தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் மல்லிப்பட்டினத்தில் பள்ளியில் கொல்லப்பட்ட ஆசிரியை குடும்பத்திற்கு முதல்வர் அறிவித்த ரூ.5 லட்சம் நிவாரணத் தொகைக்கான காசோலையை ஆசிரியையின் குடும்பத்தினரிடம் அமைச்சர் கோவி.செழியன் வழங்கினார்.


தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே மல்லிப்பட்டினம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பணிபுரிந்து வந்த பள்ளி மேலாண்மை குழு ஆசிரியை ரமணி என்பவர் தனது காதலனை திருமணம் செய்ய மறுத்ததால், காதலன் மதன்குமாரால் புதன்கிழமை கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டார். 


அவரது உடல் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு சொந்த ஊரான மல்லிப்பட்டினம் அருகே சின்னமனை கிராமத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் நீண்ட நேரம் காத்திருந்து பிரேத பரிசோதனை முடிந்த பின் ஆசிரியை  உடலுடன் சின்னமனை சென்றது குறிப்பிடத்தக்கது. 


பின்னர் அங்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன், தஞ்சாவூர் எம்.பி முரசொலி, எம்எல்ஏக்கள் நா.அசோக்குமார் (பேராவூரணி), கா.அண்ணாதுரை (பட்டுக்கோட்டை) ஆகியோர் ஆசிரியை வீட்டில் அவரது உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். அதனை தொடர்ந்து மல்லிப்பட்டினம் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர்களை சந்தித்து ஆறுதல் கூறினர். பின்னர் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நிருபர்களிடம் கூறியதாவது:


இந்த நாள் வேதனைக்குரிய நாளாக அமைந்து விட்டது. ஆசிரியையின் சொந்த பிரச்சனையாக இருந்தாலும், அந்த இளைஞர் பள்ளிக்குள் வந்து இது போன்ற செயலில் ஈடுபட்டதை ஏற்றுக்கொள்ள முடியாது. பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக நான் ஒரு வேண்டுக்கோள் வைக்கிறேன். இது போன்று காட்டுமிரண்டி தனமாக நடந்துக் கொள்ளுவர்களுக்காக வக்கீல்கள் யாரும் வாதாட வராதீர்கள். இவருக்கு கொடுக்கப்படும் தண்டனையானது ஒட்டுமொத்தமாக எல்லோருக்கும் தாக்கத்தை ஏற்படுத்த கூடிய வகையில், நீதிபதிகள் தண்டனை வழங்க வேண்டும்.    


மீண்டும் பள்ளிக்கு வரும் போது, மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் அச்ச உணர்வு இருக்க கூடாது என்பதற்காக பள்ளிக்கு ஒருவாரம் விடுமுறை விட உத்தரவிடப்பட்டுள்ளது. வரும் திங்கள்கிழமை மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் ஒரு பொதுவான இடத்தில் வைத்து கவுன்சிலிங் வழங்கப்பட உள்ளது. பள்ளி வளாகத்தில் சி.சி.டி.வி.,கேமரா பொருத்த வேண்டும் என கூறியதின் அடிப்படையில், கேமரா பொருத்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அரசு பணியாளர்களுக்கான பாதுகாப்பு சட்டத்தை வலுப்படுத்த, சட்டத்துறையில் பேசி நடவடிக்கை எடுக்கப்படும். ஆசிரியர்களுக்கு பணி பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என்று தெரிவித்தார்.


இதற்கிடையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொல்லப்பட்ட ஆசிரியை குடும்பத்தினருக்கு நிவாரணமாக ரூபாய் 5 லட்சம் அறிவித்தார். இந்நிலையில் இன்று வியாழக்கிழமை காலை பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் கொல்லப்பட்ட ஆசிரியை ரமணியின் தந்தை முத்து, தாயார் முத்துராணி ஆகியோரிடம் ரூ.5 லட்சத்திற்கான காசோலையை வழங்கினார்.


கொல்லப்பட்ட ஆசிரியை குடும்பத்தின் சார்பில், வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என அப்போது அமைச்சரிடம் மனு அளித்தனர். அப்போது தஞ்சாவூர் நாடாளுமன்ற உறுப்பினர் ச.முரசொலி, சட்டமன்ற உறுப்பினர்கள் பேராவூரணி நா.அசோக்குமார்,  பட்டுக்கோட்டை கா.அண்ணாதுரை, மாவட்ட வருவாய் அலுவலர் தெ.தியாகராஜன், வருவாய் கோட்டாட்சியர் ஜெயஸ்ரீ, பட்டுக்கோட்டை வட்டாட்சியர் சுகுமார் மற்றும் திமுக ஒன்றியச் செயலாளர்கள், நகரச்செயலாளர்கள், அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.