தஞ்சாவூர்: விவசாயத் தொழிலாளர்கள் பற்றாக்குறையால் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் சம்பா சாகுபடிக்கு இயந்திரம் மூலம் விவசாயிகள் நடவு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழகத்தின் நெற்களஞ்சியமாக ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டம் விளங்கி வருகிறது. இங்கு குறுவை, சம்பா, தாளடி என 3 போகம் நெல் சாகுபடி நடைபெறும். கோடையிலும் நெல் சாகுபடியும் செய்யப்படுகிறது. மேலும் மக்காச்சோளம், கரும்பு, எள், பயறு போன்றவையும் சாகுபடி செய்யப்படுகிறது.
இதற்காக மேட்டூர் அணை ஜூன் மாதம் 12-ந்தேதி திறக்கப்படும். குறிப்பிட்ட தேதியில் இருந்து அணை திறக்கப்பட்டால் குறுவை பரப்பளவு அதிகரிக்கும். தாமதமாக திறந்தால் குறுவை பரப்பளவு குறைந்து சம்பா, தாளடி சாகுபடி பரப்பளவு அதிகரிக்கும். இந்த ஆண்டு மேட்டூர் அணை வழக்கம் போல் ஜூன் 12ம் தேதி திறக்கப்பட்டது. இதையடுத்து குறுவை சாகுபடி பணிகளில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டனர்.
இதற்கிடையில் மழை எதிர்பார்த்த அளவு பெய்யாத நிலையில் மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த வாரத்தில் சில நாட்கள் தஞ்சை மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. ஒரு சில பகுதிகளில் கனமழை பெய்தது. இந்த மழை குறுவை சாகுபடி பயிர்களுக்கு உதவும் என்று விவசாயிகள் தெரிவித்தனர். தற்போது குறுவை அறுவடை பல பகுதிகளில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
மேலும், சம்பா சாகுபடியிலும் விவசாயிகள் தீவிரம் காட்டி வருகின்றனர். அந்த வகையில் தஞ்சை மாவட்டம் கும்பகோணம் சுற்றுவட்டார பகுதியில் சம்பா நடவு பணிகள் தீவிரமடைந்துள்ளன. இதற்காக கடந்த சில தினங்களுக்கு முன்பு நாற்றங்கால் அமைத்து விதை தெளிப்பு பணிகளை விவசாயிகள் மேற்கொண்டிருந்தனர்.
தற்போது விவசாய பணிகளுக்கு போதிய அளவு ஆட்கள் கிடைப்பதில் வெகுவாக தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால் விவசாயப்பணிகள் பாதிக்கப்படுகிறது. விவசாயத் தொழிலாளர்கள் பற்றாக்குறையால் ஏராளமான விவசாயிகள் பாய் நாற்றங்கால் அமைத்து இயந்திரங்கள் மூலம் நடவு பணிகளை மேற்கொண்டுள்ளனர்.
இதுகுறித்து விவசாயிகள் தரப்பில் கூறுகையில், 100 நாள் வேலை போன்ற அரசின் வேலைவாய்ப்பு திட்டத்தால் விவசாய பணிகளை மேற்கொள்ள யாரும் முன் வருவதில்லை. பிற மாவட்டங்களில் இருந்து விவசாயத் தொழிலாளர்களை அழைத்து வந்து விவசாய பணிகளை மேற்கொள்ள செய்வதால் அதிகளவு செலவு ஆகிறது. அதனால் தற்போது விவசாயிகள் இயந்திர நடவில் அதிகம் ஆர்வம் காட்டுகின்றனர். விவசாயத் தொழிலாளர்கள் விவசாயமில்லாத மாத சம்பள வேலைகளுக்கு சென்று விடுகின்றனர்.
இதனால் விவசாய பணிகளுக்கு கூலி ஆட்கள் கிடைப்பது தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. கூலி ஆட்களை கொண்டு நடவு உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளும் போது நேர விரையமும், கூடுதல் செலவும் ஏற்படுகிறது. இதனால் மாற்று ஏற்பாடாக இயந்திரங்களை கொண்டு விவசாய பணிகளை மேற்கொள்ள வேண்டிய சூழல் நிலவுகிறது. இயந்திரங்கள் மூலம் நடவு பணிகளை செய்யும் போது நேரம் மிச்சமாவதுடன் குறைந்த எண்ணிக்கையிலான ஆட்களை கொண்டு நடவு பணிகளை முடிக்க முடிகிறது. எனவே அரசு மானிய விலையில் அதிக எண்ணிக்கையிலான நடவு இயந்திரங்கள் மற்றும் விவசாய கருவிகளை விவசாயிகளுக்கு வழங்கி ஊக்குவிக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்தனர்.
மண்வளத்தை பெருக்க மண்புழு உரம் தயாரிப்பது, பயன்படுத்துவது விவசாயிகளின் கடமை