தஞ்சாவூர்: தஞ்சையின் பெருமைகளில் முக்கியமானது அரண்மனையில் அமைந்துள்ள சரஸ்வதி மகால் நூலகம். இந்த நூலகத்தில் புதிய நூல்கள் வெளியிடுவது குறைந்துள்ளதால் வரலாற்று ஆர்வலர்கள் மற்றும் வாசகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு பணியாளர்கள் பற்றாக்குறையும் ஒரு காரணம் என்று சரஸ்வதி மகால் நூலகத்தினர் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.


உலகப் புகழ்பெற்ற நூலகம் சரஸ்வதி மகால்


ஆசியாவின் மிகப் பழமையான நூலகங்களில் சரஸ்வதி மகால் நூலகம் மிக முக்கியமான ஒன்றாகும். தஞ்சாவூரை ஆண்ட நாயக்க மன்னர்கள் ஆட்சிக் காலத்தில் உருவாக்கப்பட்டதுதான் இந்த நூலகம். அதன் பின்னர் வந்த மராட்டியர் ஆட்சியில் மேம்படுத்தப்பட்ட இந்த நூலகத்தின் வளர்ச்சியில் மன்னர் இரண்டாம் சரபோஜியின் பங்கு அதிகம் என்பதும் குறிப்பிடத்தக்கது.


உலகப் புகழ்பெற்ற இந்த நூலகத்தில் சோழர்கள், நாயக்கர்கள், மராட்டியர்களின் ஆட்சிக் காலத்தைச் சார்ந்த தமிழ், தெலுங்கு, மராத்தி, சமஸ்கிருதம் போன்ற மொழிகளில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான ஓலைச்சுவடிகள், காகிதச் சுவடிகள், சுமார் 3 லட்சம் மோடி ஆவணங்கள் (மராத்தி மொழி சுருக்கெழுத்து) ஆகியவை உள்ளன. இதில் பழங்கால தமிழர்களின் பண்பாடு பற்றிய தகவல்கள் உள்ளதுடன், அறிவியல், ஜோதிடம், சித்த மருத்துவக் குறிப்புகளும் இடம்பெற்றுள்ளன.


650 நூல்கள் வெளியிட்டுள்ள நூலகம்


பள்ளிக் கல்வித் துறையின் கீழ் இயங்கும் இந்நூலகத்தில் இதுவரை ஏறத்தாழ 650 நூல்கள் வெளியிடப்பட்டுள்ளன. தமிழ்ச் சுவடிகள் 7,700-க்கும் அதிகமான தலைப்புகளில் இருந்தாலும், இதுவரை ஏறக்குறைய 300 நூல்கள் மட்டுமே பதிப்பிக்கப்பட்டுள்ளன. இன்னும் அச்சில் ஏறாத அரிய தகவல்கள், அற்புதமான மருத்துவக் குறிப்புகள், வானியல் தகவல்கள் அதிகளவில் உள்ளன. ஏராளமாக இருக்கின்றன. இதேபோல, சுமார் 250 தலைப்புகளில் மறு பதிப்பு நூல்களின் தேவை அதிகமாக இருந்தாலும், அதுவும் நிறைவு செய்யும் விதமாக இல்லை.


புதிய நூல்கள் வெளிடும் எண்ணிக்கை குறைகிறது


இதற்கிடையில் இந்நூலகத்தில் பதிக்கப்படும் புதிய நூல்களின் எண்ணிக்கையும் ஒவ்வொரு ஆண்டும் குறைந்து கொண்டே வருகிறது. இது தொடர்பாக சரஸ்வதி மகால் நூலக நிர்வாகத்திடம் தஞ்சாவூரைச் சேர்ந்த வக்கீலும், சமூக மற்றும் வரலாற்று ஆர்வலருமான வெ. ஜீவகுமார் தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் அண்மையில் கேட்ட தகவலுக்கு கிடைத்த பதிலில் 2013, 2014 ஆம் ஆண்டில் தலா 8 நூல்களும், 2015-ல் 9 நூல்களும், 2016-ல் 10 நூல்களும், 2017-ல் 9 நூல்களும், 2018-ல் 8 நூல்களும், 2019-ல் 2 நூல்களும், 2020-ல் ஒரு நூலும், 2021-ல் 7 நூல்களும், 2022-ல் 11 நூல்களும், 2023-ல் 5 நூல்களும் என மொத்தம் 78 நூல்கள் வெளியிடப்பட்டுள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.


பணியாளர்கள் எண்ணிக்கை குறைந்து வருகிறது


மேலும், இந்நூலகத்தில் பணியிடங்களின் எண்ணிக்கை 46 ஆக உள்ள நிலையில் தற்போது 14 பேர் பணிபுரிந்து வருவதாகவும், 32 பணியிடங்கள் காலியாக உள்ளதாகவும் அப்பதிலில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறு புதிய நூல்கள் வெளியிடுவது குறைவதற்கு காரணம் பணியாளர்கள் குறைவாக உள்ளது காரணம் என்று தெரிவிக்கப்படுகிறது.  ஆண்டுதோறும் செப்டம்பர் 24 ஆம் தேதி நடைபெறும் மன்னர் சரபோஜி பிறந்த நாள் விழாவின்போது ஏறத்தாழ 25 புதிய நூல்களும், தேவையான அளவுக்கு மறு பதிப்பு நூல்களும் வெளியிடப்பட்டு வந்தன. ஆட்கள் பற்றாக்குறை காரணமாக ஒவ்வொரு ஆண்டும் புதிய நூல்கள், மறு பதிப்பு நூல்கள் வெளியீடு மிகவும் குறைந்து வருகிறது. நடப்பாண்டு தலா 6 புதிய நூல்களும், மறு பதிப்பு நூல்களும் மட்டுமே வெளியிடப்பட்டுள்ளன. இந்நிலையில், 2025-ம் ஆண்டில் 2 பேரும், 2026 ஆம் ஆண்டில் 6 பேரும் ஓய்வு பெறவுள்ளனர். இந்த நிலைமை தொடர்ந்தால் இந்நூலகம் மேலும் முடங்கும் நிலை ஏற்படும் என்ற அச்சம் நிலவுகிறது.


பொக்கிஷமாக நூலகத்தை கவனிப்பார்களா?


இதுகுறித்து வக்கீல் ஜீவகுமார் கூறுகையில்,  இந்த நூலகம் வெளிநாடுகளில் இருந்தால், மிகப் பெரிய பொக்கிஷமாக போற்றப்படும். ஆனால் இங்கு கவனிப்பாரற்றுக் கிடக்கிறது. இந்நூலகத்திலுள்ள ஓலைச் சுவடிகளை நூல்களாகப் பதிப்பித்தால் அறிவியல், மருத்துவம் உள்ளிட்ட அரிய தகவல்கள் வெளியில் தெரிய வரும். இப்பெருமை மிக்க இந்நூலகத்தில் இயக்குநர் பதவி 32 ஆண்டுகளாக காலியாக உள்ளது. இப்பதவியை 32 ஆண்டுகளாக மாவட்ட கலெக்டர் கூடுதல் பொறுப்பாக கவனித்து வருகிறார். மாவட்ட நிர்வாகத்தில் உள்ள பணிச் சுமை காரணமாக இந்த நூலகத்தை மாவட்ட கலெக்டர் முழுமையாகக் கவனம் செலுத்த முடியவில்லை. இதேபோல, நிர்வாக அலுவலர் பணியிடங்களில் முதன்மைக் கல்வி அலுவலர் நிலையில் நியமனம் செய்யப்பட்டாலும், அவர்களுக்கு இந்நூலகத்தின் தனித்துவம் தெரிவதில்லை.


ஊழியர்களின் எண்ணிக்கையும் சொற்ப அளவில் உள்ளதால், முழுமையாக வேலை பார்க்க முடியாமல் தவிக்கின்றனர். இந்நூலகத்தின் வளர்ச்சியில் ஆர்வமுள்ள ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அலுவலரையோ அல்லது ஓய்வு பெற்ற துணைவேந்தர் போன்ற கல்வியாளரையோ முழு நேர இயக்குநர் பதவியில் நியமிக்க வேண்டும். இந்நூலகத்துக்கு மத்திய, மாநில அரசுகளும் போதிய நிதியுதவி அளித்தால் மட்டுமே இந்நூலகத்தை மீட்டெடுக்க முடியும். இவ்வாறு அவர் கூறினார்.