தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரிய கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய நேற்றிரவு வந்த பிரபல காமெடி நடிகர் யோகிபாபுவுடன் பொதுமக்கள் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.
உலகத் தமிழர்களால் பெருமிதத்துடன் அழைக்கப்படும் பெரியகோயில்
உலக மக்கள் மத்தியில் வெகு பிரசித்தம். தஞ்சை தரணி மக்களாலும் உலக தமிழர்களாலும் பெருமிதத்துடன் அழைக்கப்படும் பெரிய கோயில் என்கிற பிரகதீஸ்வரர் கோவில் கி.பி 1006ம் ஆண்டில் மாமன்னன் ராஜராஜசோழனின் ஆட்சியில் கட்டப்பட்டது. இன்றளவும் தமிழரின் கலை, அறிவியல் மற்றும் கட்டடக்கலைக்கு சான்றாக விண்ணுயர்ந்து யுனெஸ்கோவின் பாரம்பரிய கலை மற்றும் பண்பாட்டு சின்னமாகவும் அரிய பொக்கிஷமாகவும் போற்றிப் பாதுகாக்கப்பட்டு வருகிறது.
இக்கோயில் உலக நாட்டவர்களையும் கவர்ந்திழுக்க முக்கிய காரணம் கட்டுமானம்தான் என்றால் மிகையில்லை. பெரியகோவிலை ஆராய்ச்சி செய்யும் வெளிநாட்டு ஆராய்ச்சியாளர்கள் இன்றைய விஞ்ஞான வளர்ச்சியின் துணையுடன் அக்குவேறு ஆணிவேராக ஆராய்ச்சி செய்தாலும் கட்டுமான ரகசியம் இன்னும் பிடிபடாமல்தான் உள்ளனர். கரிகால் சோழனால் கட்டப்பட்ட கல்லணையைப் பற்றிய முழுமையான ரகசியம் எப்படி பிடிபடவில்லையோ, அதே போல் தான் பெரிய கோவிலின் கட்டுமான ரகசியமும் இன்னமும் யாருக்கும் விளங்கவில்லை என்பது தான் உண்மை.
1000 ஆண்டுகளுக்கு முன்பே கிரானைட்டை கொண்டு கட்டப்பட்டது
இக்கோவில் கட்டப்பட்ட விதமும், அதற்கு பயன்படுத்தப்பட்ட தூய்மையான கிரானைட் கற்களும் தான். கிரானைட் கற்கள் 20ம் நூற்றாண்டில் தான் அறிமுகப்படுத்தப்பட்டது என்ற நினைப்பை முறியடித்து சுமார் 1000 ஆண்டுகளுக்கு முன்பே கிரானைட் கற்கள் கொண்டு இக்கோவில் பயன்படுத்தப்பட்டுள்ளது ஆச்சரியம் தானே.
கருவறையின் மேலுள்ள விமானம், அதனைத் தாங்கும் சதுர வடிவிலான கற்கள், அதோடு சுற்றிலும் உள்ள 8 லிங்கங்கள் என இந்த மூன்றும் தான் ஒட்டு மொத்த கோவிலையும் தாங்கும் அஸ்திவாரமாக இருக்கின்றது என்பது தான் ஆச்சரியத்தின் உச்சமாகும். பொதுவாக அஸ்திவாரம் என்பது ஒரு கட்டிடத்தின் பாரத்தை தாங்கும் ஆதார சக்தியாகும். 216 அடி உயரத்துடனும், முழுக்க முழுக்க அதிக எடைகொண்ட கிரானைட் கற்களைக்கொண்டு கட்டப்பட்ட பெரிய கோவிலுக்கு எந்த அளவுக்கு அஸ்திவாரம் அமைத்திருக்க வேண்டும். அந்தளவிற்கு உலக பெருமை வாய்ந்தது பெரிய கோயில்.
பெரிய கோயிலில் சுவாமி தரிசனம் செய்த நடிகர் யோகிபாபு
இக்கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய நேற்று இரவு யோகி பாபு வந்தார். அவருடன் தஞ்சையின் பிரபல தொழிலதிபரும், களவாணி 2ல் நடித்து பிரபலமான நடிகருமான துரை.சுதாகரும் உடன் வந்தார். புதிய திரைப்பட படப்பிடிப்புக்காக வந்த நடிகர் யோகி பாபு பெரிய கோயுலுக்கு திடீரென நேற்று இரவு வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் கோயிலை இருவரும் வலம் வந்தனர். அப்போது கோயிலில் இருந்த மக்கள் யோகி பாபுவை பார்த்தவுடன் மகிழ்ச்சி குரல் எழுப்பினர். மிகவும் எளிமையாக மக்களுடன் யோகிபாபுவும், நடிகர் துரை. சுதாகரும் இயல்பாக பேசியபடி வந்தனர். தொடர்ந்து பொதுமக்கள் இருவருடனும் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
கோலிவுட்டின் முக்கிய நடிகராக மாறிய யோகிபாபு
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான லொள்ளு சபா ஒரு நடிகராக தனது திரைப்பயணத்தை தொடங்கிய யோகிபாபு, இயக்குனர் அமீர் நடித்த யோகி திரைப்படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் நடித்தார். இந்த படத்தில் இருந்துதான் தனது பெயரை யோகி பாபு என மாற்றிக்கொண்டார். பல போராட்டங்களுக்கு பின்னர் பையா திரைப்படத்தில் மும்பை ரௌடிகளில் ஒருவராகவும், இயக்குனர் சுந்தர் சி யின் கலகலப்பு திரைப்படத்தில் ஒரு சிறிய வேடத்திலும், வேலாயுதம், அட்டகத்தி, சூது கவ்வும், பட்டத்து யானை என பல தமிழ் படங்களில் பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்தார்.
2014 ஆம் ஆண்டு வெளியான மான் கராத்தே திரைப்படத்தில் இவர் ஏற்று நடித்துள்ள "வௌவால்" கதாபாத்திரம் சினிமா ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இப்படத்தினை தொடர்ந்து இவர் நடித்த அரண்மனை, ஜெய் ஹிந்த் 2 போன்ற திரைப்படங்கள் இவருக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்தது. இந்தி சினிமாவிலும் நடித்துள்ள யோகி பாபு கதையின் நாயகனாகவும் பல படங்களில் நடித்துள்ளார். தற்போது தமிழ் சினிமா உலகில் தவிர்க்க முடியாத முக்கிய அங்கமாக மாறிவிட்டார் யோகி பாபு.
களவாணி-2ல் பிரபலமான நடிகர் துரை.சுதாகர்
இவருடன் வந்த தஞ்சையின் பிரபல தொழில்அதிபரும், நடிகருமான துரை. சுதாகரும் தஞ்சை மக்களுக்கு வெகு பரிட்சயம் ஆனவர்தான். இவரும் தற்போது கோலிவுட்டில் வலுவான கதாபாத்திரங்களில் நடிக்க தொடங்கி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.