தஞ்சாவூர்: தஞ்சை சேர்ந்த 8ம் வகுப்பு மாணவர் கிருத்திக் கராத்தே மற்றும் சிலம்பத்தில் மாவட்டம், மண்டலம், மாநிலம், தேசிய அளவு மற்றும் சர்வதேச அளவில் தங்கப்பதக்கங்கள் மற்றும் வெள்ளி, வெண்கலப்பதக்கங்களை குவித்து வருகிறார்.


பொறுமையாக இருப்பதால் பூமி ஆளலாம் என்று திருவள்ளுவர் பொறுத்தார் பூமி ஆழ்வார் என்று கூறுகிறார். பொறுமையே மக்களையும் மக்களையும் வேறுபடுத்துவதாக வள்ளுவர் கூறுகிறார். கலையாகட்டும், கல்வி ஆகட்டும் அதனை கற்பதற்கும் சரி, மாணவர்கள் மனதில் ஏற்றி அவர்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்துவதற்கும் சரி நிச்சயமாக குறிப்பிட்ட சில காலம் பிடிக்கும்.


அதுபோல் பொறுமையை தனக்கு பிடித்தமான ஒன்றாக வைத்து கலையை கற்று படிப்படியாக இப்போது சிகரம் தொட்டு சாதனையாளராக மாறி உள்ள மாணவர் பற்றி இந்த வாரத்தில் பார்க்கலாம். தற்காப்பு கலைகளை கற்றுக் கொள்ள சேரும் போது 4 வயது இருக்கும்.


அப்போது பல மாதங்கள் இவர் வகுப்பிற்கு வந்து அமைதியாகவே இருந்துள்ளார். இந்த மாணவர் ஆசான் கற்றுத்தந்ததை மனதில் ஏற்றி கற்றுக்கொள்ள ஆரம்பிப்பதற்கு சில மாதங்கள் எடுத்துக் கொண்டன. தங்கள் மகனின் விருப்பத்திற்காக பெற்றோரும் காத்திருந்தனர் என்பதுதான் குறிப்பிடத்தக்கது. அந்த பொறுமை இப்போது வெற்றி என்ற அறுவடையில் பதக்கங்களையும், சான்றிதழ்களையும், கோப்பைகளையும் பெற்று தந்துள்ளது. மாணவனின் பொறுமைக்கும், பெற்றோரின் காத்திருப்புக்கும் கிடைத்த வெற்றி சாதாரண வெற்றியல்ல. இமாலய வெற்றி என்றுதான் சொல்ல வேண்டும்.




தஞ்சையை சேர்ந்த மாணவன் கிருத்திக். தனியார் பள்ளியில் எட்டாம் வகுப்பு மாணவன். தந்தை சக்தி வெங்கடேஷ். தாயார் சித்ரா. தந்தை கேட்டரிங் வேலை செய்து வருகிறார் .தாயார் சித்ரா பேன்சி ஸ்டோர் நடத்தி வருகிறார். மாணவன் கிருத்திக் தற்காப்பு கலை கற்க ஆர்வத்தோடு இருந்ததால் அவரை வின்னர் மல்டி மியூரல் அகாடமியில் சேர்ந்துள்ளனர் பெற்றோர். ஆரம்பத்தில் வகுப்பிற்கு வந்து எதுவும் செய்யாமல் ஆசான் கராத்தே மாஸ்டர் ராஜேஷ்கண்ணா கற்று தந்ததை கவனித்து கொண்டே இருந்த மாணவர் தான் இப்போது எந்த போட்டியில் கலந்து கொண்டாலும் முதல் பரிசுடன்தான் வருவார் என்பதை தன்னுடைய அடையாளமாக மாற்றிக் கொண்டுள்ளார்.


2015ம் ஆண்டு கராத்தே போட்டியில் மாவட்ட போட்டிகளில் 7 தங்கம், வெள்ளி பதக்கங்களை மாணவர் கிருத்திக் பெற்றுள்ளார். மேலும் மாநில மற்றும் தேசியப் போட்டிகளில் 13 தங்கம், 6 வெள்ளி பதக்கம் மற்றும் 10 வெண்கல பதக்கங்களை பெற்றுள்ளார். சர்வதேச போட்டிகளில் இதுவரை ஏழு தங்கப்பதக்கங்களை பெற்றுள்ளார். 2016 ஆம் ஆண்டு முதல் கடந்தாண்டு வரை நடைபெற்ற பள்ளி ஆண்டு விழாக்களின் போது அவுட் ஸ்டாண்டிங் பெர்ஃபார்மன்ஸ் அவார்ட் ஃபார் கராத்தே அண்ட் சிலம்பம் என்ற கேட்டகிரியில் இதுவரை இவர் மட்டுமே பரிசினை பெற்றுள்ளார் என்பதும் குறிப்பிட்டத்தக்கது.


கராத்தே மட்டுமில்லாமல் சிலம்பத்திலும் இவர் இதுவரை 2017 ஆம் ஆண்டு முதல் நடைபெற்ற சிலம்பம் தமிழ்நாடு சங்கம் சார்பாக தஞ்சை மாவட்டத்தின் மாநில வெற்றியாளராக கலந்து கொண்டு 6 முறை முதல் பரிசை பெற்றுள்ளார்


தற்காப்பு கலை மற்றும் இல்லாமல் குண்டு எறிதல், நீளம் தாண்டுதல், கால்பந்து போன்ற போட்டிகளில் பள்ளிகள் அளவில் பலமுறை பரிசினை பெற்றுள்ளார்.


மாணவர் கிருத்திக் வெற்றிகள் குறித்து அவரது பயிற்சியாளர் மற்றும் ஆசான் ராஜேஷ் கண்ணா கூறுகையில், இங்கு வரும் மாணவர்கள் அனைவரும் கலைகளை கற்றுக் கொள்வதோடு மட்டுமில்லாமல் ஒழுக்கங்களிலும், பழக்கவழக்கங்களிலும் சிறந்து விளங்க வேண்டும் என்பதுதான் முக்கியமான ஒன்றாகும். கற்றுக் கொள்ள வரும் மாணவர்கள் பயிற்சியாளர்களாக மாறி அவர்களின் தகுதியையும் திறமையையும் உயர்த்திக் கொள்ள வேண்டும் என்றுதான் கற்றுத் தருகிறேன்.


ஒவ்வொரு மாணவனைகளும் தனித்தனியாக கண்காணித்து அவர்களின் திறமைகளை வெளிக் கொண்டு வர வேண்டும். அந்த வகையில் பொறுமையாக தற்காப்பு கலைகளை கற்றுக் கொண்டாலும் சாதனையாளராக இன்று மாறி பல வெற்றிகளை குவித்து வரும் மாணவர் கிருத்திக் மற்ற மாணவர்களுக்கு சிறந்த உதாரணம். எப்போதுமே தளர்ந்து விடக்கூடாது. வாழ்க்கையில் எப்போதுமே இன்னொரு வாய்ப்பு என்பது நிச்சயம் இருக்கும். அந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தினால் வெற்றி நிச்சயம்தான். இவ்வாறு அவர் தெரிவித்தார்.