தஞ்சாவூர்: வேர்கள் என்ற ஒன்று தான் வளரும் செடிக்கு ஆதாரம். தன்னம்பிக்கை என்ற ஒன்று தான் நம் வாழ்க்கையின் உயர்வுக்கு மூலாதாரம். நடக்கும் பாதைகளை முதலில் சீராக்கி விட்டால் போதும் அதன்பின் சாதனை என்ற ஒன்று மிகவும் சாத்தியமானதே. இதை அறிந்து நாம் நடை போடும் பாதையை தீர்மானித்தாலே போதுமானது.


அதுபோல் தஞ்சை மாவட்டம் வல்லத்தில் செயல்பட்டு வரும் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவி தனது கனவுகளை நனவாக்கி வருகிறார். இந்த அரசு பள்ளியில் படிப்பையும் தாண்டி மாணவிகளின் தனித்திறமையை கண்டறிந்து அந்த திறமைக்கான பயிற்சியை கொடுத்து போட்டிகளில் பலவற்றில் பங்கேற்க செய்து மாணவிகளின் தனித்திறமையை தொடர்ந்து ஊக்குவித்து வருகின்றனர் ஆசிரியைகள் என்றால் மிகையில்லை.


இப்பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வரும் மாணவி கனிமொழி,  பாட்டு பாடுவதில் அதிக ஆர்வம். தன் கனவுகளை நினைவாக்கி இன்று பரிசுகளை வென்று சாதித்து வருகிறார். மாணவி கனிமொழி ஒன்பதாம் வகுப்பு படித்து வரும் போதே பாடல்களை இனிமையாக பாடி வந்துள்ளனர். இதை கண்டறிந்த பள்ளி ஆசிரியைகள் பள்ளியில் நடக்கும் விழாக்களில் பாடல்களைப் பாட அறிவுரை வழங்கி அவரது தனித்திறமையை வெளிக் கொண்டு வந்தனர்.
 
இப்பள்ளியில் முதுகலை தமிழ் ஆசிரியையாக பணியாற்றி வரும் ஆசிரியை செயலட்சுமி கவிதை எழுதுவதில் திறமையானவர். கல்வி, சுற்றுச்சூழல், பெண் குழந்தைகள் பாதுகாப்பு, விவசாயம், தமிழ் பாரம்பரிய வரலாறு என பல தலைப்புகளில் விழிப்புணர்வு கவிதைகளை எழுதி இப்பள்ளியில் நன்கு பாடும் மாணவிகளை தேர்வு செய்து சினிமா பாடல் மெட்டில் இந்த விழிப்புணர்வு கவிதைகளை பாட பயிற்சி அளித்து மாணவிகளை  பல போட்டிகளில் பங்கேற்ற பரிசுகளை பெற செய்துள்ளார்.


அதேபோல் மாணவி கனிமொழியின் திறமையை அறிந்து பல்வேறு வகையான விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமான கருத்துக்களை கொண்ட அழகான கவிதைகளை மாணவியின் இனிமையான குரலில் பாடச் செய்துள்ளார். பள்ளி விழாக்களிலும், புத்தகத் திருவிழா போன்ற அரசு விழாக்களிலும் ஆசிரியையின் விழிப்புணர்வு கவிதைகளை அழகாக பாடி பல பரிசை வென்றுள்ளார் மாணவி கனிமொழி.


இதில் திறந்திருக்கு திறந்திருக்கு அரசு பள்ளியே போன்ற பல பாடல்கள் பலரது கவனத்தையும் ஈர்த்து பாராட்டுக்களை பெற்றுள்ளது. இதுகுறித்து மாணவி கனிமொழி கூறுகையில், “எனக்கு சிறுவயதில் இருந்தே பாட்டு பாடுவதில் ரொம்ப ஆர்வம். வீட்டில்  சினிமா பாடல்களை அடிக்கடி பாடிட்டு இருப்பேன். ஒன்பதாம் வகுப்பு படிக்கும் போது தான் நான் நல்லா பாடுறேன் அப்படின்னு ஆசிரியைகள் என்னை பாராட்டினாங்க. அப்பதான் எங்க "தமிழ் அம்மா" (ஆசிரியை செயலட்சுமி) அவங்க எழுதின கவிதைகளை எனக்கு கொடுத்து பாட சொன்னாங்க அது எனக்கு மிகவும் ஊக்கம் கொடுத்தது.  மகிழ்ச்சியாகவும், மிகுந்த, ஆர்வத்தையும் ஏற்படுத்திச்சு.


பல இடங்களில் பாடி பல பரிசுகளையும் பெற்று இருக்கேன்.  எனக்கு பாடுவது எவ்வளவு பிடிக்குமோ அதேபோல் என்னுடைய இலக்கு மருத்துவராக வேண்டும் என்பதுதான் இரண்டிலும் சாதிக்க வேண்டும் என்று விரும்புகிறேன்” என்றார்.


பள்ளி தலைமை ஆசிரியை சிவசங்கரி கூறுகையில், “பள்ளியில் பயிலும் மாணவிகள் தனித்திறமைகளில் சிறந்து விளங்குகின்றனர். பல போட்டிகளில் வெற்றிகளை குவித்து உள்ளனர். அவர்களை மேலும் ஊக்கப்படுத்தி மேன்மேலும் வெற்றிகளை குவிக்க நாங்கள் உறுதுணையாக இருப்போம். எங்கள் மாணவிகளின் வெற்றி பள்ளிக்கு பெருமையை சேர்த்துள்ளது” என்றார்.


ஆசிரியை செய லட்சுமி கூறுகையில், ”எங்க பள்ளியில பயிலும் மாணவிகளின் படிப்பையும் தாண்டி தனித் திறமைகளையும் ஊக்கப்படுத்திக்கிட்டு இருக்கோம். உதாரணமா எங்க மாணவிகள் பல தனித்திறமைகள் கொண்டு சிறப்பிடம் பெற்று கொண்டு இருக்காங்க. கரகம் ஆடுவாங்க, பாட்டு பாடுவாங்க, நடனம் ஆடுவாங்க,  தப்பாட்டம் ஆடுவாங்க இதெல்லாம் அவங்களே விரும்பி செய்றாங்க. அதனால் ஆசிரியைகள் நாங்கள் மென்மேலும் ஊக்கப்படுத்திக்கிட்டு இருக்கோம். அதே போல் கனிமொழிக்கு அருமையான குரல்வளம். நான் எழுதிய கவிதைகளை கொடுத்து பாட சொன்னேன். மாணவி பாடிய பாடல் சமூக வலைதளங்களில் வெகுவாக பாராட்டுக்களை பெற்றது. மாணவியின் திறமை மேலும் உயரும் என்ற நம்பிக்கை உள்ளது” என்றார்.