தஞ்சாவூர்: தஞ்சாவூரில் பாதாள சாக்கடை சீரமைப்பு பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் பணியாற்றிய தொழிலாளர் மண் சரிந்து உயிரிழந்த சம்பவத்தில் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம் நடத்தி வருவதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதற்கிடையில் இந்த சம்பவம் தொடர்பாக மாநகராட்சி செயற் பொறியாளர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
பாதாள சாக்கடை குழாய் அமைக்கும் பணி
தஞ்சாவூர் பூக்கார விளார் சாலையில் லாயம் பகுதியிலுள்ள ஜெகநாதன் நகரில் பாதாள சாக்கடையில் இருந்து கழிவு நீர் வெளியேறி அப்பகுதியில் பெரும் துர்நாற்றத்தை ஏற்படுத்தியது. இதுகுறித்து புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படாததால் அப்பகுதி மக்கள் சாலைமறியல் நடத்தினர்.
15 அடி ஆழ பள்ளம் தோண்டப்பட்டது
தொடர்ந்து இந்த பகுதியில் பாதாள சாக்கடை சீரமைப்பு பணிகள் தொடங்கப்பட்டது. இதில் பழைய குழாயை அகற்றிவிட்டு, புதிய குழாய் பதிக்கும் பணி 10 நாள்களாக நடந்தது. இதற்காக தோண்டப்பட்ட சுமார் 15 அடி ஆழ பள்ளத்தில் கடந்த திங்கள்கிழமை மாலை புதிய குழாய் பதிக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வந்தனர். குழி தோண்டிய மண் மேலேயே கொட்டப்பட்டு இருந்தது.
மண் சரிந்து விழுந்து 2 தொழிலாளர்கள் சிக்கினர்
இந்நிலையில் இப்பணியில் ஈடுபட்ட தஞ்சாவூர் அருகே மாரியம்மன்கோவில் பகுதி தேவபூமி நகரைச் சேர்ந்த மாரிமுத்து மகன் ஜெயநாராயணமூர்த்தி (29), புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக்கோட்டை அருகே வளம்பப்பட்டியைச் சேர்ந்த பெருமாள் மகன் தேவேந்திரன் (32) ஆகிய இருவர் மீதும் திடீரென மண் சரிந்து விழுந்தது.
தொழிலாளர் ஒருவர் பலியானார்
உடன் அக்கம்பக்கத்தினர் தஞ்சாவூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த தீயணைப்பு படைவீரர்கள் தேவேந்திரனை மீட்டு சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் ஜெயநாராயணமூர்த்தியை மீட்க பொக்லைன் இயந்திரங்கள் வரவழைக்கப்பட்டு மீட்பு பணி நடந்தது. தொடர்ந்து உயிரிழந்த நிலையில் ஜெயநாராயண மூர்த்தி மீட்கப்பட்டார். தற்போது தேவேந்திரன் தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
மாநகராட்சி செயற்பொறியாளர் மீது வழக்குப்பதிவு
இதுகுறித்து தெற்கு காவல் நிலையத்தில் ஜெயநாராயணமூர்த்தி மனைவி சுகன்யா அளித்த புகாரில், உரிய பாதுகாப்பு உபகரணங்கள் வழங்காத காரணத்தால் எனது கணவர் இறந்துவிட்டார். என் கணவர் இறப்புக்கு காரணமான மாநகராட்சி நிர்வாகத்தின் மீது சட்டப்படியான நடவடிக்கையும், என் குடும்பத்துக்கான நிவாரணமும், எனக்கு அரசு வேலையும் கிடைக்கச் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
இந்த புகாரின் பேரில் அஜாக்கிரதையாக செயல்பட்டதாகக் கூறி மாநகராட்சி செயற்பொறியாளர் சேர்மகனி மீது போலீசார் நேற்று வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்
இந்நிலையில், ஜெயநாராயணமூர்த்தியின் குடும்பத்துக்கு உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின்படி ரூ. 30 லட்சம் நிவாரணம் கோரி, உடலை வாங்க மறுத்து உறவினர்கள், தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆகியோர் மருத்துவக்கல்லூரி முதலாவது வாயில் முன் நேற்று மாலை முதல் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இவர்களிடம் தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் சண். ராமநாதன், கோட்டாட்சியர் செ. இலக்கியா, டவுன் டிஎஸ்பி., பி.என். ராஜா மற்றும் போலீசார் உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்படாததால், போராட்டம் இரவிலும் தொடர்ந்தது. பின்னர் இரவில் அனைவரும் கலைந்து சென்றனர். இருப்பினும் இன்று காலை முதல் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
முதல்வர் நிவாரணத் தொகை அறிவிப்பு
இதற்கிடையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், பாதாள சாக்கடை குழாய் பதிக்கும் பணியின் போது தொழிலாளர் மீது மண் சரிந்து இறந்த சம்பவம் குறித்து அறிந்து மிகுந்த வருத்தமும், வேதனையும் அடைந்தேன். ஜெயநாராயணமூர்த்தியின் குடும்பத்துக்கும், உறவினர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். விபத்தில் உயிரிழந்த ஜெயநாராயணமூர்த்தியின் குடும்பத்துக்கு ரூ. 3 லட்சமும், காயமடைந்த தேவேந்திரன் குடும்பத்துக்கு ரூ. 1 லட்சமும் முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன், இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.