார்ட் அப் நிறுவனமாக உருவெடுத்து உள்ளூர் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை அளித்து கிடுகிடுவென்று உயர்ந்த வருகிறார் தஞ்சாவூரைச் சேர்ந்த இளம் பொறியாளர் பிரவீன் ராஜ்.
முயற்சி உடையவர்களை புதைத்தாலும் விதையாக மாறி மரமாக முளைத்து எழுந்து நிற்பார்கள். தொடங்கும் இடத்தில் இருந்து பார்க்கும் போது பாதை முடிவது போல தெரியும். அது முடிவல்ல முயற்சியும், நம்பிக்கையும் கொண்டு பயணத்தை தொடர்ந்தால் இலக்கு தெரியும்.
நம் பாதை இதுவென்று புரியும். முடியும் என்று தெரிந்தால் முயற்சி செய்யாமல் இருக்கவே கூடாது. முடியாது என்று நினைத்தால் பயிற்சி எடுக்க வேண்டும். முயற்சி செய்வதற்கு. அப்போதுதான் வெற்றி நம் வசப்படும். சிக்கல்கள் வாழ்க்கையில் வருவதற்கு காரணம் நம்மை சிதைக்க அல்ல... சிறப்பான வாழ்க்கைக்கு செதுக்க என்று நினைத்தால் சாதனைக் கொடியை நாம் ஏற்றுவது வெகு தூரத்தில் இல்லை.

உங்களுக்காக நீங்கள்தான் சிந்திக்க வேண்டும். அது தவறாக இருந்தாலும்... அடுத்தமுறை சரியாக சிந்திக்க முடியும். 'எடுத்த காரியம் யாவினும் வெற்றி எங்கு நோக்கினும் வெற்றி' என்றார் பாரதி. இதற்கு எடுத்துக்காட்டாக சிறப்பாக செயல்பட்டு சிகரம் நோக்கி நடை போட்டு வருகிறார் இளம் பொறியாளர் பிரவீன் ராஜ்.
தஞ்சாவூரில் சிறிய மற்றும் பெரிய அளவிலான ஐ.டி துறை சார்ந்த நிறுவனங்களின் எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்து வருகிறது. ஏற்கனவே மினி டைடல் பார்க் தஞ்சாவூரின் வேலைவாய்ப்பு தரத்தை உயர்த்தியுள்ள நிலையில் ஐ.டி நிறுவனங்கள் அதிகமாக அதிகமாக தஞ்சாவூர் மற்றும் சுற்றியுள்ள டெல்டா மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் நிலை ஏற்படும். இந்த நிலையில் முப்பரிமாண வடிவில் மிகவும் தத்ரூபமாக சிலை தயாரிக்கும் ஸ்டார்ட் அப் நிறுவனத்தை தொடங்கி உள்ளூர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளித்து வருகிறார் தஞ்சாவூரை சேர்ந்த பொறியாளர் இளம் பொறியாளர் பிரவீன் ராஜ்.
தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம் அருகே TechVoyager என்ற பெயரில் செயல்பட்டு வரும் இந்த நிறுவனத்தில் பழங்கால சிலைகள், பாரம்பரிய சின்னங்கள், மனித உருவங்கள் மற்றும் வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கேற்ப முப்பரிமாண படத்தின் மூலம் மிகவும் துல்லியமாக வடிவமைப்பை புதிவு செய்து அதன் மொத்த கலை நயத்தையும், 3 டி வடிவில் பல்வேறு விதமான சிலைகளாக உருவாக்குகின்றனர். இது தற்போது பல இடங்களில் ட்ரெண்டிங்கில் இருந்தாலும் தஞ்சாவூரில் இந்த டெக்னாலஜியைப் பயன்படுத்தி ஸ்டார்டப் நிறுவனமாக செயல்படுத்திய வருகிறார் பிரவின் ராஜ். தஞ்சைக்கு இதுதான் இதுபோன்ற முப்பரிமாண முறையில் சிலை வடித்தல் முதல்முறை என்பதும் குறிப்பிடத்தக்கது.
பல்வேறு சிரமங்களை சந்தித்தாலும் இப்போது வெற்றிகரமான நிறுவனமாக தன் நிறுவனத்தை உயர்த்தி உள்ளார். முக்கியமாக வரும் நாட்களில் இன்னும் பல பேருக்கு வேலைவாய்ப்புகளை வழங்க உள்ளதாகவும் தெரிவித்தார் பிரவீன் ராஜ்.
இதுகுறித்து பிரவீன் ராஜ் கூறியதாவது: தொடக்கத்தில் எங்கள் நிறுவன பணியாளர்களை சிலை வடிவமைப்பு பற்றி பயிற்சி எடுப்பதற்காக சிற்ப கலைக் கல்லூரிகளில் 6 மாதம் சிற்ப சாஸ்திர பயிற்சி அளித்தோம். எங்கள் இந்த தொழில்நுட்பத்தை கையில் எடுத்ததற்கு காரணமே இதுவரை யாரும் பார்த்திடாத சிலையின் மறுபக்கத்தையும் அதன் கலை நயத்தையும் கண்முன்னே நிறுத்துவதற்கு தான். முக்கியமாக ஒரே வடிவத்திலான சிலையை வெவ்வேறு நிலைகளில் அதாவது பிளாஸ்டிக், ஃபைபர், கோல்ட், ப்ரோன்ஸ், காப்பர் என வெவ்வேறு தரங்களிலும் செய்து வருகிறோம்.
1 இன்ச் முதல் 1 அடி வரை செய்து வருகிறோம். ஒரு சிலை உருவாக அதிகபட்சம் ஒரு வாரம் ஆகும். எங்களுக்கென்று தனி இணையதள பக்கம் இருக்கிறது. அதன் மூலம் மக்கள் பார்த்து ஆர்டர் செய்வார்கள். அதோடு மட்டுமல்லாமல் கலை பண்பாட்டு துறை, சுற்றுலாத்துறை, என அரசின் பல்வேறு துறைகளுக்கும் பாரம்பரிய சின்னங்கள் சிலைகள், சுற்றுலா இடங்களை முப்பரிமாண சிலைகளாக செய்து கொடுத்து வருகிறோம். ஒரு பொருளையோ, மனித உருவத்தையோ, வாடிக்கையாளர்கள் எதை நினைக்கிறார்களோ அதை அப்படியே உருவாக்கி வருகிறோம். இந்தியா மட்டுமல்லாமல் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கான வேலைகளையும் செய்து வருகிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.